பா - கே
சென்னை, மெரினா, 'பீச்'சில் நடை பயிற்சிக்கு சென்ற லென்ஸ் மாமா, வழக்கம் போல், என்னையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்.
சிறிது துாரம், அவருடன் நடந்த நான், நடுவில், 'மாமா, நீங்க போயிட்டு வாங்க...' என்று கூறி, காந்தி சிலை அருகில் இருந்த, இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போது, கதர் வேட்டி - ஜிப்பா, தலையில் காந்தி குல்லா அணிந்தபடி, கைத்தடியை ஊன்றியபடி பெரியவர் ஒருவர், என் அருகில் வந்து அமர்ந்தார்.
அவரைப் பார்த்ததுமே, அடையாளம் தெரிந்து கொண்டேன். அவர், சுதந்திரப் போராட்ட வீரர், காங்கிரஸ் தொண்டர் மற்றும் காமராஜர், கக்கன் ஆகியோருடன் நெருங்கி பழகியவர். அவரை பலமுறை சந்தித்துள்ளேன்.
கண் பார்வை குறைந்ததால், என்னை அடையாளம் தெரியவில்லை போலிருக்கு. புருவத்தின் மீது கை வைத்தபடி, 'யாரு?' என்று கேட்டு என்னை உற்றுப் பார்த்தார்; குரலில் அதே கம்பீரம்.
என் பெயரை கூறியதும், புரிந்து கொண்டார்.
'நடை பயிற்சிக்கு வந்தேன். திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, பேரன் வருவதாக சொல்லியிருக்கிறான்...' என்றார்.
மாமா வருவதாக தெரியவில்லை. 'அதுவரை, இவருடன் பேசலாமே...' என்று நினைத்து, 'ஐயா, உங்களைப் போன்ற தியாகிகளால் தான், நாங்க சுதந்திரமாக, சந்தோஷமா இருக்கிறோம்...' என்றேன்.
'அட போப்பா... நாட்டுக்கு நாங்க செய்த கடமை அது... அதுக்கு பாராட்டு எதற்கு? காமராஜருக்கு கூட பாராட்டு என்றாலே பிடிக்காது...' என்றவர், பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்:
காமராஜர் முதல்வரா இருந்த காலம்.
திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டிக்கு பக்கத்துல உள்ள, கடம்பூர்ல, ஒரு பள்ளி சீரமைப்பு மாநாடு நடக்க இருந்தது. அந்த பக்கத்துல உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் அதில் கலந்து கொள்வதற்கும், கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஊர் பூரா விழாக்கோலம்.
மறுநாள், மாநாடு நடக்க இருந்தபோது, முதல் நாளே மழை பிடிச்சுக்கிட்டது, மறுநாளும் அது விடாம பெஞ்சுக்கிட்டிருந்தது.
காமராஜர், காலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு, சாயந்தரமா கடம்பூருக்கு வந்து சேர வேண்டியவர். மழையால் நிகழ்ச்சி ரத்தாயிடுமோன்னு எல்லாரும் சந்தேகப்பட்டுக்கிட்டு இருந்தாங்க.
கோவில்பட்டி பயணிகள் விடுதியில தங்கி இருந்தார், காமராஜர். கடம்பூரிலிருந்து சிலர் போய் அவரை சந்திச்சு, 'மழை பெஞ்சுக்கிட்டிருக்கே, என்ன செய்யலாம்...'ன்னு கேட்டாங்க.
'மழை பெஞ்சா நல்லது தானே... அதுக்காக, மாநாட்டை எதுக்காக ரத்து செய்யணும்? ஆசிரியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஏற்பாடு பண்ணின மாநாடு... கட்டாயம் போயே ஆகணும்...'ன்னு புறப்பட்டு விட்டார், காமராஜர்.
மழையைப் பொருட்படுத்தாத மக்கள் கூட்டம், காமராஜர் வருகைக்காக, கலையாம காத்துக்கிட்டு இருந்தாங்க.
காமராஜர் வந்துட்டார்ன்னு தெரிஞ்சதும், ஜனங்களுக்கு ஏகப்பட்ட உற்சாகம்.
மாநாடு ஆரம்பமாகி, மலர் மாலைகள் மலை மாதிரி குவிய ஆரம்பிச்சுது. வரிசையா ஒவ்வொரு கல்வி நிலையம் சார்பாவும் வரவேற்பு பத்திரம் வாசிச்சாங்க. என்ன வாசிக்கிறாங்கங்கிறதை கூர்ந்து கவனிச்சார், காமராஜர்.
ஏகப்பட்ட புகழ் மொழிகள்.
பொறுமை இழந்த காமராஜர், 'போதும் போதும்... உங்க எல்லாரையும் பார்த்து, ரெண்டு வார்த்தை பேசிட்டு போகத்தான் வந்தேன். எல்லாரும் மழையில சிரமப்பட்டு நின்னுக்கிட்டிருக்கீங்க... இப்படி என்னை புகழ்ந்து படிச்சுக்கிட்டே இருந்தா எப்படி...'ன்னு கேட்டு, பேசி முடிச்சார்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிஞ்சதும், இன்னொரு நிகழ்ச்சியில கலந்துக்கறதுக்காக புறப்பட்டார். ஒரு திறந்த ஜீப்புல, அவரை ஊர்வலமா அழைச்சுக்கிட்டு போனாங்க.
தெருவுல ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட கூட்டம். அங்கங்கே ஜீப்பை நிறுத்தி, ரோஜா மாலை, ஜரிகை மாலைன்னு போட்டுக்கிட்டே இருந்தாங்க. அதையெல்லாம் அப்படியே வாங்கி, அங்கங்கே நின்னுக்கிட்டிருந்த குழந்தைகள் கிட்டேயும், தாய்மார்கள்கிட்டேயும் கொடுத்துட்டு போனார்.
அந்த சமயத்துல, கூட்டத்துக்கு அப்பால, ஒரு பெரியவர், கையில் ஒரு மல்லிகை சரத்தோட நின்னுக்கிட்டிருக்கார். அவரால முண்டியடிச்சுக்கிட்டு முன்னால வர முடியல. இதை கவனிச்சிட்டார், காமராஜர்.
டிரைவரிடம், 'வண்டியை நிறுத்துப்பா...'ன்னு சொல்லி, 'அதோ, அங்கே ஒருத்தர் நிற்கிறார் பாரு... அவரை இங்கே அழைச்சுக்கிட்டு வா...' என்கிறார்.
அந்தப் பெரியவரை கிட்டத்துல அழைச்சுக்கிட்டு வந்ததும், அவரைப் பார்த்து, 'வாங்க... நல்லா இருக்கீங்களா...'ன்னு சத்தம் போட்டு உற்சாகமா விசாரித்தார், காமராஜர்.
பெரியவர் கண்களில் கண்ணீர், பேச்சு வரலை. மல்லிகைச் சரத்தை அவருக்குப் போட்டார்.
கொஞ்ச நேரம் அவருகிட்ட பேசி, அவரை அனுப்பி வைத்தார், காமராஜர்.
பெரியவர் போனதுக்கப்புறம், பக்கத்துல இருந்தவங்ககிட்ட, அந்தப் பெரியவரை பற்றி, 'அந்தக் காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டவர். சுதந்திர போராட்டத்தில், ஜெயிலுக்கு போனவர்...'ன்னு ரொம்ப உருக்கமா, நெகிழ்ந்து சொன்னார், காமராஜர்.
இதுல ஒரு விஷயத்தை கவனிங்க.
தன்னைப் புகழ்ந்து படிக்கப்பட்ட வாழ்த்து மடலை படிக்க வேணாம்ன்னு தடுத்து நிறுத்தியவர், காமராஜர். ஆனால், எங்கோ ஒரு மூலையில், கையில நாலு முழ மல்லிகை சரத்தோட ஒதுங்கி நின்னுக்கிட்டிருந்த அந்த தொண்டரை, அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவில கண்டுபிடிச்சு, கிட்டத்துல கூப்பிட்டு, அவரு கொடுத்த அன்பு மாலையை வாங்கி கழுத்துல போட்டுக்கிட்டார்.
அதுதான் காமராஜர்.
தோல்விகள் கூட அவரை கொஞ்சமும் பாதிச்சதில்ல. ஒரு பொதுத் தேர்தல்ல அவர் தோத்துப் போறார். தொண்டர்கள்லாம் அழறாங்க. அதுல ஒருத்தர் மெதுவா காமராஜர்கிட்ட போயி, 'என்ன தலைவரே... நீங்க கூட தோத்துப் போயிட்டீங்களே...'ன்னு கலக்கமா சொல்லியிருக்கார்.
அதுக்கு, 'நான் கூட தோத்துப் போறத்துக்குப் பேர் தான் ஜனநாயகம்...' என்றாராம், காமராஜர்.
அவர் சொல்லி முடிக்கவும், 'தாத்தா போலாம்...' என்றவாறு, அவரது பேரன் அழைத்தான்.
லென்ஸ் மாமா வரவும், நானும் கிளம்பினேன்.