திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2022
08:00

சினிமா நடிகன் ஆவது என்று முயற்சித்து வந்தார், சங்கர். ஒருநாள், டில்லியிலிருந்து சங்கர் பெயருக்கு தந்தி வந்தது. சென்னையில் இயங்கும், 'அமால்கமேஷன்' நிறுவனத்தின் டில்லி கிளையில் வேலையில் சேர்வதற்கான உத்தரவு அது. சங்கர், தந்தியை பிரித்து படித்துக் கொண்டிருந்தபோது, அதை நமுட்டுச் சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார், தந்தை.

சென்னையில் மகன் பணியாற்றினால், என்றாவது ஒருநாள், வேதாளம் மீண்டும் நாடக மேடை ஏறிவிடக் கூடும் என, எச்சரிக்கையாய் தன் நண்பர் மூலம், டில்லியில் வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார், அந்த புத்திசாலித் தந்தை.தன்னை சூழ்ந்தபடி, வீட்டார் செய்த நீண்ட உபதேசத்தின் முடிவில், மனதைக் கல்லாக்கி, டில்லிக்கு செல்லும் முடிவை எடுத்தார், சங்கர். டில்லியில் இருந்த நாட்களில், சங்கரின் மனம் பலவற்றை அசை போட்டது.

நண்பர்களின் அறிவுரை, பெற்றோரின் எதிர்ப்பு இவற்றால் தன் வாழ்க்கையை விருப்பத்துக்கு மாறாக வாழ வேண்டியதை எண்ணி வெறுப்புற்றார்.தன் திறமை மீது நம்பிக்கை வைத்து, ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி, அவருக்குள் சூல் கொண்டது. தன் லட்சியமான சினிமாவை வென்றெடுக்க முதல் முயற்சியாக, டில்லி வேலையை ராஜினாமா செய்து, மறுதினமே சென்னைக்கு பறந்து வந்தார்.

சினிமாவில் நுழைவதற்கான துருப்புச் சீட்டாக நாடகங்கள் இருந்த காலக்கட்டம் அது. சென்னையில் பணியாற்றியபடியே பிரபலமான நாடக குழு ஒன்றில் இணைந்து, தன் திறமையை ஊரறியச் செய்து, அதன் மூலம் சினிமா வாய்ப்புக்கு முயல்வது தான், அவரது திட்டம்.'வானொலி அண்ணா' என புகழ்பெற்ற கூத்தபிரான், அப்போது, சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக அறிவிப்பாளராக பணியாற்றி வந்தார். சோ, கேட்டுக் கொண்டதற்காக, 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நாடகங்களை அவர் இயக்கி வந்தார்.

நாடகத்திற்கான விவாதங்கள், நாகேஸ்வரராவ் பார்க்கில் நடக்கும். ஒருமுறை, 'தேன்மொழியாள்' என்ற நாடகத்திற்கான விவாதம் அங்கு நடந்தபோது, சோவை காண வந்தார், சங்கர். அவருக்கு, கூத்தபிரானை அறிமுகப்படுத்தி வைத்தார், சோ.களையான முகம், எடுப்பான தோற்றம், கோதுமை போன்ற நிறம், சுருள்சுருளான முடி என, முதல் பார்வையிலேயே, சங்கரின் தோற்றம் கூத்தபிரானை கவர்ந்தது. 'நீங்க, சினிமாவுல முயற்சி பண்ணலாமே பிரதர்...' என, சங்கரின் ஆசைத் தீயில் எண்ணெய் ஊற்றினார்.

பிரபல எழுத்தாளர் பாகீரதன் எழுதிய, 'தேன்மொழியாள்' கதையை நாடகமாக்கிய சமயம், அதை இயக்கிய கூத்தபிரானுக்கும், குழு நிர்வாகத்துக்கும் இடையே சிறியளவில் கருத்து வேறுபாடு தோன்றின.ஒருநாள், உச்சகட்ட கோபத்தில், 'இனி, நான், 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' குழுவின் நாடகங்களை இயக்கப் போவதில்லை...' என, வெளியேறினார், கூத்தபிரான். தனக்கென தனி தன்மையோடு ஒரு நாடக குழுவை உருவாக்க அன்றே முடிவெடுத்தார்.

கதாநாயக தகுதிகளோடு கைவசம் சங்கர் இருந்ததால், நாடகக் குழு உருவாக்கும் முயற்சி, கூத்தபிரானுக்கு எளிதாக கை கூடியது. கல்கியுடன் கை குலுக்கினார். 1960களின் மத்தியில், 'கல்கி பைன் ஆர்ட்ஸ்' குழுவுக்கு விதை போடப்பட்டது.

முதல் கட்டமாக கல்கியின் சிறந்த, 10 கதைகளை மேடையேற்றினார், கூத்தபிரான். அனைத்திலும் சங்கர் தான் கதாநாயகன். குழுவில், சங்கர் மேடை ஏறிய முதல் நாடகம், 'அம்மா!'கல்கியின், 'என் தெய்வம், அமரதாரா' மற்றும் 'வீணை பவானி' போன்றவை, சங்கரின் மாஸ்டர் பீஸ் நாடகங்கள் என சொல்லலாம். கல்கி படைத்த கதாநாயகன் பாத்திரங்கள், சங்கரின் நடிப்புக்கு நல்ல தீனியாக அமைந்து, நற்பெயரையும் பெற்றுத் தந்தன. கூத்தபிரான் குழுவின் நிரந்தர, 'ஹீரோ' ஆனார், சங்கர்.சங்கரின் நடிப்புத் திறமை, பத்திரிகைகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.

நாடக வாழ்க்கை வெற்றிகரமாக போய் கொண்டிருந்தாலும், சினிமா நடிகன் ஆவது என்ற லட்சியம், அவர் மனதில் கனன்று கொண்டிருந்தது.சினிமா வாய்ப்பு தேட, டில்லியை விட்டு வெளியேறுவது தான் சங்கரின் நோக்கமே தவிர, வேலையின்றி இருப்பது அல்ல. அதனால், டில்லி வேலையிலிருந்து சென்னை திரும்பிய சில மாதங்களில், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையிலிருந்த, 'மெட்ராஸ் மோட்டார் அண்டு ஜெனரல் இன்ஷுரன்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில், 'அக்கவுன்ட்' பிரிவில் முதுநிலை உதவியாளராக பணியில் சேர்ந்திருந்தார்.

அங்கு பணியாற்றியபடியே மாலை நேரங்களில் நாடகங்களில் நடித்தும், சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சித்தும் வந்தார், சங்கர்.ஒருசமயம், அருண் என்ற நண்பர் மூலம், 'ஆடிய அரசு' என்ற சரித்திர நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு, சங்கருக்கு கிடைத்தது. நாடகத்துக்கு, எம்.ஜி.ஆர்., மற்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.

திரையுலகின் இரண்டு பிரபலங்கள் முன்னிலையில், சிறப்பாக நடித்து, பெயர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு, சங்கரிடம் இருந்தது. நாடகத்தில், கதாநாயகன் - வில்லன் இரண்டும் கலந்த புதுமையான பாத்திரம் அவருடையது.கதையில், கோமாளி அரசனை பட்டத்திலிருந்து இறக்கிவிட்டு, புதிய மன்னர் அரசு பீடம் ஏறுவதாக ஒரு காட்சி. மன்னராக நடித்த சங்கர், கம்பீரமாக வசனம் பேசியபடி, 'ஸ்டைலாக' வந்து, சிம்மாசனத்தில் அமர்ந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. சிம்மாசனத்தின் கால்களில் ஒன்று உடைந்திருந்ததை யாரும் கவனிக்கவில்லை போலும். சங்கர் அதில் உட்கார்ந்த அடுத்த நொடி, சிம்மாசனம் கவிழ்ந்து, தடுமாறி விழுந்தார். ரசிகர்கள் சிரித்த சத்தத்தில் கொட்டகையே அதிர்ந்து விட்டது. சங்கருக்கு பெரும் தர்மசங்கடம். மேடையில் இருந்தபடியே எம்.ஜி.ஆரை பார்த்தபோது...

- தொடரும்
இனியன் கிருபாகரன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X