ஜன., 28 ரத சப்தமி
ஒரு விநாடி கூட ஓயாமல், 24 மணி நேரமும், காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருப்பவர் யார் தெரியுமா? சூரிய பகவான் தான்.
பஞ்சாங்கத்தில் திதி என்ற ஒரு பகுதி இருக்கும். அமாவாசை முதல் சதுர்த்தசி வரை, 15 திதிகள், வளர்பிறை சார்ந்தவை. பவுர்ணமி முதல் சதுர்த்தசி வரை உள்ள, 15 திதிகள், தேய்பிறை சார்ந்தவை.
ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. பிரதமை, அஷ்டமி, நவமி போன்ற திதிகளில், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. திதிகளில் ஏழாவதாக வரும் சப்தமி சுப நிகழ்ச்சி நடத்த ஏற்றது. அதிலும் தை மாதம் வரும் வளர்பிறை சப்தமி திதி, மிகவும் முக்கிய வாய்ந்தது. இதை, 'ரத சப்தமி' என்பர்.
சப்தமி திதியின் அதிபதி, சூரிய பகவான். தை முதல் தேதியில், சூரியனின் ரதம் வடக்கு நோக்கிய பயணத்தை துவங்குகிறது. தை வளர்பிறை சப்தமியன்று தான், அந்தப் பாதையில், தன்னை நிலை நிறுத்துகிறது. இதனால், இதற்கு ரத சப்தமி என பெயர் வைத்தனர்.
ரத சப்தமியை சூரியனின் பிறந்த நாள் என்பர். சப்தமியை தன் பிறந்த திதியாக சூரியன் கொள்வதற்கு காரணங்கள் உண்டு. வளர்பிறை சப்தமியில் பிறந்தவர்கள், பயணம் செய்வதற்கு மிகவும் விரும்புவர். ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி.
சூரிய பகவானைப் பொறுத்தவரை, இது, 100 சதவீதம் பொருந்தும். அவர், தீபாவளி, பொங்கல், பனிக்காலம் மற்றும் மழையிலும் ஒளிர்வார். விடுமுறை எடுக்காத இவரது பயணம், ஒரு நொடி கூட நிற்பதில்லை.
பயணம் செய்யும் போதே, தாவரங்களுக்கு தன் ஒளி மூலம் உணவளிப்பவர். அதிலிருந்து கிடைக்கும் உணவு வகைகள், உலகிலுள்ள அத்தனை ஜீவன்களின் பசியையும் தீர்க்கிறது. இது ஒரு மாபெரும் சேவை. அது மட்டுமல்ல, இவர் கண்கண்ட தெய்வமும் கூட.
சிவன், பார்வதி மற்றும் திருமாலை, நாம் மனக்கண்ணால் தான் தரிசிக்க முடியும். கோவில்களுக்கு போனால், சிலை வடிவில் பார்க்கலாம். ஆனால், நம் கண் முன் தினமும் தெரிபவர், சூரியன்.
ரத சப்தமியன்று திருப்பதியில், அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஏழு வாகனங்களில் உலா வருவார், பெருமாள். ஒரே நாளில், ஏழு சப்பர பவனி என்பது, இங்கு மட்டுமே நடக்கிற விசேஷம்.
சப்தமி திதிக்கு மற்றொரு சிறப்பம்சம் உண்டு. இவர்கள், கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். இலக்கணப் புலமை மிக்கவர்கள். சூரியன் அனைத்து இலக்கணமும் அறிந்தவர். இவருக்கு, வியாகரண பண்டிதர் என்ற பட்டம் உண்டு. வியாகரணம் என்றால், இலக்கணம்.
இதனால் தான் சூரியனை, தன் குருவாக ஏற்றார், அனுமன். இதன் மூலம் சகலகலாவல்லவர் என்ற பெயர் பெற்றார். சூரியனை வணங்கினால், உடல் நலமும் நன்றாக இருக்கும்.
உலகத்தின் முதல்வரான. சூரிய பகவானை அவரது பிறந்த நாளான, ரத சப்தமியன்று வணங்கி, அருள் பெறுவோம்.
தி. செல்லப்பா