பெரிய கிளைகள், சிறிய இலைகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
பெரிய கிளைகள், சிறிய இலைகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2022
08:00

''அத்தை... இந்த ரெசிப்பி மறந்து போகுது எனக்கு. சொல்லுங்க எழுதிக்கிறேன்,'' என்று சமையல் நோட்டுடன் வந்து சபர்மதியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், மருமகள் ராகினி.

''என்னம்மா, எதைச் சொல்றே?'' என்று புன்னகையுடன் கேட்டபடி, மயில் டிசைன் எம்பிராய்டரியிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள், சபர்மதி.

''அதான் அத்தை, உங்க மகன் மோகன், ஆசை ஆசையா சாப்பிடுவாரே, புளி உப்புமா... எனக்கு, ப்ரீதிக்கு, துருவனுக்கு எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்குமே,'' என்றாள், ராகினி.

''ஓ சரி... சொல்றேன், எழுதிக்கோ. இன்னிக்கு ராத்திரி டிபன், நானே பண்றேன். நேரில் பார்த்து கூட எழுதிக்கோடாம்மா.''

''இல்ல அத்தை, பாவம் நீங்க... ராத்திரி எல்லாம் இருமல், இன்னும் சளி முழுசா போகல. உங்களுக்கு, இன்னிக்கு முழு ஓய்வு. நாந்தான் எல்லாம் செய்யப் போறேன். வேணும்ன்னா ப்ரீதியைக் கூப்பிட்டுக்கிறேன்.''

''அடடா... நோய்களை எல்லாம் கொண்டாடக் கூடாதுன்னு எங்க பாட்டி சொல்வாங்க. இதென்ன பெரிய சளி, இருமல்... பார்த்துக்கலாம். அது சரி, உன் காலேஜ்ல இன்னிக்கு ஏதோ கம்ப்யூட்டர் லேப் திறப்பு விழான்னு சொன்னியே... கிளம்பு கிளம்பு,'' என்றார்.

''ஆமாம் அத்தை... இதோ சமையலை வேகமா முடிச்சுட்டு கிளம்பறேன்,'' என்று எழுந்தாள், ராகினி.

அவள் கை பற்றி, ''அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ அழகா உடை உடுத்தி, பச்சை வட்ட பொட்டு வெச்சுக்கிட்டு கிளம்பு. உனக்கு ரொம்ப பொருத்தமா, களையா இருக்கும். ஏதோ என் ஆசை; உன் விருப்பம் தான் ரொம்ப முக்கியம்... சரியா?''

''ஓ ஸ்வீட் அத்தை... தாங்க்யூ... எனக்கும் பச்சை கலர் வட்டப் பொட்டு ரொம்பப் பிடிக்குது இப்பல்லாம்.''

''வேணும்னா, என் பச்சைக்கல் தோடு தரேன்... போட்டுக்கறீயா?''

''ஓ ஷுயூர் அத்தை... கிரேட்!'' என்று முதியவளை அணைத்து சிரித்தபடி, கிளம்பினாள், ராகினி.

மயிலின் அழகு அப்படியே துணியில் இறங்கி வந்தது.

பிரமித்து, குர்த்தியை வாங்கி மேலும் கீழும் பார்த்து, ''வாவ் பாட்டி, ரொம்ப சூப்பர்... எவ்ளோ அழகா பண்ணியிருக்கே... பாவம், நாலு நாள் ஆச்சு, உனக்கு கண் பார்வை வேற பிரச்னை... இதுல ரொம்ப வேலை கொடுத்துட்டேன். சாரி பாட்டி,'' என்றாள், ப்ரீத்தி.

''சாரில்லாம் எதுக்குடா கண்ணு... அதான் கேட்கும் போதெல்லாம் ஊசி நுால் கோத்து கோத்து, கொடுத்துக்கிட்டே இருந்தியே... எனக்கு சின்ன வயசுல, எம்பிராய்டரி மேல அப்படி ஒரு ஆசை...

''எங்க தெருவுல என்னைப் பார்த்து நிறைய பேர் இதைக் கத்துகிட்டாங்க... நம் கையால ஒரு விஷயத்தை ரசிச்சு பண்ணும்போது, மனசுக்கு எவ்வளவு நிறைவா இருக்கு தெரியுமா... உனக்குதாண்டி கண்ணு நன்றி சொல்லணும்.''

''நீ தங்கம் பாட்டி!''

''ரொம்ப ஐஸ் வைக்காதே... ஏற்கனவே சளி பிடிச்சிருக்கு பாட்டிக்கு,'' என்றபடி வந்தான், துருவன்.

''வாவ்... நீ போட்டதா பாட்டி, இந்த மயில்... அப்படியே நேர்ல பார்க்கற மாதிரி இருக்கு. ஓ காட் மயில் கண், வாய்ப்பே இல்ல. ப்ரீத்தி, இதுக்கு நீ, 1,000 ரூபாய் கொடுக்கணும்; 'பில்' போடு பாட்டி!''

சிரித்தாள், சபர்மதி.

உடையை, தன் உடல் மேல் வைத்து அழகு பார்த்த பேத்தியின் காட்சி, அவள் மனதைக் கொள்ளை கொண்டது.

''டேய், 1000 ரூபாய் என்னடா, 10 ஆயிரம் ரூபா கூட தருவேன், என் பாட்டிக்கு... நீ என்னடா பரிந்துரைக்கறது?'' என்று சிணுங்கி, பாட்டியை முத்தமிட்டு ஓடினாள், ப்ரீத்தி.

''துருவ் கண்ணு... நீ சரியா துாங்கினியா இல்லையா... பாட்டு சத்தம் கேட்டுதே, ராத்திரி, 'ரிகர்சலா' கண்ணா?''

''ஆமாம் பாட்டி... 'ராக் அன் ரோல் மியூசிக் காம்படீஷ'னுக்கு, இன்னும் நாலு நாள் தான் இருக்கு. எங்க காலேஜ் பேண்ட் என் கையில். குரல் ஒத்துழைக்கணுமேன்னு கொஞ்சம் கவலையா இருக்கு,'' என்று புருவம் உயர்த்தினான், துருவன்.

''கண்ணா, நீ பிரமாதப்படுத்துவே... நாலு வருஷம் கர்நாடக சங்கீதம் படிச்சது, கை கொடுக்கும், கவலைப்படாத. சித்தரத்தையும், வெத்தலையும் போட்டு நன்னீர் கஷாயம் வெச்சு தரேன்.

''தினமும் ராத்திரி, 7:00 மணிக்கு குடி. சீரகம் போட்டு வெதுவெதுப்பான குடிநீர் போதும்... குரல் அருமையா ஒத்துழைக்கும்,'' என்றாள், சபர்மதி.

''நிச்சயம் பாட்டி... அப்புறம், ஆசையா இருக்கு, பச்சை சுண்டைக்காய் போட்டு வத்தக்குழம்பு பண்ணு. உன் கை சுவையே, தனி தான்.''

''அப்படியே எனக்கும் கொஞ்சம் ரிப்பன் பக்கோடா பண்ணும்மா. கடைகள்ல வாங்கற முறுக்கு, தட்டை ஒரே மாதிரி இருக்கும்மா. நீ ஓமம் போட்டு பண்ணுவியே, அதை சாப்பிடணும்ன்னு ஆசையா இருக்கு. அவசரமில்ல முடிஞ்சபோது பண்ணு. சரி, ராகினி கிளம்பலாமா?'' என்றான், மோகன்.

''நாளைக்கே பண்றேன் ராஜா... ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க,'' என்று எழுந்தாள், சபர்மதி.

மனது கேட்கவில்லை. மகன் கேட்ட பட்சணம் உடனே செய்ய, கைகள் பரபரத்தன. ஓமம் காலியாகி இருந்தது. வீட்டை பூட்டி கிளம்பினாள்.

சித்தரத்தை, வால்மிளகு, சுக்குப்பொடி எல்லாம் வாங்கி, பூக்கடை அருகில் போன போது, யாரோ வந்து முதுகைத் தொட்டனர்.

அங்கு, நின்றிருந்தாள், லலிதா.

''லல்லி நீயா... இங்கே எப்படி?'' என்று திகைத்தாள்.

சிறு வயதுத் தோழி. ஒரே பள்ளி, காலேஜ். 50 ஆண்டு காலம், தன் விருப்பத்தின்படி இழுத்துச் சென்று விட்டு, இதோ இருவரையும் எதிர் எதிரில் நிறுத்தி வைத்திருக்கிறது.

முதுமை என்பது, காலம் எல்லாருக்கும் கொடுக்கும் தீர்ப்பு தான். அது பரிசாகவும் இருக்கலாம்; தண்டனையாகவும் இருக்கலாம். லலிதாவின் மேல் அது தாண்டவம் ஆடியது போல இருக்கிறது.

வாடிய தாவரம் போல் உடல், பள்ளங்களான கண்கள், சோர்வான உடல்மொழி, இன்னும் ஏன் வரவில்லை மரணம் என்று, காலனின் கால் தொட்டு கெஞ்சுவது போன்ற சோக முகம். ஏன் இப்படி ஆகி விட்டாள், லலிதா?

''லல்லி, வா இங்க உட்காரு,'' என்று கரும்புச்சாறு கடை வாசலில் இருந்த திண்ணையில் தோழியை உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தாள்.

''இரண்டு ஜூஸ் போடுப்பா,'' என்ற சபர்மதி, ''சென்னைக்கு எப்ப வந்த... நான் வந்து, 15 வருஷமாச்சு. மகனுக்கு சென்னை மாற்றல் கிடைக்கவும், அவர் போய் சேரவும் சரியாக இருந்தது. ஊரில் தனியா இருக்க வேண்டாம்ன்னு இங்க கூட்டிகிட்டு வந்துட்டாங்க. சொல்லு லல்லி, எப்படிம்மா இருக்கே?'' என்றாள்.

''நான் நான்...'' என்று துவங்கும்போதே விம்மினாள், லலிதா.

''என்னம்மா சொல்லு.''

''பிச்சைக்காரி போல எப்படி இருக்கேன் பார்.''

''ஏன் லல்லி இப்படி பேசறே... உன் மகன் மாதவன் வீட்டுலதானே இருக்கே?''

''ஆமாம். ஆனால், தெரு நாயை விட கேவலமாக இருக்கேன், சபர்மதி. மதிப்பு, மரியாதை இல்ல. மருமகள், பேரன், பேத்தி எல்லாருக்கும் என்னைப் பார்த்தால், அலட்சியம். முகம் கொடுத்து பேசக் கூட மாட்டேங்கறாங்க...

''பென்ஷன் பணம் முழுசா எடுத்துக்கறாங்க... ஆனா, சூடா ஒரு கப் காபி குடுக்க, ஒரு ஆள் இல்ல... என் பிழைப்பு பிச்சைக்காரியை விட கேவலமா இருக்கு. ஏன் இன்னும் சாவு வரலேன்னு தெரியல.''

கரும்புச்சாறு வந்தது.

''இந்தா, நல்லா சில்லுன்னு இருக்கு. உடனே குடி,'' என்று தோழிக்குக் கொடுத்து, அவளும் அருந்தினாள்.

''லல்லி... கொஞ்சம் பேசணும், பொறுமையா கேட்பியா?''

''உன்னைத் தவிர யார் இப்படி என் மேல் அன்பு காட்ட முடியும், சொல்லு...'' என்றாள்.

''நிலைமை புரிகிறது. ஆனால், இதை உன்னால் மாற்ற முடியும். ரொம்ப ஒண்ணும் கஷ்டப்பட வேண்டாம். சில முயற்சிகள் பண்ணு, அது போதும். சொல்லட்டுமா?'' என்றாள்.

''ம்!''

''மரியாதை என்பது என்ன... பதவியால் வருமா, பணத்தால் வருமா, பொருளால் வருமா, அது எப்படி வரும்... ஆனால், அது நிலைத்திருக்கணும் இல்லையா... அதுக்கு நாம சில முயற்சிகள் செய்யணும்.

''என்னைப் பொறுத்தவரை, மரியாதை என்பது, நம் நடத்தையால் வருவது. நம் சொல்லைக் கேட்டு மற்றவர்கள் ஏற்று நடப்பது தான் மரியாதை. அது அதிகாரச் சொல்லாக இருக்கக் கூடாது; அவர்களுக்கு நம் சொல்லால் உண்மையான பலன் இருக்கணும்.

''அன்பின் அடிப்படையில் வருகிற சொல், அதிகாரத்தைக் கொடுக்கும். மறுபடியும் அந்த அதிகாரம், அன்பான சொற்களை பேச வைக்கணும். மற்றவர்களுக்கு நாம் பயனுள்ளவர்களாக இருக்க இருக்க, நம் மேல் மதிப்பு கூடும்.

''இத்தனை நாள் உழைச்சோம், இனி அக்கடான்னு இருப்போம் என்று வீண் சோம்பேறித்தனத்தை விட்டொழிச்சாலே போதும்...

''உண்மையாக இருக்க இருக்க, நல் உழைப்பைக் கொடுக்கக் கொடுக்க, நம் மேல் மரியாதை கூடும். அதுக்காக சின்ன வயதில் செய்த மாதிரி, கல்லில் துணி தோய்த்து, அம்மியில் சட்னி அரைச்சு, உலக்கையால் கம்பு மாவு தயாரிச்சுன்னு கஷ்டப்படச் சொல்லல...

''இப்போ எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு. வேலைகளைப் பிரிச்சு செய்யும் போது, ஒருவர் செய்யும் வேலைகளின் அருமை, மத்தவங்களுக்குத் தெரியும். இந்தத் தலைமுறைகளுக்குத் தெரியாத எத்தனையோ நல்ல விஷயங்கள் நம்மகிட்ட இருக்கு.

''அதிரசம் செய்யலாம், கூடை முடையலாம், பழைய பட்டுப்புடவைகளை பேத்திகளுக்குக் கொடுத்து, 'டிரெண்டியா' கட்டச் சொல்லி அழகு பார்க்கலாம்... குறைஞ்ச பட்சம் தொட்டிச் செடிகளா கற்றாழை, புதினான்னு வளர்க்கலாம்.

''ஏதோ ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருக்கணும், லல்லி... என் பையன், 'இலான் மஸ்க் கம்பெனி'ல வேலை செய்யறான். அவர் சொல்லுவாராம், 'மில்லியன் டாலர் சம்பாதிக்கணும்னா, உன்னால மில்லியன் பேருக்கு பலன் இருக்கணும்'ன்னு...

''நாம பணம் சம்பாதிக்க வேண்டாம், நீ சொல்கிற மாதிரி, மதிப்பு, மரியாதை, அன்பு இதை சம்பாதிச்சாலே போதும்... அதுக்கு கொஞ்சம் மெனக் கெடணும்; நம், 'மைண்ட் செட்' மாறணும்; அவ்வளவு தான்... சாரிம்மா, ரொம்ப நீளமா பேசிட்டேனோ!''

''இல்ல சபர்மதி, எனக்கு புரிகிற மாதிரி ரொம்ப அர்த்தமா பேசின,'' என்றாள், லலிதா.

வி. உஷா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X