ஜே.எஸ்.எஸ். நித்யஸ்ரீ, மதுரை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், நமது நாளிதழில் முழுப்பக்க விளம்பரம், முதல் பக்கத்தில் கொடுத்து வருகிறார்... இங்குள்ள முதல்வர் ஏன் புறக்கணிக்கிறார்?
நாம் வெளியிடும் உண்மைச் செய்திகளை, ஸ்டாலின் விரும்புவதில்லை... அத்துடன் அவரது படம் தினமும் முதல் பக்கத்தில் பெரிதாக வரவேண்டும் என்று விரும்புகிறார்! நாம் அதைச் செய்வதில்லை... அதனால், புறக்கணிக்கப்படுகிறோம்!
ப. சோமசுந்தரம், சென்னை: சென்னை மேயர் பிரியா, கொசு வலை வழங்கும் திட்டத்தை, கொசு வழங்கும் திட்டம் என, பிதற்றியிருக்கிறாரே...
இதுதான் திராவிட மாடல் ஆட்சியின், 'தமிழ், தமிழ்...' என்று கொட்டமடிப்பதற்கு உதாரணம்!
வி. வாசுதேவன், கோவை: தமிழக அரசியலில், எதிர்காலத்தில் பெரும் பெண் தலைவராக, பிரேமலதா வருவார் என்று, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கூறுகிறாரே...
பா.ம.க., அன்புமணி கூட, தான் தான், 2026ல் தமிழக முதல்வர் என்று கூறுகிறார்... இவர்களது கனவு கனவாகவே இருந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை!
* கொ. தேன்மொழி, திண்டுக்கல்: வருகிற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா?
வரும் லோக்சபா தேர்தலுடன், நாட்டிலிருந்தே, காங்கிரஸ் காணாமல் போனாலும் போய் விடும்!
* எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி: கேரள கவர்னர், ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர், பினராயி விஜயனுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறதே...
'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக மட்டுமே கவர்னர் இருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார்... ஆனால், கவர்னர் அப்படி இல்லை... இதனால் தான் மோதல்!
எஸ். கவிதா, சென்னை: என் தோழி, நாவை காக்க வேண்டும் என்கிறாளே...
மனிதன் வேறு எதையும் காக்கவில்லை என்றாலும், தன் நாவைக் கட்டாயம் காத்தாக வேண்டும். இல்லையெனில், அவர், சொற் குற்றத்தில் சிக்கி துன்புறுவார்!
வி. கந்தன், பாண்டி: தீராத துன்பத்தை தருவது எது?
தீய ஒழுக்கம், தீராத துன்பத்தை எந்நாளும் தரும்... நல்லொழுக்கம் நன்மைக்கு விதை விதைக்கும்!
கே.பாலாஜி, செங்கல்பட்டு: பண்பாளர்கள் என்கின்றனரே, அவர்கள் யார்?
அவர்கள், ஒழுக்க நெறியில் நிற்பவர்கள்... பண்பாளர்கள்... ஒருநாளும் வாய் தவறிக் கூட, தீய சொற்களை பயன்படுத்த மாட்டார்கள்...