நடிகை ஒருவரை ஜெய்சங்கர் திருமணம் செய்ய போவதாக வதந்தி கிளம்ப, அவரை நேரில் அழைத்து, அறிவுரை கூறினார், எம்.ஜி.ஆர்.,
சக நடிகனின் தனிப்பட்ட பிரச்னை என ஒதுங்கி விடாமல், சொந்த சகோதரன் போல், தன் மீது அக்கறை கொண்டு அழைத்து விசாரித்த, எம்.ஜி.ஆரின் உள்ளத்தை எண்ணி நெகிழ்ந்தார், ஜெய்சங்கர்.
சில ஆண்டுகளில், ஜெய்சங்கருடன் இணைத்து பேசப்பட்ட நடிகைக்கு திருமணம் ஆனது. அதன் பிறகே ஜெய்சங்கர் பற்றிய வதந்தி, முடிவுக்கு வந்தது.
எம்.ஜி.ஆருடனான ஜெய்சங்கரின் நட்பு, தொழில் ரீதியாக மாறும் காலம், ஒருநாள் கனிந்து வந்தது. ஆயி மிலன் கி பேலா என்ற ஹிந்தியில் வெற்றி பெற்ற திரைப்படத்தை, தமிழில் எடுக்க விரும்பினார், எம்.ஜி.ஆர்., டைரக் ஷன் பொறுப்பு, கே.சங்கர். படத்தில், கதாநாயகனுக்கு இணையான ஒரு பாத்திரத்திற்கு, ஜெய்சங்கர் பெயரை பரிந்துரைத்தார், எம்.ஜி.ஆர்.,
ஜெய்சங்கரை சந்தித்து பேசிய இயக்குனர் சங்கர், 'நல்ல ரோல். நீங்க நடிச்சா நல்லா இருக்கும்ன்னு சின்னவர் விரும்புறார். ஹிந்தியை விட, தமிழில் உங்க கேரக்டரை இன்னும் சிறப்பா வடிவமைக்க சொல்லியிருக்கிறார், சின்னவர்...' என்றார்.
சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளில், எம்.ஜி.ஆருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தார், ஜெய்சங்கர்.
ஆனால், காலம் அதை கைகூட விடவில்லை. முதல் முறை எம்.ஜி.ஆருடன் நடிப்பதால், முதல் நாள் படப்பிடிப்பிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சென்று, 'மேக் - அப்' போட்டு காத்திருந்தார், ஜெய்சங்கர். ஆனால், அன்றைய படப்பிடிப்பு சரியான நேரத்திற்கு துவங்கவில்லை; காரணத்தையும் அறிய முடியவில்லை.
மூன்று மணி நேரத்திற்கு பிறகே காட்சிகள் எடுக்கப்பட்டன. இது, ஜெய்சங்கரை குழப்பமடையச் செய்தது. இது தொடர்ந்தால், அது தன் திரையுலக வளர்ச்சியை பாதிக்கும் என்ற அச்சம், அவரைத் தொற்றிக் கொண்டது.
அன்று படப்பிடிப்பு முடிந்ததும், ஒரே முடிவாக, இயக்குனரிடம் தன் நிலைமையை எடுத்துச் சொல்லி, படத்திலிருந்து விலகினார்; எம்.ஜி.ஆரையும் நேரில் சந்தித்து, வருத்தம் தெரிவித்தார். நியாயமான காரணத்தை, எம்.ஜி.ஆர்., புரிந்து கொண்டதால், இருவருக்கும் இடையேயான நட்பில் எந்த பாதிப்பும் வரவில்லை.
திரையுலகில், பெரும் நிறுவனங்களுக்கு ஈடாக புகழுடன் விளங்கிய தன்னம்பிக்கை மிக்க தயாரிப்பாளர், சாண்டோ சின்னப்பா தேவர். தனி மனிதராக, தன் திரைப்பட நிறுவனத்தை, ஹிந்தி திரையுலகிலும் கடை பரப்பிய சாதனையாளர்.
எம்.ஜி.ஆரை கொண்டு வெற்றிப் படங்களை தந்த தேவர், எம்.ஜி.ஆர்., 'கால்ஷீட்' கிடைக்காத சமயங்களில், அவருக்கு அடுத்த வரிசை கதாநாயகர்களை வைத்து படங்களை தயாரித்தார். ஜெய்சங்கரை தன் அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
ஸ்டுடியோ படப்பிடிப்புகளில் ஓய்வு கிடைத்தால், பக்கத்து செட்டிற்கு, 'விசிட்' அடிப்பது ஜெய்சங்கர் வழக்கம். அப்படி ஒருநாள் அறிமுகமானவர் தான், இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்.
சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா போன்ற திறமைசாலிகளை இயக்கியவரிடம், ஜெய்சங்கர் தேடி வந்து பேசியது, அவர் பற்றிய நல்ல எண்ணத்தை கே.எஸ்.ஜி., மனதில் உருவாக்கியது.
அப்போது, தன் படம் ஒன்றில் நடிக்க, ஜெய்க்கு அழைப்பு விடுத்தார். உயிரா மானமா? படம் உருவானது, இப்படித்தான். ஜெய்சங்கர் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்திய படம் இது.
தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றும் அளவுக்கு இறுகியது, அந்த நட்பு. ஜெய், தன் மனம் கவர்ந்த இயக்குனர்களில், கே.எஸ்.ஜி.,க்கு தனி இடம் கொடுத்திருந்தார்.
ஜெய்சங்கருக்கு, 1967ம் ஆண்டிலிருந்து, திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டனர், வீட்டு பெரியவர்கள். 1968ல், பெண் தேடும் படலம் தீவிரமானது.
குறிப்பாக, பாட்டி படபடப்பானார். சொந்தத்தில் பார்த்த பெண் ஒருவர், அரசு பணியில் இருந்ததால் தவிர்க்கப்பட்டார். கதாசிரியர் ஜாவர் சீதாராமனின் உறவில், ஒரு பெண்ணை, அவரது வீட்டிலேயே வரவழைத்து பார்த்தனர். பெரும் பணக்கார பின்னணி கொண்டவரான அவர், தனக்கு பொருத்தமாக இல்லை என, மறுத்து விட்டார்.
தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருந்த ஒருநாள், பாட்டியின் மூளையில் பளீரென விளக்கு எரிந்தது. மகனிடமும், மருமகளிடமும் அதை சொன்னபோது, 'அட, ஆமாமில்ல. கையில வெண்ணெயை வைத்து வெளியே அலைஞ்சிட்டிருந்தோமே...' என, தலையில் அடித்துக் கொண்டனர்.
அன்று படப்பிடிப்பு முடிந்து வந்த ஜெய்யை, வாசலிலேயே மறித்தாள், பாட்டி.
'சங்கரு, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கேமரா முன்னாடியே காதலிச்சிட்டிருக்கப் போறே... கல்யாணம் பண்ணி, குடித்தனம் பண்ற ஆசையில்லையா உனக்கு. பொண்ணு பார்த்து வெச்சிருக்கோம். சரின்னா, மற்ற வேலைகளை துவங்கிடுவோம். என்ன சொல்றே...' என்றார்.
கிண்டலாக, 'யாரு பாட்டி, இந்த பிரபல சினிமா ஸ்டாரோட பொண்டாட்டி...' என்றார், ஜெய்.
பாட்டி சொன்ன பெயரை கேட்டு, அசந்து நின்றார், ஜெய். குடும்ப நண்பரான கிருஷ்ணமூர்த்தியின் மகள் கீதாவை தான் சொன்னாள், பாட்டி. நீண்ட நாட்களுக்கு பின், அந்த பெயரை கேட்டபோது, மகிழ்ச்சியடைந்த ஜெய், எந்த மறுப்புமின்றி சம்மதித்தார்.
ஜூன் 18, 1969ல் திருமணம். திரையுலக முக்கிய பிரமுகர்களை நேரிலேயே சென்று அழைத்தார், ஜெய்.
பத்திரிகையை பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆரின் உதட்டில் மெலிதான ஒரு புன்னகை தவழ்ந்ததை, ஜெய் கவனிக்க தவறவில்லை. நடிகை எவரையும் மணக்கும் திட்டமில்லை என, தன்னிடம் சொன்னதை நிரூபித்த ஜெய்க்கு, அவர் தெரிவித்த பாராட்டு அது.
சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு, மொத்த திரையுலகமே திரண்டு வந்து, வாழ்த்தியது. தவிர்க்க இயலாத காரணத்தால், எம்.ஜி.ஆர்., வரவில்லை.
அடுத்த சில மாதங்களில் ஜெய்சங்கரின் சகோதரர் திருமணம் நடந்தபோது, மனைவி ஜானகியுடன் வந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அங்கு செலவழித்து, ஜெய்யை குளிர வைத்தார், எம்.ஜி.ஆர்.,
சிவாஜியுடன் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு எது தெரியுமா?
-தொடரும்.
- இனியன் கிருபாகரன்