இங்கு யார் வீட்டிலாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், அது அதிசயமாக பார்க்கப்படும், பேசப்படும். ஆனால், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டின் தென்மேற்கு நகரமான இக்போ- ஓராவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒற்றைக் குழந்தை பிறந்தால் தான் ஆச்சரியம். அங்கு, வீடு தவறாமல் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன, பிறக்கின்றன.
சுமார், 2 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமான, இக்போ- ஓராவில் அதிகளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான அறிவியல் விளக்கம் எதுவும் இல்லை. இங்குள்ள பெண்கள் தாங்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும், 'அமலா' என்ற உணவு தான் இதற்கு காரணம் என, நம்புகின்றனர். ஆனால், அதையும் ஏற்காமல் ஆராய்ச்சி செய்து வருகிறது, மருத்துவ உலகம்.
தலைநகர் அபுஜாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜான் ஓபெம் கூறுகையில், 'அவர்கள் சாப்பிடும் பொருட்களில் சில, 'ஹார்மோன்கள்' அதிக அளவில் உள்ளன. அதன் விளைவாகக் கூட இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறது...' என்கிறார்.
'நாங்கள் இரட்டையர்களாக பிறந்ததை எண்ணி மகிழ்கிறோம். இது பற்றி அறிந்த சுற்றுலா பயணிகள், அதிசயமான ஊராக எண்ணி, எங்களை பார்க்க அதிகளவில் வருகின்றனர்.
'அப்படி வருபவர்களை வரவேற்கவும், அவர்களின் வியப்பிற்கு விருந்து வைக்கவும், நாங்களே ஆண்டிற்கு ஒரு முறை, அக்டோபர் மாதம் 8ம் தேதி, இரட்டையர் திருவிழா நடத்தி மகிழ்ந்து, மகிழ்விக்கிறோம்...' என்கின்றனர், இங்குள்ள இரட்டையர்கள்.
'வாய்ப்பிருந்தால், நீங்களும் ஒரு முறை வாருங்களேன்...' என்று, அழைப்பும் விடுக்கின்றனர்.
—ஜோல்னாபையன்