இறைவன் - இறைவி சூழ வாழும் கொடுப்பினை பெற்றிருக்கிறார் கோவை ஆர்.எஸ்.புரம் 'வொண்டர் கிட்ஸ்' மழலையர் பள்ளியின் தாளாளர் ரீனா கார்த்திக்.
குழந்தைகள் ஏன் கடவுள் ரீனா?
கடவுளோட உலகம் மாதிரியே குழந்தைகளோட உலகத்துலேயும் எல்லா பொருளுக்கும் உயிர் உண்டு. 'இது பொம்மை இல்லை... என் பாப்பா'ன்னு மகிழ அவங்களால முடியும். உடைந்த பொம்மைக்காக அழ முடியும். நனைந்த பொம்மையோட தலை துவட்டிவிட முடியும்! அவங்களோட இந்த உலகத்துல எனக்கும் ஓர் இடம்; வாழ்க்கை ரொம்பவே அழகா இருக்கு!
என் பொறாமை
குழந்தைகளோட கோபம் தணிக்க பெருசா எதுவும் செய்ய வேண்டாம்; இதமான தலைக்கோதல், அரவணைப்பு போதும்! 'இனி தப்பு செய்யக்கூடாது; சரியா?'ன்னு மன்னிச்சுட்டே இருக்க அவங்களாலதான் முடியும். 'யாரா இருந்தாலும் அன்பு தந்தா திருப்பி தருவேன்'னு வாழ்றது அவங்களுக்குமட்டும்தான் சாத்தியம்! இதனால, அவங்க வாழ்க்கை மேல எப்பவும் எனக்கு பொறாமை உண்டு!
அழகான பொய்கள்
'ரீனா ஆன்ட்டி என்னை அடிச்சிட்டாங்க'ன்னு ஒரு புகார்; அவளோட அம்மா - அப்பா வந்து, 'ஏன் அடிச்சீங்க?'ன்னு கேட்டாங்க; 'சிசிடிவி' பதிவுகளை காண்பிச்சேன். அதுல அவ கன்னத்தை பிடிச்சு நான் கொஞ்சுறேன்; 'ஓய்... என்ன?'ன்னு நான் கேட்க, 'சும்மா'ன்னு சொல்லி சிரிக்கிறா; அந்த சிரிப்பு கொள்ளை அழகு! அந்த சந்தோஷத்தோடவே, 'பொய் சொல்றது தப்பு'ன்னு அவளுக்கு புரிய வைச்சேன்.
'கியூட்' தருணங்கள்
* 'நீயே எனக்கு அம்மாவா இருக்குறியா?'ன்னு கொஞ்சி கேட்கிறது
* 'ஏன் சோகமா இருக்குறே?'ன்னு கழுத்தை கட்டிக்கிறது
* 'குறும்பு பண்ணிட்டு வலுக்கட்டாயமா சிரிச்சு மழுப்புறது
* 'நான் ரீனா ஆன்ட்டி கூடத்தான் இருப்பேன்'னு அடம்பிடிக்கிறது
* 'ஜொள்' ஒழுக துாங்குறது, துாக்கத்துல உளர்றது... இப்படியான தருணங்களை ரசிக்கிறப்போ இறைவன்கிட்டே வரம் வாங்குற மாதிரி இருக்கும்!
திருப்தியான வாழ்வு
இருக்குற ஒழுக்கத்தை மெருகேற்றியும், இல்லாத ஒழுக்கத்தை உருவாக்கியும், குழந்தைகளை நேர்த்தியான சிற்பமா மாத்துறது என் பணி. 22 ஆண்டுகளா இதை சிறப்பா செய்றதா நம்புறேன்.
இந்த நம்பிக்கைக்கு காரணம், என்கிட்டே வளர்ந்து இப்போ மேடையில நிற்கிற முன்னாள் மாணவர்கள்; பெரும் சாதனைகளுக்குப் பிறகு, 'என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க'ன்னு அவங்க வந்து நிற்கிறப்போ மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு.
பெற்றோருக்கு செல்லமா ஒரு குட்டு
ரீனா: 'எதிர்த்துப் பேசாதே'ங்கிற அறிவுரையை கேட்கிற குழந்தையும், மண்ணை முட்டத் தெரியாத விதையும் வளரும்னு நம்புறீங்களா?