இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2022
08:00

உண்மையான பகுத்தறிவு!
கடவுள் நம்பிக்கையை, மூட நம்பிக்கை என, பிரசாரம் செய்து வரும், தி.க.,வை சேர்ந்த ஒருவர் நடத்தும் தேனீர் கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கு ஒரு கார் வந்து நிற்க, அதில் இருந்தவர்கள், 'திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்...' என, வழி கேட்டனர்.
கல்லாப் பெட்டியில் இருந்து ஓடி வந்த, பகுத்தறிவாளரோ, கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை தெளிவாக கூறி அனுப்பினார்.

அப்போது, என்னைப் போல் நின்றிருந்த ஒருவர், 'என்ன சார் இது, கோவில் இல்லை; சாமி இல்லை என்று, பிரசாரம் செய்து வரும் நீங்களே, வக்கரகாளியம்மன்னு, சாமி பெயரை சொல்றீங்களே...' எனக் கேட்டார்.
அதற்கு, 'எங்களுடய பகுத்தறிவுக் கொள்கையில் இருந்து எப்போதும் நான் பின்வாங்கப் போவதில்லை. கோவில் வழிபாடு என்பது, அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.
'அதை மறுத்துப் பேசுவதற்கு இது பொதுக்கூட்ட மேடையல்ல. வழி தெரியாமல் தவிப்போருக்கு, உரிய வழிகாட்டியாய் இருப்பது தான், உண்மையான பகுத்தறிவு...' என்றார், பகுத்தறிவாளர்.
நக்கலாக கேள்வி கேட்ட ஆசாமியோ, 'கப் சிப்' என, இடத்தை காலி செய்தார். உண்மையான பகுத்தறிவு எது என்பதை உணர வைத்தவருக்கு, 'சபாஷ்' சொல்லி, வந்தேன்.
— ரா.ராஜ்மோகன், திண்டிவனம்.

திருநங்கையின் தொழில் பற்று!
எங்கள் தெருவில், நிறைய குடியிருப்புகள் உள்ளன. அதிக ஆண்கள், பணி நிமித்தமாக அலுவலகம் செல்பவர்களாக உள்ளனர். வீடுகளில், பகலில் மின்சாரம் இல்லாமல் போவது, தண்ணீர் குழாய் பைப் உடைந்து போவது போன்ற பிளம்பர் மற்றும் எலக்ட்ரிக் வேலைகள், தவிர்க்க முடியாதது.
அதை சரி செய்யும் விதமாக எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் வேலைகள் நன்கு தெரிந்த, திருநங்கை ஒருவர், போன் நம்பருடன் கூடிய விசிட்டிங் கார்டை, வீடுதோறும் கொடுத்து வைத்துள்ளார்.
போனில் அழைத்தால், காக்கி நிற பேன்ட் - சட்டை அணிந்தபடி, இருசக்கர வாகனத்தில் வந்து, உடனடியாக வேலையை முடித்து, நியாயமான கட்டணம் வாங்குகிறார். பல்பு, டியூப் லைட் போன்றவற்றை அவரே கடைகளில் வாங்கி வந்து, மாற்றியும் தருகிறார்.
அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதுடன், தன்னைப் போன்ற சிலருக்கு, தொழிலையும் கற்றுத் தருகிறார். இவரைப் போன்றவர்களால், திருநங்கையரின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை!
- ஜே. தனபாலன், நஞ்சுண்டாபுரம், கோவை.

துாங்காத கண்ணின்று ஒன்றல்ல, பல...
சமீபகாலமாக, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பெரிதும் குறைந்து விட்டதாக கூறுகிறது, காவல்துறை புள்ளி விபரங்கள். திருடர்கள் எல்லாம் திருந்தி விடவில்லை. சிக்கி விடுவோம் என்ற பயமே இதற்கு காரணம்.
அதேசமயம், வீட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் குறையவில்லை. அதற்கு முக்கிய காரணம், பல வீடுகளில் இன்னமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது தான். அதற்காக, ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியதில்லை. 2,000 ரூபாயில், தரமான கேமராக்கள் கிடைக்கின்றன. வீட்டின் முன்புறமும், பின்புறமும் கேமராக்களை பொருத்தி, அதை நம் மொபைல் போனிலேயே கண்காணிக்க முடியும்.
கேமராவில், 'மெமரி கார்டு ஸ்லாட்' உண்டு. அதில், குறிப்பிட்ட நாட்களுக்கான காட்சி பதிவாகிக் கொண்டே இருக்கும். எந்த நேரமும், வீடு நம் கண்காணிப்பிலேயே இருக்கும்.
நம் வீட்டு எலக்ட்ரீஷியனே பொருத்தி விடலாம். கேமராவில், 'மெமரி கார்டை' வைத்து விட்டால், தேவைப்படும்போது, அதை எடுத்து, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களில் போட்டு பார்த்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து மொபைல் போனில் கண்காணிக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கூடுதல் செலவாகும். 'வைபை' இணைப்பு அல்லது அந்த கேமராவின் செயலியை நம் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
'வைபை' இணைப்பு இல்லாத வீடுகளில், 'ஜியோ பை மோடம்' அல்லது பழைய மொபைல் போன்களின், 'ஹாட்ஸ்பாட்' போதும். மேலும், கேமரா எந்த நேரமும் இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியம்.
ஒருநாளைக்கு, 1 ஜி.பி., டேட்டா போதுமானது. கேமராவை மொபைல் போன் செயலியுடன் இணைப்பது மிகவும் எளிது.
ஒரு தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கேமரா பொருத்தி விட்டால், திருட்டு பயத்தை முற்றிலும் ஒழித்து விடலாம்.
- ச. ஸ்வேதிதா, மதுரை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X