தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
வணக்கம். 'ஓயாத உழைப்பின் ஓராண்டு' சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்காக கடந்த மே மாதம் எங்க ஆத்துார் பகுதிக்கு வந்த நீங்க, எங்க சித்தேரி கிராமத்துக்கும் வந்திருந்தீங்கன்னா என் சிரமம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்!
அப்போ நான் 9ம் வகுப்பு மாணவி. 'மரக்கிளை முறிஞ்சு மின்கம்பம் சரிஞ்சதால, எங்க வீட்டை உரசுற மாதிரி மின்கம்பிகள் தொங்குது'ன்னு தேவியாக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்துல புகார் பண்ணினோம்; அவங்க கண்டுக்கலை! 4.8.2017, காற்றுல சீறி வந்த அந்த மின்கம்பியால நான் இடது கையை இழந்த நாள்; எனக்கு பெரிய சேதம்; சேலம் அரசு மருத்துவமனையில நாலு அறுவை சிகிச்சைகள் நடந்தது! மின்வாரியத் தரப்புல இருந்து யாருமே வந்து பார்க்கலை!
இழப்பீடு தொடர்பான கோப்புகள் சேலம் மாவட்ட ஆட்சியர் மேஜையில இருக்குறதா, 2018 ஜூன் மாதம் ஆத்துார் தாலுகா வருவாய்துறை அதிகாரி கூப்பிட்டு சொன்னார்; அதோட சரி! இப்போ நான் கல்லுாரி முதலாமாண்டு மாணவி. அய்யா... என் பெற்றோர் விவசாயக்கூலிங்க; என் படிப்பு செலவு அவங்களுக்கு பெரும் பயம் காட்டுது!
முந்தைய அரசோட அலட்சியத்தால சீரழிஞ்ச இந்த ஏழை மாணவி வாழ்க்கைக்கு உதவுறது உங்க கடமை; செய்வீங்களா?
- மின்வாரிய அலட்சியத்தால் இடது கை இழந்து, 5 ஆண்டுகளாக நிவாரணத்திற்கு காத்திருக்கும் 19 வயது சவுந்தர்யா, சித்தேரி, சேலம்.