ஏரி பாசியில், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி வி வசாயி தனஞ்செயன் கூறியதாவது: விவசாயத்தில், ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தினால், நஞ்சில்லாத விளை பொருட்களை உற்பத்தி செய்யலாம். நெற்பயிருக்கு, தொழு உரம் மற்றும் காய்கறி, பழ வகை பயிர்களுக்கு மண்புழு உரம் மிகவும் சிறந்தது.
அந்த வரிசையில், ஏரி பாசியில் மண்புழு உரம் தயாரித்து, நெல், காய்கறி, பழ வகைகளுக்கு போடும் போது, இரட்டிப்பு மகசூல் பெற முடியும். மண்புழு உரம் தயாரிப்பு ஏற்ப, தொட்டி மற்றும் கூரை கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இதில், ஏரி பாசி படுக்கை மீது, பயறு வகை பயிர்களின் மாவு, வெல்லம், சாணம் ஆகிய கரைசலை, வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதேபோல, வாரத்திற்கு ஒரு முறை என, 40 நாள் வரையில் செய்து கொண்டிருக்க வேண்டும்.
இறுதியாக, 40 வது நாளில் ஏரி பாசியில் இருந்து, மண்புழு உரம் தயாராகிவிடும். இதை, நெல், காய்கறி, பழம் ஆகிய பல வித பயிர்களுக்கு போடும்போது, கூடுதல் மகசூல் ஈட்ட முடியும். சாண எருவில் தயாரிக்கும் மண்புழு உரத்தை காட்டிலும், ஏரி பாசியில் தயாரிக்கப்படும் மண்புழு உரத்தில், பத்து மடங்கு வீரியம் பலவித பயிர்களுக்கு கிடைக்கும். பத்து கிலோ போட வேண்டிய மண்புழு உரம், 100 கிராம் ஏரி பாசி மண்புழு உரம் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: தனஞ்செயன்
88257 46684