பஸ்சில் சிறார்களை அழைத்துச் செல்கிறீர்களா?
பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு நிறுத்தத்தில், 12 வயது மதிக்கதக்க சிறுவனும், அவன் தந்தையும் ஏறினர். அந்த நபர், என் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் அமர்ந்து, சிறுவனை, பின்னால் அமர்ந்திருந்த முதியவரின் பக்கத்தில் இருந்த காலி சீட்டில் அமர சொன்னார்.
பஸ் சிறிது துாரம் வந்ததும், 'நான் அவரிடம் இருக்க மாட்டேன்...' என, தந்தையிடம், புலம்பினான், சிறுவன். காரணம் கேட்டபோது, அவன் கூறவில்லை.
'நீ இந்த அங்கிளிடம் இருந்து கொள்; நான் அவரிடம் போய் உட்கார்ந்து கொள்கிறேன்...' என்றார், சிறுவனின் அப்பா. 'அப்பா... அவரிடம் போக வேண்டாம்; அவர் கையை வைத்து நோண்டுவார்...' என்றான். அதை கேட்டு, அதிர்ச்சியடைந்தோம்.
மறுகணமே, அந்த முதியவரின் சட்டையை பிடித்து, 'யோவ், பெரிய மனுஷனா நீ. உன் வீட்டு குழந்தைகளிடம் இப்படியா நடந்து கொள்வாய்...' என கேட்டார், சிறுவனின் தந்தை. பஸ் ஓரம் கட்டப்பட்டது. தர்ம அடி கொடுத்து, அவர் மீது காரித் துப்பினர், சக பயணியர்.
இதனால், பெரும் அவமானமடைந்த அந்த நபர், பஸ்சை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். சிறார்களை அழைத்து வருபவர்கள், எங்கு காலி இருக்கை இருக்கிறதோ அங்கு அமர வைப்பதுண்டு. அப்படி அமர வைக்கும்போது, சில ஜந்துகள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றன.
தோழர்களே, தோழியரே... இதை, மனதில் கொண்டு, சிறார்களை அழைத்துச் செல்கையில் சுதாரிப்போடு இருந்து கொள்ளுங்கள்.
ப.சிதம்பரமணி, கோவை.
தோழியின் சூப்பர் ஐடியா!
நீண்ட நாளுக்கு பின், தோழியை சந்திக்க, கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்றிருந்தேன்.
ஏற்கனவே தகவல் தெரிவித்து சென்றதால், முறுக்கு, முந்திரி பக்கோடா, இனிப்புகள், குழந்தைகளுக்கு சாக்லேட் என, எங்கள் முன் வைத்தாள். அவை, சுவையாக இருந்த போதும், அனைத்தையும் சாப்பிட முடியாமல், கொஞ்சமாக சுவைத்தோம்.
கிளம்பும் போது, தட்டில் மீதம் வைத்திருந்த தின்பண்டங்களை, தனித்தனியாக, 'பேக்' செய்து, எங்களிடம் கொடுத்து அனுப்பினாள், தோழி.
'விருந்தினர்களை உபசரிக்கும் போது, தட்டில் தாராளமாக நிறைய தின்பண்டங்களை வைப்போம். அவர்கள் சாப்பிட்டு மீதம் வைப்பதை என்ன செய்வதென்று, எப்போதுமே ஒரு குழப்பம் ஏற்படும்.
'பிறர் மீதம் வைத்ததை சாப்பிடவும் நமக்கு பிடிக்காது; வீணாக்கவும் மனசு வராது. எனவே, அவர்கள் சாப்பிட்டது போக மீதத்தை, 'ஜிப் லாக்' கவரில், 'பேக்' செய்து, அவர்கள் போகும் போது கொடுத்து அனுப்பி விடுவேன். தின்பண்டங்களும் வீணாகாது...' என, விளக்கமளித்தாள்.
இப்போது, நானும் இந்த முறையை பின்பற்றி வருகிறேன். நீங்களும் முயற்சிக்கலாமே!
பிளாரன்ஸ் ரவி, சென்னை.
புதுவித ஏமாற்று!
சமீபத்தில் எங்கள் பகுதிக்கு, நடுத்தர வயதுடைய நான்கு பேர், சரக்கு வாகனம் ஒன்றில் வந்தனர். ஊர் பொது இடத்தில், கூடாரம் போட்டு, தற்காலிக கொல்லன் பட்டறை அமைத்தனர். பழைய பித்தளை பாத்திரங்களை, மிகக் குறைந்த கட்டணத்தில் பாலீஷ் செய்து தருவதாக கூறி, வீடு வீடாக வந்து வாங்கினர்.
முதலில், சிறு சொம்பு, தாம்பாளத் தட்டுகளை வாங்கி, மறுநாள் பாலீஷ் செய்து தந்தனர். அது, எல்லாருக்கும் திருப்தி தரவே, பெரிய பித்தளை அண்டா மற்றும் தவலைகளை பாலீஷ் செய்ய கொடுத்தனர், ஊர் மக்கள்.
மறுநாள் பார்த்தால், அங்கு கூடாரமும் இல்லை; அவர்களும் இல்லை. தாமதமாகத்தான் எல்லாருக்கும் புரிந்தது. 'ஒருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவன் ஆசையை துாண்டணும்...' என்ற, திரைப்பட வசனம் தான், ஞாபகத்திற்கு வந்தது.
குறைந்த கட்டணத்தில் முதலில் சின்ன பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டுத் தந்து, ஆசையை துாண்டி, பெரிய பாத்திரங்களை கொடுக்க வைத்து, அவற்றை மொத்தமாக ஆட்டையை போட்டு, 'எஸ்கேப்' ஆகியிருக்கின்றனர். இப்போது, காவல் நிலையத்தில் புகாரளித்து, காத்திருக்கின்றனர், ஏமாந்தவர்கள்.
வாசகர்களே... நம் ஆசையை துாண்டுபவர்களிடம், எச்சரிக்கையாக இருந்து விலகி வந்தால் மட்டுமே, ஏமாறுவதிலிருந்து தப்பிக்க முடியும்.
-எஸ்.அலமேலு, கள்ளக்குறிச்சி.