மனிதனின் மிக முக்கிய உறுப்பு கண். கை, கால், காது இல்லாமல் கூட சமாளித்து விடலாம். கண் இல்லாவிட்டால், உலகையே தெரிந்து கொள்ள முடியாது. பிறந்தும் பலனில்லை என்ற நிலையே இருக்கும். இதனால் தான், அம்மன் கோவில்களில் கண் மலர் வழிபாடு இருக்கிறது.
தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், வெள்ளியில் செய்த கண்களை காணிக்கை அளிப்பதாக, அம்மனுக்கு வேண்டிக் கொள்கின்றனர், பக்தர்கள்.
இந்த நடைமுறை, ஹிந்துக்களும், புத்த மதத்தினரும் வழிபடும் சுயம்புநாத் என்ற ஊரிலுள்ள புத்த மத கோவிலிலும் உள்ளது.
அண்டை நாடான, நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு அருகிலுள்ள சுயம்புநாத் கோவிலில் புத்தரின் கண்கள், ஒரு ஸ்துாபியில், வரையப்பட்டுள்ளன. இதை, பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஆண்டின், 365 நாட்களைக் குறிக்கும் வகையில், 365 படிகள் ஏறி, சிறு குன்றில் அமைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும். படி ஏற முடியாதவர்கள், மினி பஸ்களில் செல்லலாம்.
மூலவராக இருக்கும் புத்தரை சுயம்புநாதர் என்கின்றனர். சுயம்புநாதர் கோவில் வளாகத்தில், ஒரு துாண் உள்ளது. இதன் நான்கு புறமும் புத்தரின் அன்பே வடிவான கண்கள் வரையப்பட்டுள்ளன.
படிக்கட்டு வழியாக செல்பவர்கள், தேவர்களின் தலைவனான இந்திரன் பயன்படுத்திய வஜ்ராயுதம் ஒன்றை காணலாம்.
இந்தக் கோவில் ஹிந்து, புத்தமத மன்னர்களால் வழிநடத்தப்பட்டதால், இரு தரப்பினரும் அமைத்த மண்டபங்களும், ஆயுதங்களும் இருப்பதாக சொல்கிறது, தல வரலாறு.
வஜ்ராயுதம் மிகவும் வலிமை வாய்ந்தது. மனிதனின் முதுகெலும்புக்கு ஒப்பானது. பக்தி மார்க்கத்தில், வைராக்கியம் இருந்தால் தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை, எடுத்துச் சொல்கிறது.
இந்த ஆயுதத்தைக் கடந்ததும், அரைக்கோள வடிவக் கோவில் ஒன்றையும், அங்குள்ள துாணில் புத்தரின் கண்கள் வரையப்பட்டுள்ளதையும் தரிசிக்கலாம். ஆன்மிக அறிவு மற்றும் கருணையின் வடிவமாக, இந்தக் கண்களை கருதுகின்றனர், பக்தர்கள்.
இதை, குரங்கு கோவில் - மங்கி மந்திர் என்கின்றனர், உள்ளூர் மக்கள். காரணம், கோவிலின் ஒரு பகுதியில் எப்போதும் குரங்கு கூட்டம் இருக்கிறது.
மஞ்சுஸ்ரீ என்ற புத்தமத துறவி இங்கு வசித்தார். அவரது தலையில் ஏராளமான பேன்கள் இருந்தன. அவர் முக்தியடைந்ததும், அவரது தலையில் இருந்த பேன்கள், குரங்குகளாக மாறி விட்டதாம். இதனால், அந்த குரங்குகளை தெய்வாம்சம் பொருந்தியதாக கருதுகின்றனர், பக்தர்கள். அது மட்டுமல்ல, 'மங்கி மந்திர்' என்று பெயரும் வைத்து விட்டனர்.
ஹிந்துக்கள், அனுமனை வணங்குவது போல, புத்த மதத்தினர், இந்த குரங்குகளை தெய்வமாகப் பார்க்கின்றனர். புத்த பூர்ணிமா; மார்ச் அல்லது ஏப்ரலில், லோசர் எனப்படும் திபெத்திய புத்தாண்டு; செப்டம்பரில், குன்லா எனும் கொண்டாட்டம் ஆகியவை முக்கிய விழாக்கள்.
'கண்ணிலே அன்பிருந்தால், கல்லிலே தெய்வம் வரும்...' என்ற பாடல் வரிக்கேற்ப உள்ள, இந்த கோவிலை தரிசித்து வாருங்கள்.
- தி. செல்லப்பா