வாஸ்து என்ற பூதத்தை, ஒரு தெய்வமாகவே கருதி பூஜை செய்யும் வழக்கம், காலம் காலமாக இருக்கிறது. ஆண்டில் எட்டு நாட்கள், வாஸ்து நாளாக இருக்கிறது.
வஸ்து என்ற சொல்லே நெடிலாகி வாஸ்துவாக மாறியிருக்கிறது. வஸ்து என்றால், 'பொருள்' என, அர்த்தம் கொண்டாலும், நிலச்சொத்து என்பதே பொருத்தமானது. எனவே தான் நிலங்களில், கட்டடம் கட்டும் முன், வாஸ்து பூஜை செய்கின்றனர்.
ஒருமுறை சிவனும், பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது, சிவனின் கண்களை விளையாட்டாக மூடினாள், பார்வதி. அவளது கை தவறுதலாக நெற்றிக்கண்ணில் பட, அதன் வெப்பத்தில் பார்வதியின் கைகளில் இருந்து வியர்வை வழிந்தது.
அந்த வியர்வையில் இருந்து, ஒரு பூத மனிதன் தோன்றினான். அவன் மிக கருப்பாக, பயங்கரமாக, ஆயிரம் தலை, இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கால், கைகள் என, இயற்கைக்கு புறம்பான வடிவில் இருந்தான்.
அவன் எழுந்து நடந்தால், அந்த இடமே அவனது பயங்கர உருவத்தால் கருமை அடைந்தது. இதனால், அவனுக்கு அந்தகாசுரன் என பெயரிட்டார், சிவன். அந்தகம் என்றால் இருள். அவனை, தன் குழந்தையாகவே கருதினார், சிவன்.
அவன் கொடிய பசியுள்ளவனாக இருந்தான். கண்ணில் படுபவர்களை எல்லாம் பிடித்து உண்டான். இதனால், பயந்து போன தேவர்கள், அவனை அழுத்திப் பிடித்து, பூமியில் குப்புற படுக்க வைத்தனர்.
'நீங்கள் செய்வது முறையல்ல. என் வயிறு பெரியது. அதற்கேற்ப உணவு உண்ணுகிறேன். ஏன் என்னை தடுக்கிறீர்கள்?' என்றான், அந்தகாசுரன்.
உடனே பிரம்மா, 'அப்படியானால், பூமியில் முகம் புதைந்து கிடக்கும் உனக்கு, அந்த பூமியே உணவளிக்கும். யாரெல்லாம், பூமியில் புதிய அரண்மனைகள், கட்டுமானங்களை எழுப்புகின்றனரோ, அவர்கள் செய்யும் பூஜை உனக்கானதாகும்.
'அவர்கள் தரும் உணவை நீ உண்டு கொள்ளலாம். நிலம் என்ற சொத்துக்கு அதிபதியாகிறவர்கள், உனக்கு பூஜை செய்வதால், உனக்கு, 'வாஸ்து' என பெயரிடுகிறேன்...' என்றார்.
இன்னும் சில புராணங்களின்படி, வாஸ்துவை இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் என்கின்றனர். இருப்பினும், சிவபுராண கதையே பிரபலமாக இருக்கிறது.
வாஸ்து புருஷன், சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 22 ஆகிய நாட்களில், ஒன்றரை மணி நேரம் விழித்திருப்பார். இதில், 36 நிமிடம் அவருக்கு பூஜை செய்யும் நேரமாக உள்ளது.
வாஸ்து பூஜை செய்த பின் துவங்கும் கட்டடப்பணிகள், தடங்கலின்றி நடக்கும் என்பதும், பணிகளில் சிறு குறைகள் இருந்தாலும் அது சரி செய்யப்பட்டு விடும் என்பதும், நீண்ட கால நம்பிக்கை.
நிலத்தை ஜடப்பொருளாக காணாமல், அதை உயிருள்ள பொருளாகவே நாம் கருதுகிறோம். நிலத்துக்கு உயிர் இருப்பதால் தான், தாவரங்கள் செழித்து வளர்கின்றன. நம் வசிப்பிடங்கள், தொழில் இடங்களை அது தாங்கி நிற்கிறது. அந்த பூமி புருஷனுக்கு மதிப்பளிப்பது, நம் கடமை. இதற்காகவே, பூமி பூஜை எனும், வாஸ்து பூஜை செய்கிறோம்.
தி. செல்லப்பா