தமிழகத்தில் ஆமணக்கு ஊடுபயிராக வரப்புபயிராக சாகுபடியாகிறது. மானாவாரியில் ஆமணக்கு சாகுபடிக்கு ஆடிப்பட்டம் சிறந்தது. இறவைக்கு வைகாசி மற்றும் கார்த்திகை பட்டம் ஏற்றது.
கலப்பின ஒய்.ஆர்.சி.எச் 1 ரகம் 150 முதல் 160 நாட்கள் வயதுடையது. மானாவாரியில் எக்டேருக்கு 2000 கிலோ, இறவையில் 3000 கிலோ கிடைக்கும். காய்களில் முள் இருக்கும். வெடிக்காது. தத்துப்பூச்சிக்கு எதிர்ப்பு தன்மை உடையது. ஒய்.ஆர்.சி.எச் 2 ரகம் வாடல் நோய்க்கு, தத்துப்பூச்சிக்கு எதிர்ப்பு தன்மை உடையது.
ஒய்.டி.பி.1 ரகம் சாயாத தன்மை கொண்டது. வரப்பு பயிருக்கு ஏற்றது. இரண்டாண்டுகள் மகசூல் தரும்.2 முதல் 3 முறை நாட்டு கலப்பை அல்லது இரும்பு கலப்பையால் உழவேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழு உரம், ஒரு எக்டேருக்கு 100 கிலோ ஜிப்சம் இடவேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கலந்து 4 மணி நேரத்திற்கு பின் விதைக்கலாம். மானாவாரியில் விதைப்பிற்கு 3 மணி நேரம் முன்னதாக ஒரு மில்லி பொட்டாசியம் குளோரைடால் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.பாசன வசதியுள்ள பகுதிகளில் நிலக்கடலையும் ஆமணக்கையும் 6 க்கு 1 என்ற விகிதத்தில் நடவு செய்து அதிக மகசூல் பெறலாம். பருவமழை தாமதமாக வரக்கூடிய பகுதிகளில் உளுந்து அல்லது பாசிப்பயறை 2க்கு1 என்ற விகிதத்திலும் இறவை பகுதியில் வெங்காயத்தை 2க்கு 1 என்ற விகிதத்திலும் பயிரிட்டு கூடுதல் மகசூல் பெறலாம்.
ஒரு எக்டேருக்கு 2 லிட்டர் 'ப்ளுக்ளோரலின்' மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து களைகள் முளைக்கும் முன் தெளித்து, விதை நட்ட 20 மற்றும் 40ம் நாட்களில் கையால் களை எடுக்க வேண்டும்.ஆமணக்கு சுருள்பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது ட்ரைக்கோபோஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். ஆமணக்கு காவடி புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம் அல்லது குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
வாடல் நோயை தடுக்க 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி மருந்தை தொழு உரத்துடன் கலந்து 15 நாட்கள் மூடிவைத்து அதில் நுண்ணுயிரிகள் பெருகச்செய்த பின் இரண்டு பாத்திகளுக்கு நடுவில் துாவினால் நோய் பாதிப்பை குறைக்கலாம்.நாற்று கருகல் நோய் வராமல் தடுக்க மழைநீர், தண்ணீர் வடிகால் வசதி அமைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து தெளிக்க வேண்டும்.
மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ)
அருண்ராஜ், மண்ணியல் தொழில்நுட்ப வல்லுனர்
சபரிநாதன், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் வேளாண் அறிவியல் மையம், தேனி
96776 61410