விவேகானந்தா கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள், சோவின் சகோதரர் அம்பி என்ற ராஜகோபால் தலைமையில், கல்லுாரியின் பெயரிலேயே, 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' என்ற அமெச்சூர் நாடக குழுவை முறையாக துவங்கி, நாடகங்களை நடத்தத் துவங்கியிருந்தனர்.
சங்கருக்கு இந்த தகவல் மகிழ்ச்சியளித்தது. நண்பர்கள் ஆரம்பித்த குழு என்பதால், அதில் இணைந்து, தன் நடிப்புத் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம் என, நம்பினார். மீண்டும் அவர்களிடம் நட்பைப் புதுப்பித்துக் கொண்டார், சங்கர்.பெற்றோருக்கு தெரியாமல், சட்டப் படிப்போடு நாடகங்களில் நடிப்பது, அவரது திட்டம். ஆனால், நட்பு கிடைத்ததே தவிர, நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அரிதாகத்தான் அரிதாரம் பூசும் வாய்ப்பு வழங்கினர்.
சோ எழுதிய முதல் நாடகமான, 'இப் ஐ கெட் இட்' என்ற நாடகத்தில், சங்கருக்கு இன்ஸ்பெக்டர் வேடம் தரப்பட்டது. நாடக உலகில் அன்று, பரபரப்பை ஏற்படுத்திய முழுநீள நகைச்சுவை நாடகம்.இதில், அன்றைய காவல்துறையை, பகடி செய்து, சோ எழுதியிருந்த வசனங்கள், அத்துறையை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. நாடகத்தில் சங்கரின் வேடம், கொஞ்ச நாளில் வேறு ஒருவருக்கு கை மாறியது. 'வாட் பார்' என்ற மற்றொரு நாடகம். அதில், கதாநாயகன் வேடம் கிடைத்தது. சிலமுறை மேடையேறி, அந்த மகிழ்ச்சி நீடிக்கும் முன்னரே, வழக்கம் போல் வாய்ப்பு வேறு ஒருவருக்கு கைமாறி விட்டது.
குழுவில் அவருக்கு நிரந்தர வேடம் இல்லை என்றாகி விட்டது; 'சப்ஸ்டிட்யூட் ஆர்ட்டிஸ்ட்' ஆகத்தான் குழுவில் நீடிக்க முடிந்தது.சில மாதங்களில், 'விவேகா பைன் ஆர்ட்சில்' தனக்கான எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார், சங்கர். இந்த நேரத்தில், சங்கரின் வாழ்வில் வசந்த காலம் வந்தது. கல்லுாரி படிப்பை முடித்து, நாடகம், நண்பர்கள் என, சுற்றித் திரிந்த காலத்தில், மந்தைவெளியில் சங்கர் வசித்த அதே பகுதியில் இருந்த, என்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவரை அறிமுகப்படுத்தினார், சங்கரின் இன்னொரு நண்பரான ராஜாமணி.
நாடகப் பித்து கொண்டவரான கிருஷ்ணமூர்த்தி, 'பிலிப்ஸ்' நிறுவனத்தில், 'சீனியர் அக்கவுன்டன்ட்' ஆக பணியாற்றியபடியே, அமெச்சூர் குழு ஒன்றில் நடித்து வந்தார். சங்கருடன் அவர், சில நாடகங்களில் நடிக்க நேர்ந்தபோது, இருவருக்குமிடையே நட்பு உருவானது. கிருஷ்ணமூர்த்திக்கு, தனக்கு தெரிந்த நாடகக் குழுக்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவார், சங்கர். பின்னாளில், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினரின் அணுகுமுறையும், பழகும் விதமும், சங்கர் குடும்பத்துக்கு பிடித்துப் போனதால், மிகவும் நெருக்கமாகினர்.
குறிப்பாக, சங்கரின் பாட்டிக்கு, கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினரை மிகவும் பிடித்துப் போனது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களது வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பெரும்பாலும் பாட்டியை அழைத்துச் செல்வது, சங்கர் தான்.அந்த சமயங்களில், சங்கரிடமும், அவரது பாட்டியிடமும், பள்ளி மாணவியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் வாயாடுவாள். குறும்புக்காரி என, வீட்டிலும், வெளியிலும் பெயர் எடுத்திருந்தவள், தன்னிடம் பேசும்போது வெட்கத்தில், நாணிகோனி பேசுவதை உள்ளுக்குள் ரசிப்பார், சங்கர்.
விகல்பம் இல்லாத பருவம் அது. இருப்பினும், பின்னாளில் வீட்டு விசேஷங்களில் நிகழ்ந்த பரஸ்பர சந்திப்பு, இருவருக்குள்ளும் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளில், மந்தைவெளியிலிருந்து, நந்தனத்திற்கு குடி பெயர்ந்தது, சங்கர் குடும்பம். இதனால், இரண்டு குடும்பங்களுக்கு இடையே சந்திப்புகள் அரிதாகின.அதேசமயம், தனக்கு தெரிந்த நாடக குழுக்களில் கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருந்தார், சங்கர்.
சட்டக் கல்லுாரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் போனது. மாணவன் என்பதால் நாடக வாய்ப்பு மறுக்கப்படுவது, சங்கருக்குள் தீவிர சிந்தனையை ஏற்படுத்தியது. மனம் முழுக்க நாடகத்தை வைத்து, படிப்பில் கவனமின்றி இருந்தது, பெற்றோரை ஏமாற்றும் செயலாக பட்டது. ஓராண்டு காலமாக நடந்து வந்த, சட்டக் கல்லுாரி நாடகத்துக்கு, மங்கலம் பாடினார். பெற்றோருக்கு அதிர்ச்சி என்றாலும், தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கு என்ன அறிவுரையை சொல்வது? பல மாதங்கள் அவர்கள் சங்கருடன் பேசவில்லை. பெத்த மனம் பித்து அல்லவா... கடைசியாக அவர்கள் தான் இறங்கி வந்தனர்.
'இந்த நாடக நடிப்பை விட்டொழிச்சுட்டு ஒரு வேலையை தேடிக்க. கல்யாணம், குழந்தைகள்னு ஆனதுக்கப்புறம் என்னவோ பண்ணித் தொலை...' என அலுத்துக் கொள்வதை தவிர, வேறு வழி தெரிந்திருக்கவில்லை.
ஒருபக்கம் வேலை தேடும் படலம் துவங்கியது. மறுபக்கம், 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நண்பர்களுடன் சந்திப்பு.பரபரப்பான அந்நாளில் தான், வீட்டை சமாதானப்படுத்த ஒரு வழி கண்டுபிடித்தார், சங்கர். நாடக ஆர்வத்தை தான் வீட்டினர் விரும்ப வில்லை. சினிமா நடிகன் என்றால், பெருமைப் படத்தானே செய்வர். தவிர, வழக்கமான மத்திய தர குடும்பத்தினருக் கான சினிமா ஆர்வம் கொண்டவர்கள் தான், அவர்கள்.
நாம் ஏன் சினிமாவுக்கு முயற்சிக்க கூடாது என, சங்கரின் மனம் கணக்கு போட்டது. அவருக்குள் சினிமா ஆசை துளிர்விட மற்றொரு காரணம், அன்றைக்கு திரைப்படம் மற்றும் நாடக உலகில் புகழ்பெற்றிருந்த, கே.கோபால கிருஷ்ணன்.
நண்பரான அவர், சங்கரின் நாடகங்களுக்கு தன் திரையுலக நண்பர்களை அவ்வப்போது அழைத்து வருவார். அப்படி ஒருமுறை வந்த, கவிஞர் வாலி, சங்கரின் நடிப்பில் லயித்துப் போய், 'நீங்கள் சினிமாவில் நுழைந்தால் பெரிய அளவில் வருவீர்கள். நாடகத்தோடு முடங்கி விடாதீர்கள்...' என, திரும்ப திரும்ப அறிவுறுத்தினார். இது, சங்கருக்கு, சினிமா நடிகனாகும் ஆசையை கூட்டியது. சினிமா நடிகன் ஆவதே தன் எதிர்கால லட்சியம் என வரிந்துக் கொண்டு, அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
ஆனால், நடந்ததோ...
- தொடரும்
இனியன் கிருபாகரன்