* சி. முருகன், நெல்லை: என் நண்பன் ஒருவன், எதிலும் திருப்தி இல்லாதவனாக இருக்கிறானே...
அவரிடம், 'எதிலும் திருப்தியாக உள்ளவரை, யாராலும் வெல்ல முடியாது...' என்ற அறிவுரையைக் கூறுங்கள்!
எஸ். மதன், துாத்துக்குடி: அனுபவ நிஜத்தை, யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்?
அறுபதும், அதற்கு மேல் உள்ள வயதினர் சொல்வது நிஜம். அதை சின்ன வயதுடையவர் கேட்டால், ஜெயிப்பது நிச்சயம்!
* ஆர். பாலாஜி, கோவை: மனிதனின் பெருமை எங்கு இருக்கிறது?
மனிதனின் பெருமை, அவனது தொழிலையோ, பதவியையோ பொறுத்ததில்லை... அவன் செய்கிற தொண்டை பொறுத்தே அமைகிறது!
எஸ். கணேசன், சென்னை: வாழ்க்கையில் வெற்றி அடைய சில வழிகளைக் கூறுங்களேன்...
உழைப்பு, ஒழுக்கம், ஊக்கம், நேர்மை, மனிதநேயம் இருக்க வேண்டும். அவை இருந்தால், வாழ்வில் வெற்றி வந்தடையும்!
மு. ராம்குமார், நெல்லை: 'அந்த மாதிரி' சர்வே ஏதும் உள்ளதா?
இதே மாதிரி கேள்வி, நிறைய வாசகர்களிடமிருந்து வந்து விட்டது... நான் பதில் சொல்லி, நிறைய மாதங்களாகி விட்டது. இதோ, 'அந்த மாதிரி' சர்வே...
'தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில், 1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்களிடம் எடுத்த கணக்கெடுப்பில், பெண்கள், 3.1 சதவீத ஆண்களிடமும், ஆண்கள், 1.8 சதவீத பெண்களிடமும் உறவு வைத்துக் கொள்கின்றனர்...' என, தெரிய வந்துள்ளது!
மு.க. சதீஷ்குமார், சென்னை: என் மனைவி, என் பார்வைக்கு, எப்போதும் அழகாக தெரிகிறாளே...
மனைவி மீது மிகவும் அன்புடன் இருந்தால், அப்படித்தான் தெரிவார்... 'கீப் இட் அப்!'
ம. ரெங்கராஜன், மதுரை: கூட்டணியில் இருந்து கொண்டு, 'தியேட்டர்கள் ஒரு நபர் கையில் சென்றால் என்னாவது...' என்று, சினிமா விழாவில், திருமாவளவன் பேசியிருப்பது பற்றி...
பா.ம.க., இப்போது, தி.மு.க.,வின் பக்கம் சாய முயற்சிப்பதால், இப்படி பேசி இருக்கிறார்!