கருணை இல்லத்தில், ஜெய்சங்கரின் கால் படும் வரை, அவரது ரசிகர் மன்றங்கள், வழக்கமான போக்கில் தான் இயங்கிக் கொண்டிருந்தன. அதன்பிறகு, அதன் முகத்தை முற்றிலும் மாற்ற விரும்பினார்.
திரைப்பட வெளியீட்டின்போது, வரவேற்பு வளையங்கள் அமைப்பது, தோரணங்கள் கட்டுவது, போஸ்டர்கள் ஒட்டுவது என, ரசிகர்கள் தங்கள் மனித உழைப்பை வீணடிப்பதை விரும்பவில்லை.
தன் ஒவ்வொரு ரசிகரும், ரசிகர் மன்றங்களும் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவையாக, பொதுத் தொண்டிற்கு தன்னை அர்ப்பணிக்கும் உள்ளத்தோடு இருக்க வேண்டும் என்பதை, அடிப்படை அம்சமாகவே வைத்திருந்தார். தங்களின் ஆதர்ச நாயகனின் நோக்கத்தை, ரசிகர்களும் பின்பற்றத் துவங்கினர்.
திரைத்துறையில், தான் அறிமுகமான நேரத்தில், அன்றைய பிரபல நட்சத்திரங்கள், மூத்த கலைஞர்களை நேரில் சந்தித்து, அறிமுகம் செய்து கொள்வதை சம்பிரதாயமாக வைத்திருந்தார், ஜெய்சங்கர்.
குழந்தையும் தெய்வமும் படம் வெளியான சமயத்தில் தான், எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, 'சங்கர், உங்களை எனக்கு முன்பே தெரியுமே. புதுசா என்ன அறிமுகம்...' என்றார்.
'ஆடிய அரசு' நாடக சம்பவத்தை, அச்சு பிசகாமல் சொன்னதும், அவரின் நினைவுத்திறனை எண்ணி ஆச்சரியப்பட்டு போனார், ஜெய்.
அந்த சந்திப்பில், 'சினிமாவில் புகழ் கிடைப்பதை விட, கிடைத்த புகழை தக்க வைப்பதுதான் சிரமம். சினிமாவில் நிலைக்கணும்ன்னா உடல் நலனில் அக்கறை செலுத்தணும். தங்கள் அபிமான கதாநாயகன், 'ட்ரிம்'மா, அழகான உருவத்துடன் இருக்கணும்ன்னு ரசிகர்கள் நினைப்பாங்க.
'அதனால், தினசரி உடற்பயிற்சி செய்யுங்க. சண்டைக் காட்சிகள்ல கவனமா நடிங்க. 'ரிஸ்க்'கான காட்சிகள்ல, 'டூப்'பை பயன்படுத்திக்கோங்க. ஏன்னா, நம்மை நம்பி பல லட்சங்கள் போட்டு, தயாரிப்பாளர்கள் காத்திருக்காங்க. கவனமா இருங்க...' என, அறிவுரை கொடுத்தார், எம்.ஜி.ஆர்.,
முதல் சந்திப்பிலேயே, ஜெய்சங்கர் மனதில், எம்.ஜி.ஆர்., மீதிருந்த மதிப்பு மேலும் கூடிவிட்டது. புகழடைந்த பிறகும், மூத்தவர்களின் ஆசியை விரும்பிய ஜெய்சங்கரின் பண்பு, எம்.ஜி.ஆருக்கு, அன்பை கூட்டி விட்டது.
இதன் பிறகு, பலமுறை எம்.ஜி.ஆரை படப்பிடிப்புகளிலும், பொது இடங்களிலும் சந்தித்திருக்கிறார். தனிப்பட்ட முறையிலான சந்திப்புகளில் அவரிடம், எம்.ஜி.ஆர்., நீண்ட நேரம் பேசியும் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., நடித்த, பெற்றால் தான் பிள்ளையா படத்தின், 100வது நாள் விழா, மயிலாப்பூர் ராஜேஸ்வரி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது, ஜெய்சங்கரை தனிப்பட்ட முறையில் அழைத்து கவுரவித்த எம்.ஜி.ஆர்., விழா முடிந்து, நீண்ட நேரம் அவருடன் உரையாடினார்.
இரு வல்லவர்கள் படம் வெளியான நேரம். படத்தில், ஜெய்சங்கரின் சுறுசுறுப்பான சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. 'ஆக் ஷன்' நடிகரான எம்.ஜி.ஆருக்கு, அது மிகவும் பிடித்துப் போனது.
படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான, ஜூடோ ரத்தினத்தை, அப்போது ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர்., 'இப்போதுள்ள நடிகர்களில், 'ஸ்டன்ட்' காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார், சங்கர்...' என, உளப்பூர்வமாக பாராட்டி இருக்கிறார்.
இதை, ஜூடோ ரத்தினம் சொன்னபோது, அளவில்லா மகிழ்ச்சிக்குள்ளானார், ஜெய்சங்கர்.
ஜெய்சங்கர் மீது, எம்.ஜி.ஆர்., கொண்டிருந்த அன்புக்கு இன்னொரு சம்பவத்தையும் உதாரணமாக சொல்லலாம்.
ஜெய்சங்கருடன், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமிகரமான ஒரு நடிகையுடன், அவரை தொடர்புபடுத்தி சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
நடிகையை அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திரைத்துறையில் பலமான வதந்தி உலவி வந்தது. ஒரு நடிகரின் வாழ்வில், 'கிசுகிசு' இருக்கலாம். அதுவே எல்லை மீறி போனால், அது அவரின் வாழ்க்கையை முடக்கவும் வாய்ப்புண்டு.
இந்த வதந்தி பூதாகரமான ஒருநாள், தன்னை வந்து சந்திக்கும்படி, நண்பர் ஒருவர் மூலம் ஜெய்சங்கருக்கு, தகவல் அனுப்பினார், எம்.ஜி.ஆர்.,
மறுநாள், சத்யா ஸ்டுடியோவில், எம்.ஜி.ஆரை சந்தித்தார், ஜெய்சங்கர்.
தன் பிரத்யேக, 'மேக் - அப்' அறையில், ஜெய்சங்கருடன் உணவு உண்டபடியே, 'தம்பி, உன்னுடன் நடிக்கும் அந்த நடிகையை நீங்க திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லப்படுவது உண்மையா...' என, எம்.ஜி.ஆர்., பேச்சை துவங்கினார். ஜெய்சங்கருக்கு அதிர்ச்சி.
பத்திரிகைகளில் படித்துப் படித்து பழகிப்போன விஷயம் தான் என்றாலும், கேட்பது, பொறுப்பான ஒரு மனிதர்.
'இல்லை சார். பத்திரிகைகள் தான் அப்படி எழுதுகின்றன. ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை. பல படங்களில் நெருங்கி நடித்திருந்தும், இந்த நிமிடம் வரை, எனக்கு அந்த நடிகை மீது அப்படி ஓர் அபிப்பிராயம் உருவாகவில்லை. தவிர, வீட்டில் பார்க்கும் பெண்ணையே மணம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன்...' என்றார், ஜெய்சங்கர்.
'நல்லது தம்பி. சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில், இம்மாதிரி, 'கிசுகிசு'க்கள் வருவது தவிர்க்க முடியாது. அதை வளர விட்டால், ஒரு கட்டத்தில் அது நம் வளர்ச்சியை பாதிக்கும். நான் கேள்விப்பட்டதை உங்களிடம் நேரில் தெரிந்து கொள்ள அழைத்தேன்; அவ்வளவு தான்.
'இளம் வயதில் புகழ் கிடைக்கிறபோது தான் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். படித்த இளைஞரான நீங்கள், எந்த முடிவெடுத்தாலும் அது உங்கள் எதிர்காலத்துக்கு பயனளிப்பதாக இருக்கட்டும். உங்கள் மனதில் சரியெனப்படுவதை செய்யுங்கள். வாழ்த்துக்கள்...' என்று, அன்பொழுக பேசி அனுப்பி வைத்தார், எம்.ஜி.ஆர்.,
எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தும், ஜெய் மறுத்தது ஏன்?
- தொடரும்.இனியன் கிருபாகரன்