முக்கனிகளில் முதன்மையானது மா. மாமரத்தில் பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சி அதிக சேதம் விளைவிக்கக்கூடியது.
மூன்று வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த தத்துப்பூச்சிகள் மாமரத்தின் பூங்கொத்துகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன. நவ., முதல் பிப்., வரையில் மாமரங்கள் பூக்கும் தருணத்தில் இப்பூச்சி மிக அதிகளவில் தென்படும்.
பூச்சிகள் பூங்கொத்துகளின் தண்டு, காம்பு, பூ மொக்குகளின் சாற்றை உறிஞ்சி உண்ணும். பூங்கொத்துக்கள் கரிந்து உதிர்ந்து விடும். காய் பிடிப்பது 60 சதவீதம் குறைந்துவிடும். மா மரங்களில் நெருக்கமாக தழைகள் இல்லாதவாறு கவாத்து செய்வது அவசியம். காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். மாந்தோட்டத்தைச் சுற்றி களைகள் அகற்ற வேண்டும்.
அறுவடைக்குப்பின் ஒரு லிட்டர் தண்ணீரில் மெட்டாரைசியம் அனிசோபிலியே அல்லது பெவேரியா பேசியானா 10 கிராம் பவுடர் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில் 7 நாள் இடைவெளியில் இருமுறையும் இதேபோல மா மரத்தண்டில் பூசவேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் ஏதேனும் ஒன்றை தெளித்து தத்துப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
பூக்கும் பருவத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி இமிடாக்லோபரிட் அல்லது ஒரு கிராம் தயோமீதாக்சிம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி புப்ரோபெசின் அல்லது ஒன்றரை மில்லி டைமெத்தோயேட் அல்லது ஒன்றரை மில்லி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம். 15 நாள் இடைவெளியில் ஒருமுறையும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
கரும்பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா அல்லது ஸ்டார்ச் பவுடரை ஒரு லிட்டரில் தண்ணீரில் கரைத்து கொதிக்கவைத்து அதை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து வெயில் நேரத்தில் தெளிக்க வேண்டும்.
- சீனிவாசன், தலைவர் விஜயராகவன், விமலா தங்கப்பாண்டியன்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம் வேளாண்மை பல்கலை
ஸ்ரீவில்லிபுத்துார்
94438 23062