சற்றுத் தயக்கத்திற்கு பின், அழைப்பு மணியை உயிர்ப்பித்தாள், பாமினி.
கதவு திறந்தது, சாரங்கன் தான். 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த மாதிரியே தான் இருந்தான். அதிக வித்தியாசம் தெரியவில்லை, முகத்தில் தங்க பிரேம் கண்ணாடி, தலையில் ஆங்காங்கே சில வெள்ளை முடிகள். அதுகூட அழகாகத்தான் இருந்தது. 45 வயதில் தவறாக தெரியவில்லை.
இவளை உள்ளே வரச் சொல்லும் அழைப்பாக, 'உம்' என்றான்.
வீட்டினுள் நுழைந்தாள்; இவள் இருந்திருக்க வேண்டிய வீடு. சில இழப்புகளை சரி செய்ய முடியாது. தவறுகளை எச்சில் தொட்டு அழிக்கும் சிலேட்டு அல்ல வாழ்க்கை.
''பவித்ராவுக்கு கல்யாணம்,'' தயங்கியபடி அழைப்பிதழை தந்தாள்.
''மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்படி?''
''ரொம்ப நல்ல மாதிரி. மாப்பிள்ளை, தினேஷ், பவித்ராவை, 'லவ்' பண்ணித்தான் கல்யாணம் செய்கிறார்; அவங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். 'பவித்ரா எங்க வீட்டுக்கு வந்தா, எங்களுக்கு பெரிய யோகம்'ன்னு சம்பந்தியம்மா சொன்னாங்க.''
சிரித்தான், சாரங்கன்.
''கட்டாயம் கல்யாண முகூர்த்தத்துக்குள்ள வரணும்.''
''முயற்சி பண்றேன் முடிஞ்சா...''
''இல்ல, நீங்க கட்டாயம் வந்தே ஆகணும். இது, நம் கடமை.''
அவளை வியப்புடன் பார்த்தான், சாரங்கன்.
''அவங்க ரொம்ப ஆர்த்தடாக்ஸ்; நம் கலாசாரம், பண்பாடு இதை எல்லாம் ரொம்பவும் மதிக்கறவங்க.''
சம்பந்தி அம்மா சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள்.
'இதோ பாருங்க, புருஷன் பொஞ்சாதிக்குள்ளே ஆயிரம் தகராறு வரும். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை; நீங்க பிரிஞ்சு இருந்தால், பரவாயில்ல. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்.
'நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா மண்டபத்துல பவித்ராவை தாரை வார்த்துக் கொடுத்தால் தான், எங்களால் ஏத்துக்க முடியும்; எங்க சொந்தகாரங்க முன் நாங்க தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
'உங்க பிரிவு பற்றியோ, உங்களுடைய உணர்வுகளைப் பற்றியோ கவலை இல்லை; அது உங்க சொந்த விஷயம். ஆனா, எப்படியாவது கல்யாணத்துக்கு உங்க வீட்டுக்காரரையும் அழைச்சுட்டு வந்துடுங்க; அதுதான் முக்கியம்...'
ஆயிரம் காலத்துப் பயிர். இவர்களுக்கும் அந்த ஆயிரங்காலத்துப் பயிர் திருமணம் தான் நடந்தது. ஆனால், அந்தப் பயிர் அழுகி விட்டது. ஏதேதோ தகராறு, கணவனை இழந்த இவன் தாய்க்கு, பாமினி ஒரு இலக்காகி போனாள்.
பிறந்த வீட்டுக்கு வாழாவெட்டியாக வந்த இவனது அக்கா துாபம் போட, தினம் தினம் சண்டை, அழுகை, வாக்குவாதம். வாழ்க்கை நரகமானது. இதன் உச்சகட்டமாக, ஒருநாள் இரண்டு வயது பவித்ராவை துாக்கிக் கொண்டு, 'இனி, நீங்க கூப்பிட்டா தான், நான் வீட்டுக்கு வருவேன்; இல்லையென்றால் நுழைய மாட்டேன்...' என்று கூறினாள், பாமினி.
'நீயும் என்னை வந்து கூப்பிட்டால் தான், நான் உன் வீட்டுக்கு வருவேன்...' என்று, இவனும் சூளுரைக்க, காரண காரியம் ஏதுமின்றி காலங்கள் காற்றில் பறந்தன.
இவர்கள் வாழ்வை அழித்தவர்கள் மரணித்தனர். வாழ்க்கை திசை மாறி வார்த்தைகள் மட்டுமே மாறாமல் வழி மறித்து நின்றன. உறவுகள் ஒட்டாமல், தனித் தனியே நின்று விட்டன.
விடைபெறும் முன், வீட்டைப் பார்த்தாள், பாமினி. வீடு நிசப்தமாக இருந்தது.
'ஒருவேளை மறுமணம் செய்து கொள்ளவில்லையோ... எப்படி கேட்பது, வேண்டாம் என்று ஒதுங்கி விட்ட பிறகு உறவு தழைத்தால் என்ன, தவித்தால் என்ன?' என, நினைத்துக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்தபோது, பரபரப்பாக இருந்தாள், பவித்ரா.
''டிரஸ் எடுக்க போக கால் டாக்சி கூட, 'புக்' பண்ணிட்டேன்; சோளி தைக்கக் கொடுக்கணும். உன் தோழி சுகந்தியாமே, உன்னை பார்க்க வந்தாங்க. எத்தனை நேரம் தான் காத்திருப்பாங்க... அப்புறம், அவங்ககிட்ட கல்யாண பத்திரிகையை கொடுத்து, 'கல்யாணத்துக்கு வாங்க'ன்னு சொல்லி அனுப்பி வைச்சேன். எங்கம்மா போன?''
கண்ணீரை மறைத்து உள்ளே நுழைந்தாள், பாமினி.
''ரொம்ப நாள் கழிச்சு பழைய பிரண்ட் ஒருத்தரை சந்திச்சேன்; ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்; நேரம் போனதே தெரியல.''
வீட்டு வாசலில் காத்திருந்த, கால் டாக்சியில் ஏறினர்.
திருமணப் பந்தல், மேளச்சத்தம், உறவு கூட்டம், வரவேற்பு வைபவங்கள், வண்ணமயமான விளக்குகள், மாவிலைத் தோரணங்கள். அத்துடன் காப்பு கட்டு கொடியும் கம்பீரமாக தலையசைத்து அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தன.
வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள், பாமினி. சாரங்கன் வருவானா, மாட்டானா... வரவில்லை என்றால் சம்பந்திக்கு என்ன பதில் சொல்வது?
இதற்குள் சம்பந்தி வீட்டார் வந்து விட்டனர். உள்ளூர் என்பதால் சிரிப்பும், களிப்பும், கும்மாளமுமாக ஒரு பஸ் நிறைய உறவு கூட்டம் வந்திறங்கியது.
கைகூப்பி அவர்களை வரவேற்றாள், பாமினி.
முதல் நாள் மெஹந்தி விழாவில், பாமினியை வற்புறுத்தி உட்கார வைத்து, கையில் மெஹந்தி போட வைத்தாள், பவித்ரா.
'வேண்டாம் எனக்கு எதுக்கு?'
'பரவால்ல நீயும் போட்டுக்கோ...' என்றாள்.
கையெல்லாம் சிவப்பு, அதே சமயம் அவை கண்களிலும்.
''சம்பந்தியம்மா, கல்யாண பொண்ணு மாதிரி இருக்கீங்களே,'' என்று யாரோ சொல்ல, கை தட்டலும், சிரிப்புமாக ஒரே கொண்டாட்டம்.
அப்போது வாசலில் ஒரு டாக்சி வந்து நிற்க, அதிலிருந்து பைஜாமா - குர்தா அணிந்து, கல்யாண மாப்பிள்ளை மாதிரி வந்து இறங்கினான், சாரங்கன்.
தன் கணவனை சம்பந்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள், பாமினி.
''உங்களை சந்தித்தது ரொம்ப சந்தோஷம்,'' கை குலுக்கியபடி கூறினார், தினேஷின் தந்தை.
மணப்பெண் கோலத்தில் இருந்த பவித்ரா திகைப்புடன் பார்க்க, ''இது உன் அப்பா. பாக்கியை அப்புறம் சொல்றேன் உள்ள வா,'' என்று கிசுகிசுப்பாகக் கூறி, உள்ளே அழைத்துப் போனாள், பாமினி.
'பவித்ராவிடம் நிறைய பொய் சொல்ல, என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்...' என, நினைத்துக் கொண்டாள்.
பேண்ட் வாத்தியங்கள் முழங்க, வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கால வழக்கப்படி முதல் நாள் வரவேற்பு. ஷெர்வானியில் ரொம்ப அழகாக நின்று கொண்டிருந்தான், சாரங்கன். அவனைச் சுற்றி கூட்டம். புகைப்படக்காரர்கள், புகைப்படங்களை எடுத்து தள்ளினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசாக, 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தான், சாரங்கன்.
பரிசுகள் குவிந்தன.
''என் கல்யாணம் இப்படி இல்லப்பா. 20 வருஷத்துக்கு முன் நடந்தது. பொண்ணு மாப்பிள்ளை பேசிக்கவே முடியாது. சில வாண்டுங்க எங்களையே பார்த்துட்டு இருப்பாங்க,'' அனைவரும் சிரிக்க, குஷியாக பேசிக் கொண்டிருந்தான், சாரங்கன்.
''கல்யாணத்துக்கு முன், பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து ஊர்வலம் போகக் கூடாதாம். அப்படி ஒரு சம்பிரதாயம். அதனால, என்னை மட்டும் கார்ல உட்கார்த்தி வைச்சு ஊர்வலம் நடத்தினாங்க. என் மனைவிக்கு, 18 வயசு. நானும் கூட வருவேன்னு ஒரே அழுகை. எல்லாரும் சிரிச்சாங்க.''
இப்போதும் அத்தனை பேரும் சிரித்தனர். பாமினிக்கும் கண்ணீருடன் சிரிப்பு வந்தது. சில கசப்புகளுக்கு நடுவே கற்கண்டு துண்டுகளாக சில நினைவுகள்.
மறுநாள் மாங்கல்ய தாரணம்.
தன் மடி மீது மகளை அமர்த்தி, தாரை வார்த்துக் கொடுத்து, முகூர்த்தம் முடிந்தது.
பிற்பகல்...
எல்லாரும் கல்யாண விருந்துண்ட அசதியில், அவரவர் அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
சாரங்கனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள், பாமினி.
முதல் நாள் அணிந்த ஷெர்வானியை மடித்து, வைத்துக் கொண்டிருந்தான்.
''வந்துட்டியா... எப்படி, நல்லா நடிச்சேனா? இந்த ஷெர்வானி, பவித்ரா எனக்கு வாங்கித் தந்தா. கல்யாண, 'இன்விடேஷன்' தர வந்தபோது, என்னிடம் கொடுத்து, 'இதை நீங்க கண்டிப்பா போட்டுட்டு வரணும்'ன்னு சொன்னா.
''நமக்காக இல்லேன்னாலும் குழந்தைக்காக, நாம செஞ்சுதானே ஆகணும்; அதனால் தான் அதை போட்டேன். இது நாடகம், வேஷம் கட்டி முடிஞ்சப்பறமா அதை கழட்டி வைக்கிறது தானே முறை. இதோ வெச்சுட்டேன்; பவித்ராகிட்டே சொல்லிடு.''
திகைத்தாள், பாமினி.
'தன் கல்யாணத்திற்கு, பவித்ரா, அப்பாவுக்கு அழைப்பு அனுப்பினாளா... அவளுக்கு எப்படி விபரம் தெரிந்தது? என்னைப் பார்க்க வந்த, என் தோழி சுகந்தி தான், பல உண்மைகளைச் சொல்லி இருக்க வேண்டும்...'
''இருங்க,'' என்று வெளியே போனாள்.
''என்ன மேடம்... இப்ப அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்; எனக்கு கல்யாணப் பட்சணங்களை கொடுக்காதீங்க; நான் ஒண்டிக் கட்டை, சாப்பிட முடியாது.''
மீண்டும் அறைக்குள் வந்த பாமினி, தன் உள்ளங்கையை விரித்து காட்டினாள். அதில், மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலி...
''கொஞ்சம் லுாசா இருந்தது; கோபத்துல இந்த தாலியை கழட்டி வைச்சுட்டேன். இதை மறுபடியும் கழட்ட முடியாதபடி கட்டுங்க,'' அழுகையோடு கூறினாள்.
''பாமினி...'' சாரங்கனின் குரல் நடுங்கியது.
''நான் கூப்பிட்டா வருவேன்னு சொன்னீங்கல்ல... இப்ப நான் கூப்பிடுறேன், வந்துருங்க. பவித்ராவோட வீட்டுக்காரருக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்கு. அவ அங்க போயிடுவா; நான் தனியாத்தான் இருப்பேன். எனக்கு துணையாக...'' பேசப் பேச, அழுகை வந்தது.
வாழ்வு என்பது சுய விருப்பு, வெறுப்பு மட்டுமே நிறைந்தது அல்ல. தன்னைப் போல, தன் மகளுக்கும் சில ஆசை உண்டு, சில எண்ணங்கள் உண்டு, சில லட்சியங்கள் உண்டு என்பதை, இவர்கள் ஏன் மறந்து போயினர்?
எதிர் எதிராக இயங்கும் பல் சக்கரங்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் தீப்பொறி கிளம்பாமல் இருக்க இடையிலே, 'கிரீஸ்' வைக்க வேண்டும். இப்படித் தான் கணவன்- - மனைவி என்ற இரு சக்கரங்களும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இதற்கு, அன்பு மற்றும் விட்டுக் கொடுத்தல் என்ற பசை தேவை.
தாலியை எடுத்தான், சாரங்கன்.
கல்யாண பந்தலில் உறங்கிக் கொண்டிருந்த மேளகாரர்களை, 'நலுங்குக்கு நேரமாச்சு...' என்று யாரோ கூற... அரைத் துாக்கத்தில் அவர்கள் கெட்டி மேளம் வாசிக்க, மீண்டும் பாமினியின் கழுத்தில் தாலி கட்டினான், சாரங்கன்.
இதையெல்லாம் பக்கத்து அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர், 'பூ' மழை பொழிந்தது.
அழைப்'பூ'க்கள் ஆசிர்வாதப் பூக்களாக வர்ஷித்தன.
விமலா ரமணி