ஒருசமயம், காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஈ.வெ.ரா.,வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டனர். கூட்டம் முடியும் சமயத்தில், ஒரு துண்டுச் சீட்டை, ஈ.வெ.ரா.,விடம் கொடுத்துச் சென்றார், ஒருவர்.
துண்டுச் சீட்டைப் பார்த்த ஈ.வெ.ரா., அதை அருகிலிருந்த அண்ணாதுரையிடம் கொடுத்தார். அதை வாங்கிய அண்ணாதுரை, அதில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை படித்துவிட்டுச் சிரித்தார்.
பின்னர், 'மைக்'கில், 'இங்கு யாரோ ஒருவர், துண்டுச் சீட்டில் தன் பெயரை மட்டும் எழுதியிருக்கிறார். ஆனால், கேள்வி எதுவும் எழுதவில்லை. இப்போது, இந்தச் சீட்டை ஒருவரிடம் கொடுத்தனுப்புகிறேன். அது யாருடைய பெயரோ, அவர் மேடைக்கு வந்து தம் கேள்வியை தரலாம்...' என்று கூறி, அந்த துண்டுச் சீட்டை ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்.
துண்டுச் சீட்டைப் பார்த்துவிட்டு, ஒருவர் கூட எழுந்து மேடைக்கு வரவில்லை. அந்த துண்டுச் சீட்டில், 'நான் ஒரு முட்டாள்' என்று எழுதப்பட்டிருந்தது.
ஈ.வெ.ரா., இந்த வாசகத்தை, 'மைக்'கில் வாசிக்க வேண்டும் என்பது தான் துண்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்ற விஷமியின் நோக்கம். ஆனால், அந்த வாசகத்தை துண்டுச் சீட்டு எழுதியவனுக்கே பொருந்துமாறு திருப்பி அனுப்பி விட்டார், அண்ணாதுரை.
***
ஒருசமயம், திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பாவும், உவமைக் கவிஞர் சுரதாவும் பணம் வைத்து, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். சின்னப்பாவிடம், 200 ரூபாய் தோற்று விட்டார், கவிஞர் சுரதா.
ஆட்டம் முடிந்தவுடன், சுரதாவிடம், 'உன் போன்ற கவிஞர்களுக்கு, வருமானம் மிக குறைவு. உன் பணத்தை நான் ஜெயித்து விட்டாலும், அதை நானே வைத்துக் கொள்ள என் மனம் இடம் தரவில்லை. உன் மனமும் இழப்பை ஏற்றுக்கொள்ளாது. ஆகவே, இந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள்...' என்று கூறி, 200 ரூபாயை சுரதாவின் சட்டைப் பையிலேயே வைத்து விட்டார், சின்னப்பா.
***
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், விஷம் குடித்து இறக்க வேண்டும் என, ஏதென்ஸ் நீதிமன்றம் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தது. முதல் நாள் இரவு, தன்னுடன் சிறையில் இருந்த சீடர்களுக்கு, 'ஆத்மா அழியாதது' என்று உபதேசித்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் இறக்கப் போகிறோமே என்ற பயமோ, கவலையோ அவரிடம் சிறிது கூட இல்லை.
'குருவே, நீங்கள் இறந்த பின், உங்கள் ஈமச்சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும்...' என்று கேட்டார், ஒரு சீடர்.
அதைக் கேட்டு புன்னகைத்த சாக்ரடீஸ், 'என்னை யாரும் கொல்ல முடியாது. ஆத்மா அழியாதது என்றுதானே இப்போது உங்களுக்கு உபதேசம் செய்தேன். அப்படியிருக்க, என் ஆத்மா எப்படி அழியும்; அதற்கு ஈமச்சடங்கு எப்படி செய்ய முடியும்...' என்று கேட்டார்.
அவரது மன உறுதியையும், யதார்த்தமான பேச்சையும் கேட்டு, சீடர்கள் மெய்சிலிர்த்தனர்.
மறுநாள், 'ஹெம்லாக்' என்ற மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட விஷம் கொடுக்கப்பட்டது, சாக்ரடீசுக்கு.
***
பிரிட்டிஷ் இந்தியாவின்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நான்கும் சேர்ந்து, 'சென்னை ராஜதானி' என, அழைக்கப்பட்டது. அப்போது இருந்த சட்டசபையில், ராஜாஜி பிரிமியராகவும் (முதல்வர்), வி.ஆர்.கிருஷ்ணய்யர் எதிர்க்கட்சி உறுப்பினராகவும் இருந்தனர்.
ஒருநாள், வி.ஆர்.கிருஷ்ணய்யரை பார்த்து, 'உங்களைப் போன்ற அறிவாளிகள், மந்திரியாக இருந்தால் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்குமே...' என்றார், ராஜாஜி.
'நான் உங்களின் கண்களில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான், என் ஆசை. எதிர்க்கட்சியில் நான் இருந்தால் தான், இது சாத்தியம். மந்திரியாக உங்கள் பக்கத்தில் அமர்ந்தால், நான் இருப்பதையே மறந்து விடுவர்...' என்று சொல்லி வி.ஆர்.கிருஷ்ணய்யர் சிரிக்க, ராஜாஜியும் சிரித்து விட்டார்.
***
- நடுத்தெரு நாராயணன்