புதுச் செருப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:00

புது ஸ்கூல் சற்று தொலைவில் இருந்தாலும், நடந்து போகிற பாதை மகேசனுக்கு பிடித்திருந்தது.

முந்தைய இரண்டு ஆண்டுகளும், 'கோவிட், லாக்டவுண்' என்று, படித்தும், படிக்காமலும், பரிட்சை எழுதியும், எழுதாமலும், நண்பன் வீட்டில் போய், 'ஆன் லைன்' வகுப்புகள் என்று கடந்து போனதில், அப்பாவுக்கு வருத்தம்.

நல்ல பள்ளியில் தான், மகன் படிக்க வேண்டும் என்று தீர்மானமாய், தன் சக்திக்கு மீறி மத்திய வர்க்க வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்தார்.

வேடிக்கை பார்த்தபடி, கடை வீதி முழுக்க நடந்து போவது அவனுக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக, அந்த காலணி, 'ஷோ ரூம்!'

தெருவிலிருந்து ஏழெட்டு பெரிய நீண்ட படிகள் ஏறிய பின், உள்ளே நுழையும் பெரிய கண்ணாடி கதவு. இரண்டு பக்கமும், 'ஷோகேஸ்'களுக்குள் சின்ன கண்ணாடி தட்டுகளில் விதவிதமான செருப்பு, ஷூ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள்.

பழைய செருப்புகளை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, விதவிதமான செருப்புகளைப் பார்த்து ரசிக்கத்தான் முடிந்தது. ஆயிரக்கணக்கில் விலை என்றால், எங்கே போக...

புது பள்ளியின் யூனிபார்ம் மற்றும் பொருட்களை வாங்கவே திண்டாடினார், அப்பா.

நல்ல வேளை, ஷூ, சாக்ஸ் என்று, இப்பள்ளியில் காலணி கட்டுப்பாடுகள் இல்லை.

கீழ்ப்படியில் உள்ள செருப்புகளை ஆசையுடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான், மகேசன். டீ குடித்து விட்டு வந்த காக்கிச்சட்டை வாட்ச்மேன், மகேசனின் முதுகுக்குப் பின் இருந்த பெரிய புத்தகப் பையைப் பார்த்ததும், சற்று மரியாதையாக அதட்டினார்.

'ஸ்கூலுக்கு நேரமாயிடப் போவுது போ போ...' என்றார்.

ஸ்கூல் போகும்போதும், வரும்போதும், கண்ணாடித் தட்டுகளில் மின்னும் புது வரவு செருப்புகளை சில நொடியாவது நின்று, பார்த்துப் போவான்.

'நடந்து போறதால, நம்ம புள்ள சீக்கிரமே ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டியிருக்கு. அவனுக்கு, ஒரு பழைய சைக்கிளு ஏதும் கெடச்சா வாங்கிக் கொடுங்களேன்...' என்று அப்பாவிடம், சிபாரிசு செய்தாள், அம்மா கற்பகம்.

'பணத்துக்கு எங்க போறது, கற்பகம்?'

ஆண்டு முடிவில், கணக்குப் பரீட்சை முடிந்து, மதியம் அவன் வீடு திரும்பியபோது, அவர்களது வீட்டு வாசலில், சுமாரான பழசிலிருந்த ஒரு சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தார், அப்பா.

வாசலில் அவன் தலை தெரிந்த உடனே, ''அண்ணா, உனக்கு சைக்கிளு வாங்கியிருக்காரு அப்பா,'' சந்தோஷத்தில் கத்தினாள், செல்வி.

நரைத்த தலை, உடம்பு தளர்ந்து போன அப்பா, ஆவலோடு சைக்கிளை மாய்ந்து மாய்ந்து துடைத்துக் கொண்டிருக்க, அருகில் போய் நின்றான்.

''புடிச்சிருக்கா மகேசு... 'பழசு தான். ஆனா, நல்ல கண்டிஷன்ல இருக்கு'ன்னு, நம்ம கண்ணப்பன் அண்ணன் தான் வாங்கிக் கொடுத்தாரு.''

''எவ்வளவு ரூபா?''

''அதைப் பத்தி உனக்கென்ன?'' என்றபடி மெல்ல எழுந்து, அவன் தலையை லேசாகத் தட்டி உள்ளே போனார்.

''எனக்கு ஒரு வா காபி கொடேன், கற்பகம்.''

ஆசையோடு சைக்கிளை சுற்றி வந்து தொட்டு தடவி, ஹாண்டில் பாரை வளைத்தவனிடம், ''எனக்கு, சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுக்குறியா அண்ணா,'' என்றாள், செல்வி.

''இந்தாடி, முதல்ல அவன் கத்துக்கட்டும். நீ, முதல்ல, 8ம் கிளாசை முடி,'' அம்மாவின் குரல் கேட்டது.

''உன்னையும் தான் மகேசு... இத்தினி நாளு, 50 மார்க்கு தாண்டாமத்தான் ஏதோ பாஸ் பண்ணிட்டு வந்திருக்கே. இன்னும் ரெண்டு வருஷம், நிறைய மார்க்கு எடுத்தாத்தான் காலேஜுக்கெல்லாம் போக முடியுமாம்... காவேரி டீச்சர், உன்னாண்ட சொல்லச் சொன்னாங்க,'' என்றாள், அம்மா.

ஸ்கூலுக்குப் போகும்போது, ஒரு காலை தரையில் ஊன்றி, சைக்கிளை நிறுத்தி, அந்தக் கடையின், 'ஷோ கேஸ்'களை சில நொடிகள் பார்த்து விட்டுப் போக ஆரம்பித்தான்.

பழைய வாட்ச்மேன் போய், இளம் வயது வாட்ச்மேன் சந்தேகத்துடன் பார்த்ததில், அவனால் நின்று கவனிக்க முடியாமல் போயிற்று.

ஆனால், சைக்கிளை மெல்லச் செலுத்தி, 'ஷோ கேஸ்' மேல் ஒரு பார்வையை வீசி விட்டுத்தான் செல்வான். அந்த சில நொடிகளுக்குள், புது வரவுகள் மனதில் பதிந்து விடும்.

இரண்டு வார விடுமுறைக்கு பின், அன்று பள்ளி ஆரம்பம்.

காலணி, 'ஷோரூம்' வாசலில், 'சேல்... சேல்...' என்ற போஸ்டர்களைப் பார்த்து ஆவலானான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், சைக்கிளை பூட்டி விட்டு, கடைப் படிகளில் ஏறினான்.

பல நாட்களாக பார்த்து வரும் கடைக்குள் முதல் நுழைவு. சிலீரென்ற, 'ஏசி' குளிர். மெல்லிசாகப் பரவியிருந்த இனிய வாசம்.

மகேசன் கையில், வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே. அதை, அவன் உடல் மொழியிலேயே உணர்ந்தாரோ என்னவோ, சந்தேகமாக, ''என்ன வேணும் தம்பி?'' என்றார், கடைக்காரர்.

கேட்டதும், பதில் சொல்லத் தெரியவில்லை. ஆங்காங்கே பெரிய தனித்தனி மேஜைகளில் ஆண், பெண், குழந்தைகளின் செருப்புகள், ஷூக்கள், தள்ளுபடி, 20 சதவீதம் மட்டுமே.

சுற்றிச் சுற்றி வந்து பார்த்தபின், அடர் காபி கலரில், உறுதியான சோல், கட்டை விரலுக்கு உறுத்தாத கெட்டிப் பிடிப்பு. குறுக்கில் இரட்டை வரி ஸ்ட்ராப்கள், உயர்வான தோலில் செய்த ஒரு ஜோடி செருப்பு, பார்க்கவே கம்பீரமாக இருந்தது.

அவனுக்கு பிடித்துப் போயிற்று. ஆனால், அது தள்ளுபடி கூட்டத்தில் இல்லை. விலை, 1199 ரூபாய் என்று குறிப்பிட்டிருக்க, அப்படியே வைத்து விட்டான்.

அருகில் வந்த கடைக்காரர், ''போட்டுப் பார்க்கணுமா, என்னா சைஸ் சொல்லு தம்பி,'' என்றார்.

''இல்லைங்க... அப்புறமா வரேன்,'' என்றான்.

ஒரு மாதத்திற்குள்ளாகவே, மீண்டும் அந்தக் கடைக்குள் நுழைய வாய்ப்புக் கிடைத்தது. கடையின் கண்ணாடி வழியே தெரிந்த, 'கடையில் வேலை செய்ய தற்காலிகமாக உதவி ஆட்கள் தேவை!' என்ற அறிவிப்பு.

வாட்ச்மேனிடம் விசாரித்தான்.

''வரும் வாடிக்கையாளருக்கு, காலளவு பார்த்து தேவையானதை எடுத்துத் தரும் வேலை. கொஞ்ச நாளைக்கு மட்டும் ஆள் தேவை. 10ம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். நடுத்தர வயதில் இருக்கும் இன்னொரு பணியாளருக்கு உதவியாக இருக்க வேண்டும்,'' என்றார்.

'முயற்சிக்கலாம், ஏதேனும் பணம் கிடைத்தால், அந்த செருப்பு வாங்கலாம்...' என்றெண்ணி, கூட்டம் இல்லாத நேரம் பார்த்து, கடைக்குள் நுழைந்தான்.

இடது ஓரம் பெரிய டேபிள் முன் மேனேஜர் சீட்டில் அமர்ந்து, 'லேப்டாப்'பில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன், ''என்ன தம்பி?'' என்றார்.

அறிவிப்பைக் காட்டி, வேலையில் சேர விரும்புவதைச் சொன்னான்.

''நீ ஸ்கூல் ஸ்டூடன்ட் தானே... உன்னை மாதிரி படிக்கிற பசங்களையெல்லாம் வேலைக்கு சேர்க்க முடியாது. சட்டப்படி தப்பு. எங்க ஓனர் சம்மதிக்க மாட்டாரு,'' என, மீண்டும், 'லேப்டாப்'பில் மூழ்கினான்.

''தெரியும் சார்... நான் இந்த வருஷம், பிளஸ் 2 போகணும். இப்ப, 'லீவு' தான். ஸ்கூல் திறக்க ஒரு மாசத்துக்கு மேல ஆகும். வீட்டுல ரொம்ப கஷ்டம். அதுவரைக்கும் முடிஞ்ச வேலையை செஞ்சு, வீட்டுக்கும் கொஞ்சம் உதவலாம்ன்னு பார்க்கிறேன்,'' என்றான்.

''ஓனர் இன்னைக்கு சாயந்திரம் தான் வருவாரு. அப்ப வந்து கேளு,'' என்றார்.

ஐம்பதுகளில், நடுத்தர உயரத்தில், தங்க பிரேம் கண்ணாடி, பின் நோக்கி வாரிய கிராப்பு, வேட்டி, முழுக்கை சட்டையில், காரிலிருந்து இறங்கியவருக்கு வணக்கம் வைத்தான்.

முதலில் சரியாக கவனிக் காதவரிடம், 'ஷோ ரூம்' மேனேஜர் அவனை பற்றி சொல்ல, அழைக்கப் பட்டான்.

''டெம்பரரி தானே சார்... எனக்கும் படிப்புக்கு உதவியா இருக்கும். இந்த ஒரு மாசம் மட்டும் வேலை செய்யிறேன். குடுக்கிறதைக் கொடுங்க சார்,'' என்றான்.

ஏதோ ஒன்று அவரை யோசிக்க வைத்தது.

''ஸ்கூல்லே ஆதார் கார்டு எடுத்திருப்பேல்ல, அதைக் கொண்டு வந்து காட்டு. உங்க அப்பா, அம்மா யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வா. டிபாசிட் கட்ட பணம் வச்சிருக்கியா... உங்க ஏரியா கவுன்சிலர் கிட்டே லெட்டர் வாங்கிட்டு வர்றியா?'' என்றார்.

''சரிங்க சார்...'' என, அவன் திரும்பியபோது, அவர் கூப்பிட்டு, ''எங்க கடை ஆளு அடுத்த மாசம் வந்துடுவாரு. அதுக்கு மேல வேலை கிடையாது,'' என்றார்.

''சரிங்க...'' என கிளம்பினான்.

''நாந்தான் படிப்பு வாசனையில்லாத தற்குறியா திண்டாடுடறேனேன்னு, உன்னை படிக்க வைச்சா, உன் புத்தி போவுது பாரு. என்னடா, பெரிய மனுஷனாயிட்டியா நீ?'' சத்தம் போட்டார், அப்பா.

''கொஞ்ச நாளைக்கு அதுவும், 'லீவு'லதானே போறேங்கறான்,'' என்றாள், அம்மா.

''அதுவும் செருப்புக் கடைக்கு. நல்லாருக்கு, நீ பிள்ளைக்கு பரிஞ்சுகிட்டு பேசறது.''

மவுனமாகிய அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிப் போய், ஓனரிடம் அறிமுகப் படுத்தினான்.

வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஓடி விட்டது. விடுமுறையில் இருக்கும் கடைப் பணியாளர், இரண்டொரு நாளில் வந்து விடுவாராம்.

அப்பாவுக்கு மட்டும் இன்று வரை இதில் சம்மதமில்லை. அவனிடம் சரியாகப் பேசுவதில்லை. இன்று கடையில், சம்பளம் தருவதாக காதில் விழுந்தது; உற்சாகமாக இருந்தது.

'சம்பளம் வாங்கியதும், முதலில் அந்த செருப்பை வாங்க வேண்டும். எனக்கு ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?' என, நினைத்துக் கொண்டான்.

இத்தனை நாளில் யாரோ ஒருவர்தான் அதை வாங்கிக் கொண்டு போனார். அவனுக்கு பதற்றமாக இருந்தது. நல்ல வேளை, உள்ளே ஒரு ஜோடி செருப்பு, 'ஸ்டாக்' இருந்தது.

மாலை வரை பரபரவென்று இயங்கினான். 6:00 மணிக்கு ஓனர் அவனை வரச் சொல்லி, கையில் மூவாயிரம் ரூபாய் தந்தபோது, வணங்கி வாங்கிக் கொண்டான்.

அவனுக்கு அது சமுத்திரம்.

கடை, 9:00 மணிக்குத்தான் அடைப்பர்.

அட்டைப் பெட்டிகளை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் இளைஞனிடம், ''அண்ணே...'' என்றான்.

''என்னப்பா?''

மூன்றாவது அடுக்கில் இருந்த அட்டைப் பெட்டியை எடுத்து,''இந்த செருப்ப நான் வாங்கிக்கறேன். 'பில்' போடுங்க,'' என்றான்.

வினோதமாகப் பார்த்து, ''அது யாருக்கு உனக்கா... ஆயிரத்துக்கு மேல விலையாச்சே... நீ இப்ப வாங்கின பணத்துல பாதி போயிருமே,'' என்றார்.

''பரவாயில்லை,'' என சொல்லி, 'பில்' போட்டு வாங்கிய பின், அட்டைப் பெட்டியை அவனிடம் கொடுத்த மேனேஜர், ''உனக்கு சைஸ் சரியா இருக்காது போலிருக்கே,'' என்றார்.

கண்களில் ஒரு மகிழ்ச்சி மின்னலோடு, ''எனக்கு இல்ல அண்ணே எங்க அப்பாவுக்கு. அவரோட, 'சைஸ்' தான் இது. அவரு இதுவரைக்கும் புது செருப்பே போட்டதில்ல. ஆனா, எங்களுக்கெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு. அதான், புதுசா அவருகிட்ட கொடுக்கப் போறேன்,'' என்றான், மகேசன்.

''என்ன வேலை செய்யிறாரு உங்கப்பா?'' என்றார்.

''பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே, ப்ளாட்பாரத்துல கோணி விரிச்சு, குடை வச்சுக்கிட்டு, பழைய செருப்பெல்லாம் தச்சுக் கொடுப்பாருல்ல, பார்த்திருப்பீங்களே... அவரு தான் எங்கப்பா,'' என்று சொல்லி, புதுச் செருப்பை வாங்கி, சந்தோஷமாக வீட்டுக்குக் கிளம்பினான்.
பத்மினி பட்டாபிராமன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-ஜன-202316:01:43 IST Report Abuse
Cheran Perumal நல்ல திருப்பம்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
27-ஜன-202322:04:02 IST Report Abuse
Balaji நல்ல கதை..
Rate this:
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
26-ஜன-202318:23:32 IST Report Abuse
Nanthakumar.V Romba nalaiku appuram sorry varusangaluku appuram ....arunaiyana kathai....🌺🌺🌺🌸🌸🌸🌸🌹🌹🌹🌹 Greetings
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X