எஸ். வைத்தியநாதன், மதுரை: அமெரிக்காவுக்கே சவால் விடும் வண்ணம், பல துறைகளிலும் முன்னேறி வரும் சீனாவுக்கு சுற்றுப் பயணம் செய்து, ஒரு அசத்தலான பயணக் கட்டுரையை நீங்கள் வழங்கலாமே...
இரண்டு முறை, லென்ஸ் மாமாவுடன் சீனா சென்று, பயணக் கட்டுரை எழுதி, நம் இதழில் வெளிவந்து விட்டதே... 'தாமரை பிரதர்ஸ்' வெளியீட்டாளர்களிடம் புத்தகமாக வாங்கி படியுங்கள்!
* அ. ரவீந்திரன், நெல்லை: எந்த காரியத்தையும், நேரத்தோடு செய்ய வேண்டுமா?
ஆமாம்... அப்படி செய்வதால், கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும்! நேரத்தோடு செயல்படுவது வாழ்க்கையின் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்!
* எஸ். ராஜமோகன், குல்லுார் சந்தை, விருதுநகர்: நினைத்தபோதெல்லாம், என்னிடம் கடன் கேட்கும் நண்பரிடம் இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்களேன்...
நீங்களும் இதே வழியை உங்கள் நண்பரிடம் பின்பற்றுங்களேன்... அவர், உங்களிடம் வர மாட்டார்!
பி. பழனிச்சாமி, சென்னை: ஒருவனுக்கு, நல்லதும், கெட்டதும் எப்படி வருகிறது?
அவனது நாக்கால் வருகிறது. அவன் பேசும் சொற்களால் வருகின்றன. தவறான சொற்களைப் பேசுவதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டால் கெட்டது எதுவும் வராது!
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: 'நேரம் வரும்போது, அ.தி.மு.க., அலுவலகத்திற்கு செல்வேன்...' என்று, சசிகலா கூறியுள்ளாரே... அந்த நேரம் எப்போது வரும்?
ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தவருக்கு, அவரின் இந்த ஜென்மத்தில், அ.தி.மு.க., அலுவலகத்தில் நுழையும் வாய்ப்பு கிடைக்காது!
மா. அர்விந்த், தென்காசி: ராகுல் நடைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கோவாவில் எட்டு காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு தாவி விட்டனரே...
இப்போது புரிந்திருக்கும் அவரது நடை பயணத்தின் பலன் என்ன என்பது...
ஆர். சுப்பு, தென்காசி: என் நண்பன், அவனது விருந்தினர்களுக்கு கொடுக்கும் விருந்தால், மகிழ்ந்து போகின்றனரே... இது எப்படி?
உங்கள் நண்பர் கொடுக்கும் பண்டங்களால் அவர்கள் மகிழவில்லை... அவரின் அகம் மகிழ்ந்து, முகம் மலர்வதாலேயே உப்பில்லாத கூழ் கொடுத்தாலும் மகிழ்கின்றனர்!