நாடு நம்மைத் தாழ்த்தவில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2022
08:00

மதுரையில் நடைபெற இருக்கும் ஜாதி பேரணியில் கலந்து கொள்ள, தன் வீட்டை விட்டு, பேரன் முனியசாமியுடன் கிளம்பினார், பெருமாள் சாமி.

''தாத்தா எங்க போற,'' என்று, அவரது நான்கு வயதுப் பேத்தி கேட்டதும், பெருமாள் சாமிக்கு கோபம் வந்தது. வாசலைக் கடந்து சென்றவர், திரும்பி வேகமாய் வந்து படியில் உட்கார்ந்திருந்த பேத்தியின் பிஞ்சு முதுகில், 'சுளீர்' என்று ஒரு அறை கொடுத்தார்.

தாத்தாவின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத சின்னஞ்சிறு தளிர், வலி தாங்காமல் அழுதது.

உள்ளிருந்து ஓடி வந்த பெருமாள் சாமியின் மனைவி, ''கெழவா உனக்கு அறிவிருக்கா, பச்சை மண்ண ஏன் இப்படி அடிக்கிற?''

''ஒரு இடத்துக்குக் கிளம்பிப் போகும் போது, எங்க போறேன்னு கேட்டா, கோபம் வருமா இல்லையா?''

''அறிவு கெட்ட மனுஷா, நாலு வயசுப் பயிருக்கு என்ன தெரியும்... நல்லா ஓடி வந்து அடிச்ச... நீ வாடா கண்ணா, பாட்டி கிட்ட,'' என்று பேத்தியை அரவணைத்து வீட்டிற்குள் சென்றாள், கிழவி.

தாத்தாவும், பேரனும் தெருவில் இறங்கி நடந்தனர்.

தெற்கு தெருவைக் கடந்து, நடுத்தெருவை அடைந்ததும், நடையின் வேகம் கூட்டினர்.

''ஏ பெருமாலு, எங்கப்பா போற?'' கூப்பிட்டவர், கோபால்சாமி நாயக்கர்.

-பேத்தியிடம் காட்டிய கோபத்தை அவரிடம் காட்ட முடியுமா? தோளில் கிடந்த துண்டை எடுத்து மணிக்கட்டில் போட்டு, தலையைச் சொறிந்தபடி, ''ஒரு வேலையா போறேன் முதலாளி,'' வளைந்து, குழைந்து பதில் சொன்ன தாத்தாவை, பற்களைக் கடித்தவாறே பார்த்தான், பேரன்.

''என்ன முதலாளி, வேலையிருக்கா,'' என்று கேட்டார், பெருமாள் சாமி.

''போ, போயிட்டு வா பார்க்கலாம்,'' என சொல்லி, வீட்டிற்குள் சென்றார், நாயக்கர்.

''என் தங்கச்சிய மட்டும் அடிச்ச, அவ கேட்டதைத் தானே இந்த நாயக்கரும் கேட்டாரு. பதிலுக்கு வளையுற, குழையறியே தவிர, கோபப் படலியே... ஏன்?'' என்றான், பேரன்.

''ஏலே வாடா, வாயை மூடிக்கிட்டு,'' பேரனை அதட்டினார்.

டீக்கடைக்கு வந்தனர். பெஞ்சில் நான்கு பேர், பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர்.

தன் பேரனுடன் தரையில் உட்கார்ந்தார், பெருமாள் சாமி.

பெஞ்சுகாரர்களின் கையில் எவர்சில் டம்ளர். பெருமாள் சாமிக்கும், அவர் பேரனுக்கும் கண்ணாடிக் கிளாசில் டீ வந்தது.

''என்னப்பா பெருமாளு... பேரனோட எங்க கிளம்பிட்ட?'' பெஞ்சில் இருந்த ஒருவன், கால்மேல் கால் போட்டு கேட்டான்.

''அவசரமா ஒரு வேலை அப்பச்சீ...'' அந்த, 17 வயதிடம் இந்த, 67 பணிவாய் பதில் அளித்தது.

தேநீரை அருந்தி பெருமாள் சாமி தந்த சில்லரையை கல்லாப்பெட்டியில் போட்டார், கடைக்காரர்.

''நமக்கு மட்டும் தரை, தனிக் கிளாசு. ஆனா, நீ கொடுத்த காச மட்டும் அவங்க தந்த காசோட சேத்துட்டாரு தாத்தா... நம் காசுக்கு மட்டும் ஜாதி இல்லையோ,'' பேரனின் கிண்டல் கேள்விக்கு, தன் பொக்கை வாய் சிரிப்பை பதிலாய் தந்தார், பெருமாள் சாமி.

எதிரில் வந்த ஒருவன், ''என்னப்பா பெருமாளு... தெருவெல்லாம் குப்பையா கிடக்கு, கூட்டிப் பெருக்குறதே இல்லையா... துரை எங்க கிளம்பீட்ட?'' கிண்டலாய் கேட்டான்.

'ஏய் பெருமாளு... கக்கூசு நாறுதப்பா... செருப்பு வார் அறுந்து போச்சு, வீட்டுக்கு வந்து வாங்கிட்டுப் போய், உடனே தச்சு கொண்டாப்பா... ஊர் மந்தை குப்பையா கிடக்கே, கூட்டிப் பெருக்க, ஏன் வரல... ஊர் வேலையைப் போட்டுட்டு எங்கப்பா கிளம்பீட்ட?' வழி நெடுக அதட்டல்கள், அதிகாரங்கள்.

நாணலாய் வளைந்து, பணிந்து, குனிந்து சிரித்தபடியே, பேரனுடன் பஸ் நிலையம் வந்து சேர்ந்தார், பெருமாள் சாமி.

''ஜாதி பேரணிக்குக் கட்டாயம் போயே ஆகணும் தாத்தா. ஊர்ல நம்மை ரொம்ப தாழ்வா நினைக்கிறாங்க,'' பொருமினான், பேரன் முனியசாமி.

''பஸ்ல பேசலாம்...'' என, பேரனை எச்சரித்து, பஸ் வந்ததும், ஏறி தாத்தாவும், பேரனும் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். 10 கி.மீ., துாரம் சென்றதும், அடுத்த ஊர் வந்தது.

ஒரு பெரியவர் ஏறினார். அவர் அமர இடம் இல்லை.

தாத்தாவுடன் அமர்ந்திருந்த முனியனிடம், ''தாத்தாவுக்கு முழங்கால் வலி, நிற்க முடியல. நீ இளவட்டப்புள்ள. என் பேரன் மாதிரி. தாத்தாவுக்கு உன் இடத்தைக் கொடு,'' என்றார்.

முனியனுக்கு சந்தோஷ அதிர்ச்சி.

வெள்ளையும், சொள்ளையும், சிவப்பாய் இருந்த ஒரு பெரியவர், தன்னைப் பேரன் என்று சொன்னதே, அவனுக்கு மகிழ்ச்சி. ஊரில் இப்படியொரு ஆள் இல்லையே. உடனே எழுந்து, இடம் கொடுத்தான்.

அந்த பெரியவர், தன் தாத்தாவோடு சேர்ந்து அமர்ந்திருந்த காட்சி, இவனுக்கு இரட்டைச் சந்தோஷம் அளித்தது.

ஊரில் இப்படி, யாரோடும் தன் தாத்தா சேர்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை, கனவிலும் காண முடியுமா?

''பெரியவரே, டிக்கெட்... தம்பிக்கும், நீங்க தான் டிக்கெட் எடுக்கறீங்களா?''

கண்டக்டர் கேட்டு வந்த போது, முனியனின் மகிழ்ச்சி மேலும் கூடியது.

ராஐபாளையம் வந்து சேர்ந்தது, பஸ். பழைய பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்றதுமே தாத்தாவும், பேரனும் இறங்கி, ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

''ஐயா வாங்க, தம்பி, நீ அப்படி உக்காருய்யா. அய்யாவுக்கும், தம்பிக்கும் என்ன வேணும்ன்னு கேட்டு வைங்கப்பா,'' என, முதலாளி உபசரித்தார்.

முனியனுக்கு சந்தோஷம். ஊரே பேர் சொல்லிக் கூப்பிடும் தன் தாத்தாவை, ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி, ஐயா என்றும், தன்னை தம்பீ என்று அழைப்பதும் எவ்வளவு மரியாதை. மனசு நிறைந்த மகிழ்ச்சியோடு இருவரும், வயிறையும் நிரப்பிக் கொண்டனர்.

தான் சாப்பிட்ட இலையையும், பேரன் சாப்பிட்ட இலையையும் சேர்த்து எடுக்க முயன்றார், பெருமாள் சாமி.

''பெரியவரே, இலையை எடுக்க வேண்டாம். நீங்க போய் கை கழுவுங்க,'' கல்லாவில் இருந்தவர் கனிவுடன் கூறினார்.

முதலாளியை பிரமிப்புடன் பார்த்தான், முனியன்.

ஊர்ல எந்த வீட்டுல விசேஷம் நடந்தாலும், ஊரே சாப்பிடும். ஆனா, இலை எடுத்துப் போட, தாத்தாவைத் தான் அதட்டிக் கூப்பிடுவாங்க. இலை எடுக்க லேட்டாச்சுன்னு ஒரு வீட்ல தாத்தாவை அடிக்க கை ஓங்கீட்டாங்க.

ஆனா இங்க, அவர் சாப்பிட்ட இலையை எடுக்க வேண்டாம்ன்னு ஹோட்டல் முதலாளி எவ்வளவு அன்பா சொல்றாரு.

தானும், தாத்தாவும் மதிக்கப்படுகிறோம் என்ற மகிழ்ச்சியில், கை கழுவும்போதே அதுவரை மனசில் இருந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் சேர்த்தே கழுவினான், முனியசாமி.

அதன் பின், அவனுக்கும், அவருக்கும் தேவைப்பட்ட சில பொருட்களை வாங்கி வர வெவ்வேறு கடைகளுக்குச் சென்றனர். அந்த கடைகளிலும், 'ஐயா பெரியவரே... தம்பி ராஜா...' என்ற மரியாதை மழையில் இருவரும் நனைந்தனர்.

பஸ் நிலையத்தில், மதுரை வண்டிக்காகக் காத்திருந்தனர். பேரனின் மனதில் புதிய மாற்றம். ராஐபாளையம் கடைகள் தந்த மரியாதை, அவனை சிந்திக்க வைத்து, ஒரு தெளிவான முடிவை தந்தது.

''தாத்தா, நாம் ஜாதி பேரணிக்கு அவசியம் போகணுமா?''

திகைப்போடு திரும்பியவர், ''என்னடா திடீர்னு இப்படிக் கேட்கற, அதுக்குத்தான கிளம்பி வந்திருக்கோம். போகணும்டா, ஊர்ல நமக்கு எவ்வளவு தாழ்ச்சீன்னு நீதானே கவலைப்பட்ட. இப்ப, போகணுமான்னு கேட்கறியே ஏன்?''

சிரித்தபடியே, ''என்ன தாழ்ச்சி தாத்தா... அப்படியே தாழ்த்தினாலும், தாழ்த்துனது நம் ஊர் தானே தவிர, நம் நாடு தாழ்த்தலியே... நம் நாடு, ரொம்ப பெரிய நாடு. பாடத்துல படிச்சிருக்கேன்.

''நம் நாட்டுப் பரப்பளவு ஏறக்குறைய, 33 லட்சம் சதுர கி.மீ., நம்மைத் தாழ்த்திப் பேசுற நம் ஊர் ரொம்ப சின்னது. நம் நாட்டு மக்கள் தொகை, 140 கோடி. நம்மை இழிவா நினைக்கிற நம் ஊர் மக்கள் வெறும், 1,000 பேர் தான், தாத்தா.

''அப்புறம், 33 லட்சம் சதுர கி.மீ., நாட்டுல, 18 கி.மீ., தான் பஸ்ல வந்திருக்கோம். இங்கயே உங்களை, 'ஐயா'ங்கிறாங்க, என்னை, 'தம்பீ'ங்கிறாங்க. இனி, இங்கேருந்து மதுரை, சென்னை, பெங்களுருன்னு எங்க போனாலும் இப்படிதான் பேசுவாங்க.

''நம் நாடு ரொம்ப நல்ல நாடு. நம் ஊர்ல 1,000 பேர் தானா இந்திய மக்கள்... இல்ல தாத்தா, நம் நாட்டோட ஒப்பிட்டுப் பார்த்தா, அவங்க ரொம்ப சிறிசு. அவங்க தாழ்த்தி நாம தாழ்ந்திர மாட்டோம்.

''சுதந்திரம் நமக்கும் சேர்த்து தான் வாங்கீருக்காங்க. நம் ஊர்ல, பிரசிடெண்டு மாமா, நாட்டாமைத் தாத்தான்னு நான் பேசும்போது, 'அப்படிப் பேசக் கூடாது. நாம தாழ்ந்த ஜாதி, அவங்களை எல்லாம் முதலாளீ, சாமீன்னு சொல்லணும்'ன்னு நீ சொல்வ.

''ஆனா, பாடத்துல காந்தித் தாத்தா, நேரு மாமான்னு தான் படிக்கிறேன். நீ தாழ்ந்த ஐாதிடா, காந்தி சாமீ, நேரு முதலாளின்னு தான் படிக்கணும்ன்னு பள்ளிக்கூடத்துல சொல்லல...

''அதனால, நம் ஊர்ல மட்டும் தான், நாம தாழ்ந்த ஜாதி, நாட்ல இல்ல. நான் நல்லாப் படிச்சு ஒரு வேலைக்கு வந்துட்டா, ஜாதியால நமக்குத் தாழ்ச்சி இல்ல, தாத்தா. அதனால, பேரணி, போராட்டம்ன்னு வயசான காலத்துல நீ அலைய வேண்டாம்.

''நீயும், நானும் மதுரைக்குப் போனா, 200 ரூபா செலவாகும். அந்தப் பணத்துல ஒரு ஸ்கூல் பேக் மட்டும் வாங்கித் தா, தாத்தா. மதுரைக்குப் போக வேண்டாம்; வா கடைக்குப் போகலாம்,'' என, கை பிடித்து அழைத்தான், பேரன் முனியசாமி.

அவன் பேச்சிலும், சிரிப்பிலும் இருந்த புதிய நம்பிக்கையே தன் நம்பிக்கையாய் மாற்றிக் கொண்ட பெருமாள் சாமி, பேரனுடன் கடைக்குக் கிளம்பினார்.


வே.குருநாதன்வயது: 65படிப்பு: எஸ்.எஸ்.எல்.சி.,பணி: திரைப்பட வசனகர்த்தாசொந்த ஊர்: திருநெல்வேலி
வெளியான படைப்புகள்: தமிழின் முன்னணி வார இதழ்கள் பலவற்றில், இவரது சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளனபெற்றுள்ள விருதுகள்: ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்திற்கு வசனம் எழுதியதில், 'விஜய் அவார்டு' பெற்றுள்ளார்லட்சியம்: திரைப்படங்களில், வசனம் எழுதி புகழ்பெற வேண்டும்கதைக்கரு பிறந்த விதம்: என் கிராமத்து மக்களில், ஜாதியால் தாழ்த்தப்பட்ட பிரிவினர், சமீபகாலங்களில் வெளியிடங்களில் மதிப்புடன் நடத்தப்பட்டதை, கண்ணாரக் கண்டதும் தோன்றியது, இக்கதையின் கரு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X