அதிகாலை நல்ல பனி மூட்டம்; சாலையில் எதிரில் ஆள் வந்தால் தெரியாது.
கடும் குளிர் நடுக்கத்தில், மேம்பாலத்தில் ஒருவர் நிற்பது தெரிந்தது.
அவர் போக்குவரத்து காவலர்.
இந்த வேளையிலும் கடமை தவறாது பணியில் இருந்தார். அவரது செயல் போற்றத்தக்கதாய் இருந்தது.
கொட்டும் பனியில், மஞ்சள் முகப்பு விளக்கோடு வந்தன வாகனங்கள். அவர் நின்றிருந்த பகுதியில், வேகம் குறைத்து, பாலத்தை கடந்தன.
இரண்டு நிமிட இடைவெளியில் வேகமாக வந்த காரைப் பார்த்தார் காவலர். கையை நீட்டி நிறுத்தினார். ஓரம் கட்டியதும் பணிவுடன், 'சலாம்' போட்டார் ஓட்டுனர். பின் சீட்டில், ஒரு கொழுத்த உருவம் துாங்கி வழிந்தது.
கார் நின்றதும், 'திடுக்'கென விழித்தது அந்த உருவம்.
''ஐயா... காரை சோதனை போடணும்...''
போக்குவரத்து காவலர் கூறியதும், அலட்டி கொள்ளாமல் ஒப்புக்கொண்டது கொழுத்த உருவம்.
சற்று தயங்கி, ''சோதனை ஆரம்பிச்சா, அரை மணி நேரம் ஆகலாம்...'' என்றார் காவலர்.
''நீங்க சந்தேகபடுற மாதிரி என் காரில் ஒண்ணுமில்ல... எதுக்கும் உங்க கடமையை செய்யுங்க...'' என்றது கொழுத்த உருவம்.
''அதான் சொல்லிட்டீங்களே; கொட்டுற பனியில் நிக்குறேன்; வேலை முடிஞ்சாதான் காபி குடிக்க முடியும்...''
குழைவுடன் கூறினார் காவலர்.
ஜிப்பா பாக்கெட்டில் கை விட்டு, ஒரு தாளை எடுத்து, காவலர் கையில் திணித்தது கொழுத்த உருவம்.
வாயெல்லாம் பல்லாக சல்யூட் அடித்து அனுப்பினார் காவலர்.
கார் புறப்பட்டது. துாக்கத்தை தொடர்ந்தது கொழுத்த உருவம்.
மாநகர எல்லையை கார் நெருங்கிய போது, சில காவலர்கள் நிற்பது மங்கலாக தெரிந்தது. எச்சரிக்கை ஒலி எழுப்பியும் நகரவில்லை.ஒரு காவலர் கை காட்ட, நின்றது கார்.
அதன் சாவியை கைப்பற்றிய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், ''ஐயா... உங்க வண்டியில் கள்ள நோட்டு இருக்கிறதா தகவல் வந்திருக்கு; சற்று இறங்குறீங்களா; சோதனை போடணும்...'' என்றார்.
''அரைமணி நேரத்துக்கு முந்தி தான், ஒரு கான்ஸ்டபிள் அங்குலம் அங்குலமா சோதனை போட்டு அனுப்பி வெச்சாரு; அதுக்குள்ள இன்னொரு சோதனையா; நான் ஒரு ஜென்ட்டில்மேன்; இப்படியா தொந்தரவு செய்வீங்க...''
கேட்டவாறே இறங்கியது கொழுத்த உருவம்.
''கான்ஸ்டபிள் சோதனை போட்டாரா... அப்ப சரி... நீங்க போகலாம்...'' என்றார் இன்ஸ்பெக்டர்.
பெருமூச்சு விட்டபடி வண்டிக்குள் ஏற முயன்றார்.
''சற்று பொறுங்க; அவருக்கு ஏதாவது பணம் கொடுத்தீங்களா...'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''ஏன் ஐயா, நான் பணம் கொடுக்கணும்...'' என்றது கொழுத்த உருவம்.
''சரி... வண்டியை சோதனை போட்டது உண்மைன்னா நீங்க, அவருக்கு, 500 ரூபாய் நோட்டு கொடுத்ததும் உண்மை; அதை, உடனடியாக சோதனைக்கு அனுப்பி கள்ள நோட்டுன்னு உறுதி செஞ்சிருக்கோம்...''
''என்ன ஐயா... அநியாயமா இருக்கு; ஏதோ ஒன்றை கள்ள நோட்டுன்னு கூறி, அதை நான் தான் கொடுத்தேன்னு சொல்றது சரியா...''
கோபத்துடன் சீறியது கொழுத்த உருவம்.
''நீங்க கான்ஸ்டபிளுக்கு கொடுத்தது நல்ல நோட்டாகவே இருக்கட்டும்...'' என்று கூறி முடிப்பதற்குள், ''அதான், பணம் எதுவும் கொடுக்கலன்னு சொல்றேன் இல்ல...'' என்று இடைமறித்தது கொழுத்த உருவம்.
''பல மாதம் காத்திருந்து தான் உங்களை பொறி வெச்சு பிடிச்சிருக்கோம்; உங்க வண்டிய சோதனை போடணும்...''
''நான் யாரு... என்னோட அரசியல் செல்வாக்கு என்னன்னு தெரியுமா; வீணா வம்புல மாட்டிக்காதீங்க; சாவியை கொடுங்க; அவசரமா போகணும்...''
மிரட்டலாக பேசியது கொழுத்த உருவம்.
''உங்க ஜாதகமே, எங்ககிட்ட இருக்கு... உங்க மேலிடம் எங்க கஸ்டடியில வந்தாச்சு; உங்கள கையும் களவுமா பிடிக்கத்தான், கொட்டும் பனியிலே காத்திருந்தோம்...''
கொழுத்த உருவத்தை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர் போலீசார்.
குழந்தைகளே... சமூக விரோத செயலில் ஈடுபடுபவர் கண்டிப்பாக அகப்பட்டே தீருவர்; நல்ல செயலே நாட்டுக்கும், வீட்டுக்கும் நன்மை தரும்!
- அ. பாலசுந்தரம்