பா - கே
'வணக்கம்!' என்றதும், அவரும் பதிலுக்கு கைக்கூப்பி, தலையை குனிந்து, மிகவும் பணிவாக, வணக்கம் கூறி, 'தமிழ் இதழ்களை விரும்பி படிப்பதுண்டு. உங்களது பகுதிகளை தொடர்ந்து படித்து வருகிறேன்...' என்றார்.'அவரது தமிழ் உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கிறதே...' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, உதவியாளரை விட்டுட்டு, எங்கள் பக்கம் திரும்பினார், லென்ஸ் மாமா.'என்ன அன்வர், இவரது பேச்சு மணிப்பிரவாளமாக இருக்கிறதே... சிங்கப்பூருக்கு போய் எத்தனை வருஷமாச்சு...' என்றார்.'நான் பிறந்து வளர்ந்ததே, சிங்கப்பூர் தான்...' என்றவர், தன் கையிலிருந்த பார்சலை என்னிடம் நீட்டி, 'இது கீழக்கரை ஸ்பெஷல் துாதல் அல்வா...' என்றார்.
'இலங்கை தமிழர்கள் பேசும் தமிழை கேட்டுள்ளேன். உங்க தமிழ் உச்சரிப்பு வேறு மாதிரியா இருக்கிறதே...' என்றேன், நான்.'ஆமாம். பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் தமிழர்களின் பேச்சில் மலாய் மற்றும் சீன சொற்கள் அதிகம் கலந்திருக்கும். இது சம்பந்தமாக கட்டுரைகள் கூட எழுதியுள்ளேன்...' என்றார்.
'அது பற்றி சொல்ல முடியுமா?' என்றதும், கூற ஆரம்பித்தார்:தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி, 1830ல், சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவுக்கு பயணிக்க ஆரம்பித்தனர், பலர். அவர்களின் வழிதோன்றல்கள், அந்த ஊர்வாசிகளாகவே மாறி விட்டனர். அவர்கள் தமிழ் பேசினாலும், அதில் மலாய் மற்றும் சீன வார்த்தைகள் ஏராளமாக புகுந்து விட்டன. இதனால், அவர்கள் உச்சரிப்பு கூட மாறியுள்ளன.
உதாரணத்துக்கு, 'காலை டிபன் ஆச்சா...' என கேட்பதற்கு மாறாக, 'பசியாறிட்டீங்களா...' என்று தான் கேட்பர். கறி, கூட்டு போன்றவற்றை குறிப்பிடும்போது, 'மேங்கறி வைக்கட்டுமா...' என்பர்* 'அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி பிறந்த நாள்...' என்பதை, 'பத்தாவது மாதம், ரெண்டாம் நாள்...' என்பர்
* 'வீட்டை விட்டு புறப்பட்டு விட்டேன்...' என்பதை, 'வீட்டை விட்டு வெளியேறிட்டேன்...' என்பர்* 'இசைக்கருவிகளை வாசிக்கிறார்...' என்போம், நாம். அவர்களோ, 'விளையாடறாங்க...' என்பர்
* 'முச்சந்தி, நாற்சந்தி'யை, 'முச் தொங்கல், நாற் தொங்கல்' என்பர்
* சிங்கப்பூர் வாழ் தமிழ் இளைஞர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல், 'வாயிலா!' இதன் பொருள், 'வாயை மூடவும்' என்பதாகும்
* 'சம்பளம் வங்கியில் போட்டாச்சு...' என்பதை, 'சம்பளக் காசு பூந்திடுச்சு...' என்பர்
* புகை பிடித்தலை, 'சாம்பிராணி போடப் போறேன்...' என்பர்.அக்காலத்தில் கடைகளில் மலாய் மொழி அதிகம் புழங்கப்பட்டது. வெவ்வேறு இனத்தவரின் தொடர்பு மொழியாகவும் மலாய் இருந்துள்ளது. அன்று, பிற இனத்தவருடன் மலாய் மொழியிலேயே நம் தமிழர்கள் பேசினர். பின் அதே தமிழர்கள் தங்களுக்குள் உரையாடும்போது, தமிழ் மொழியோடு மலாய் மொழிச் சொற்களைக் கலந்து பேச, அது இன்றளவும் நீடித்து நிலைத்து நின்று விட்டது.
'பாசாக் கடைக்குப் போய் நகையை அடமானம் வைக்கணும்...' என்று கூறுவர். அடகுக் கடை தான், 'பாசாக் கடை' என, பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது. பெர்ஷிய மொழியிலிருந்து மருவி, மலாய் மொழியில் புகுந்த அச்சொல்லை, தமிழர்களும் கையாள ஆரம்பித்தனர்.'சேவா வீட்டில் தான் நாங்க ரொம்ப வருஷமா வாழ்ந்தோம்...' என்று சிலர் கூறுவர்.
மலாய் மொழியில், 'சேவா' என்றால் வாடகை வீடு என்று அர்த்தம். 'அல்லுார் பக்கமா போகாதே...' என, பிள்ளைகளை எச்சரிப்பர், பெற்றோர். அல்லுார் என்பது ஓர் ஊர் அல்ல. சாக்கடை, கால்வாய் ஆகியவற்றைக் குறிக்க உள்ளூர்வாசிகள் பயன்படுத்தும் பதம். சாக்கடையைக் குறிக்க, 'லொங்காங்' என்ற சீனச் சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.
'பார்சல்' என்பதற்கு, 'புங்குஸ் பண்ணிடுங்க...' என்று தமிழர்கள், ஹோட்டல்களில் கூறுவர். மலாய் மொழியில், 'புங்குஸ்' என்றால், பொட்டலமிடுதல்.'கடைக்கு போய் கோத்தா பால் இரண்டு வாங்கிட்டு வாங்க...' என்பர். பாக்கெட் பால் தான், கோத்தா பால் என, அழைக்கப்படுகிறது.
பையில் ஒன்றுமில்லை, காலியாக உள்ளது என்பதை, உள்ளூர் வழக்கில், 'பை கோசமாக இருக்கு...' என்று, நவில்வர்.பரோட்டா கடைக்காரரிடம், 'பிராட்டா கோசோங்...' என்று கூறுவர். எதுவும் போடாத பிளைன் பரோட்டா தான், 'பிராட்டா கோசோங்!' அதேபோல, 310 4500 எனும் தொலைபேசி எண்ணை சொல்ல வேண்டுமென்றால், 'மூணு ஒண்ணு கோசோங், நாலு, அஞ்சு கோசோங், கோசோங்...' என்பர்.
இவ்வாறு, அவர் கூறி முடிப்பதற்குள், அல்வா பார்சலை பிரித்து, சாப்பிட்ட லென்ஸ் மாமா, 'ஆஹா... படு, 'டேஸ்ட்'டா இருக்கு...' என்று சிலாகித்து, 'இது எப்படி செய்வது?' என்று கேட்டார்.'தேங்காய் பால், மைதா மாவு, வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, நெய், வறுத்த முந்திரி இருந்தால் போதும். இந்த அல்வாவை செய்துடலாம்...' என்றார். அதற்குள் பாதி அளவு அல்வாவை காலி செய்திருந்தார், லென்ஸ் மாமா.