'நாங்கள் அடுத்து தயாரிக்கும், முரட்டுக்காளை படத்தில், வில்லனாக நடிக்கிறீர்களா?' என, கேட்டார், ஏவி.எம்.சரவணன்.
'சரவணன், உங்கள் நிறுவனத்தை விட, உங்கள் மீது நான் மதிப்பும், மரியாதையும் கொண்டவன். என் வளர்ச்சியில் உங்களை விட அக்கறை கொண்டவர் வேறு யாரும் இருக்க முடியாது.
'முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் போன்ற, என் நலன் விரும்பிகள் உருவாக்கும் படத்தில், என் புகழுக்கு சிறு களங்கமும் ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நடிக்கிறேன்.
'அதுவும் இல்லாமல், நான் கதாநாயகனாக நடித்த, காயத்ரி படத்தில், ரஜினி வில்லன். இப்ப, அவர் கதாநாயகனாக நடிக்கும், முரட்டுக்காளை படத்துல, நான் வில்லன். உங்களை மாதிரி நல்ல உள்ளங்களுக்காகவும், ரஜினிக்காகவும், இந்த படத்துல நான் வில்லனா நடிக்கிறேன். சந்தோஷமா...' என்றதும், நெகிழ்ந்தார், சரவணன்.
மறுதினம், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை அழைத்த ஏவி.எம்.சரவணன், 'ஜெய் சார் வெறும் சினிமா கதாநாயகன் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவர் சினிமாவில் சாதித்ததும் அதிகம். 170 படங்களில், 'ஹீரோ' ஆக நடித்தவர்; நம் மீது இருக்கும் மதிப்பால் இதற்கு சம்மதிக்கிறார்.
'அதை கவனத்தில் வைத்து, ரஜினிக்கு இணையான முக்கியத்துவம் அளித்து, கதாபாத்திரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அவருடைய, 'இமேஜ்' பாதிச்சுடாம சண்டைக் காட்சிகளை அமைக்கணும்...' என்றார்.
ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்திடம், படக்குழு இதைச் சொன்னபோது, 'ஜெய், ஜேம்ஸ்பாண்ட் வேடங்களில் நடித்த, இரு வல்லவர்கள் உள்ளிட்ட, 'மாடர்ன் தியேட்டர்ஸ்' படங்களுக்கு, சண்டைக் காட்சிகளை அமைத்தவன், நான். அப்படிப் பட்டவருக்கு கவுரவக் குறைவு ஏற்படும்படியான எந்த ஒரு சண்டைக் காட்சியையும் அமைக்க மாட்டேன்...' என சொல்லி, நெகிழ்ந்தார்.
முரட்டுக்காளை படம், திரையிட்ட இடங்களில் எல்லாம் அமோக வெற்றி. 100 நாட்களை தாண்டி ஓடியது. ஜெய்சங்கரின் புதுமையான, குணசித்திரம் கலந்த வில்லன் பாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.
தங்களின் ஆதர்ச நாயகன் வில்லன் ஆனதில், கன்னத்தில் கை வைத்துக் கொண்ட ரசிகர்கள், படத்தை பார்த்த பிறகு பிரமித்தனர்.
முரட்டுக்காளை படத்தின் வெற்றியால், ஜெய்சங்கரின் வீடு, மீண்டும் தயாரிப்பாளர்களால் முற்றுகையிடப்பட்டது. வில்லன் மற்றும் குணசித்திர வேடங்கள் ஜெய்சங்கருக்கு வந்தன. காலத்திற்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொண்ட மக்கள் கலைஞரை, பாராட்டித் தள்ளின, பத்திரிகைகள்.
புகழின் உச்சியில் இருந்த போதே, புதியவர்களை ஊக்குவிக்கும் உள்ளம் கொண்டிருந்த ஜெய், இறுதி வரை அப்படியே இருந்தார்.
கடந்த, 1980களின் மத்தியில், திரைப்பட கல்லுாரி மாணவர்கள் என்ற அலை, சினிமாவில் வீசத் துவங்கியது. திரைப்படக் கல்லுாரி மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, ஊமை விழிகள் என்ற படத்தை தயாரித்தனர்.
படத்தில் நடிக்க கலைஞர்களை அணுகியபோது, யாரிடமிருந்தும் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆபாவாணன் இயக்கிய இந்த படத்தில், புரட்சிகரமான வேடம் ஒன்றுக்காக, பிரபல நடிகரை அணுகினர்.
பலமுறை மாணவர்களை அலைக்கழித்த நடிகர், 'என்னய்யா திரைப்படக் கல்லுாரிங்கறீங்க... பல வருஷங்கள் பெரிய டைரக்டர்கிட்ட வேலை கத்துக்கிட்டவனே இங்க டப்பா படத்தைத்தான் தர்றான். படிச்சுட்டு படம் எடுக்கப் போறேன்கறீங்க. படம் சக்சஸ் ஆச்சுன்னா, அடுத்த படத்துக்கு, 'கால்ஷீட்' தர்றேன்...' என, கிண்டலான சிரிப்புடன் அனுப்பி வைத்தார்.
அடுத்ததாக, சம்பளத்தைக் கூட்டித் தந்தாவது ஜெய்சங்கரின் சம்மதத்தை பெறுவது என்பது, அவர்களின் திட்டம். படத்தின் கதையை கேட்ட ஜெய்சங்கர், 'சம்பளத்தை பிறகு பேசிக்கலாம். படப்பிடிப்பை எப்ப துவங்குறீங்க...' என, இன்ப அதிர்ச்சி தந்தார்.
எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தோல்வியடைந்ததால், அவநம்பிக்கை அடைந்த தன் சகாக்களுக்கு புத்துயிர் ஊட்ட, 'தோல்வி நிலையென நினைத்தால்...' என்ற பாடல், படத்தில் முக்கியத்துவம் பெற்ற காட்சி. அதில், ஜெய்சங்கரின் பண்பட்ட குணசித்திர நடிப்பு, மக்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது.
இதே காலகட்டத்தில் பாசில் இயக்கிய, பூவே பூச்சூடவா படத்தில், நதியாவின் தந்தையாக உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார், ஜெய் சங்கர். நீண்ட நாட்களுக்கு பிறகு, தளபதி படத்தில், ஸ்ரீவித்யாவின் கணவராக, ரஜினியின் தந்தையாக குணச்சித்திரப் பாத்திரம்.
கடந்த, 1980களில் அவர், 'ஜெய் ஜாய் நைட்ஸ்' என்ற கலைக் குழுவை துவங்கி நடத்தினார். இதன் நோக்கங்களில் ஒன்று, சினிமா வாய்ப்பு குறைந்த கலைஞர்களுக்கு, வருமானத்துக்கு வழி ஏற்படுத்தித் தருவது. மற்றொன்று, நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை, கருணை இல்லங்களுக்கு வழங்குவது.
'ஜெய் ஜாய் நைட்ஸ்' குழு மூலம், சுமார், 250க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில் உடல்நலம் ஒத்துழைக்காத போது, அதை நிறுத்தி விட்டார்.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை ஜெய்க்கு வழங்கிய விருது...
-தொடரும்.
மகன்களின் படிப்பில் எப்போதும் அக்கறை காட்டுவார், ஜெய். பொதுவாக, நடிகர்களின் பிள்ளைகள் சினிமாவுக்கே வரும் வழக்கமான விஷயத்தை தகர்த்தெறிந்தார். சினிமா மாயைக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளாதபடி, குழந்தைப் பருவத்திலிருந்தே ஜாக்கிரதையாக வளர்த்தெடுத்தார்.ஜெய்சங்கரின் பிள்ளைகள் விஜய்சங்கர், சங்கீதா, சஞ்சய். மூவரும், படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தனர். தனக்கு பிறகு, பிள்ளைகளும், மனிதநேய பணிகளை தொடர வேண்டுமென விரும்பினார். அறிவுரையாக கூறி வைக்காமல், கட்டாயப் பணியாக்க விரும்பினார். மூத்த மகன் விஜய்சங்கர், கண் மருத்துவர். இளைய மகன் சஞ்சய், பொறியாளர். மகள் சங்கீதா, பொது மருத்துவர்.ஏறக்குறைய, 100 படங்களுக்கு மேல் நடித்த, தந்தையின் படப்பிடிப்பையே, தங்கள் வாழ்நாளில் அவர்கள் அரிதாகத்தான் பார்த்திருப்பர். தந்தையின் நண்பர்களான, சிவகுமார், அசோகன், ரஜினி முதல் நாசர் வரை, தங்கள் வீட்டில் தான் பார்த்திருந்தனர்.
இனியன் கிருபாகரன்