விஜய் போடும், மெகா கணக்கு!
வாரிசு படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும், தன் 67வது படத்தில் நடிக்கிறார், விஜய். 'கேங்ஸ்டர் கதையில் உருவாகும், இந்த படத்திற்கு பிறகு, பாகுபலி, கேஜிஎப் படங்களைப் போன்று, மெகாபட்ஜெட்டில், பிரமாண்டமான படங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதனால், அதுபோன்ற மெகா பட இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளேன். 'அந்த படங்களில் நடிக்கும் போது, ஹாலிவுட்டில் புகழ்பெற்ற, 'டெக்னீஷியன்'களை பயன்படுத்தி, உலக தரத்தில் கொடுக்கவும் தயாராகி வருகிறேன்...' என்கிறார், விஜய்.
— சினிமா பொன்னையா
'ஆக் ஷன்' கோதாவில், மாளவிகா மோகனன்!
கவர்ச்சி கதாநாயகியாக, ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்று திட்டமிட்ட, மாளவிகா மோகனனுக்கு, அதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. மாறாக, உடலை வருத்தி நடிக்கக் கூடிய கதாபாத்திரங்களாக அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், விக்ரமுடன் நடிக்கும், தங்கலான் படத்தில், கோலார் தங்க வேலை சார்ந்த ஒரு பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக, சிலம்பம் கற்று நடித்து வரும், மாளவிகா மோகனன், 'இனிமேல், 'ஆக் ஷன் ரூட்'டில் தொடர்ந்து பயணிக்க முடிவெடுத்துள்ளேன். அதனால், அடுத்தபடியாக, சினிமாவுக்கு தேவையான சண்டை பயிற்சிகளையும் முறையாக கற்க, ஒரு மாஸ்டரை நியமித்துள்ளேன்...' என்கிறார்.
— எலீசா
மும்பையில் செட்டிலான, பூஜா ஹெக்டே!
விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்தபோது, தெலுங்கு சினிமாவை போலவே, அடுத்து, தமிழிலும், நம்பர் ஒன் நாற்காலியில் அமர்ந்து விடுவோம் என்பது தான், பூஜா ஹெக்டேவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், பீஸ்ட் படம் தோல்வி அடைந்து, அவரது காலை வாரி விட்டது. மேலும், தெலுங்கு சினிமாவிலும், அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து, 'பிளாப்' ஆகின. இதனால், ஹைதராபாத்தில் வீடு வாங்கி, தென்னிந்திய சினிமாவை கலக்க வேண்டும் என்று, திட்டம் தீட்டி வந்த, பூஜா ஹெக்டே, தற்போது, தாய்மொழியான ஹிந்தி சினிமாவுக்கே ஓட்டம் பிடித்து விட்டார். மேலும், ஹைதராபாத்தில் வீடு வாங்கும் திட்டத்தை கைவிட்டு, மும்பையில் புதிதாக வீடு வாங்கி, 'செட்டில்' ஆகிவிட்டார்.
— எலீசா
மலையாள சினிமாவில், சினேகா!
திருமணத்திற்கு பின், நடிகை மீனாவுக்கு, தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால், மலையாளத்தில், மோகன்லாலுடன் இணைந்து, திரிஷ்யம் உட்பட சில படங்களில் நடித்தார். அதேபோல், தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின், மீண்டும் நடிப்பதற்கு பட வேட்டை நடத்திய, சினேகாவுக்கு, எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாகவே, மலையாள சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.
மலையாளத்தில், மம்முட்டி நடித்து வரும், கிறிஸ்டோபர் என்ற படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், சினேகா. மேலும், தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதற்காகவும், அவர் தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
— எலீசா
'நோ -என்ட்ரி கார்டு' போடும், தனுஷ்!
இப்போதும் பார்ப்பதற்கு, பள்ளி மாணவனை போன்று இருப்பதால், தனுஷை தேடி, பள்ளி மற்றும் கல்லுாரி கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. ஆனால், அவரோ, 'இனிமேலும், பள்ளிச் சீருடை அணிந்து, படிக்கிற பொண்ணுங்களை, 'ரொமான்ஸ்' செய்வதற்கு நான் தயாராக இல்லை.
அந்த காலகட்டம் முடிந்து விட்டது. 'அதேசமயம், படிக்கிற மற்றும் காதலிக்கிற மாணவ - மாணவியருக்கு, 'அட்வைஸ்' கொடுக்கக் கூடிய கதாபாத்திரங்களாக இருந்தால், என்னை தேடி வாருங்கள். அந்த அளவுக்கு, தற்போது, நான் வயதிலும், நடிப்பிலும், 'மெச்சூரிட்டி' ஆகி விட்டேன்...' என்று சொல்லி, 'ரொமான்டிக்' கதைகளில் நடிப்பதற்கு, 'நோ என்ட்ரி கார்டு' போட்டுள்ளார், தனுஷ்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* மெரினா நடிகர், கடைசியாக நடித்து வெளியான படம், படுதோல்வி அடைந்ததோடு, அப்படத்தை வாங்கிய, விநியோகஸ்தர்களுக்கு, மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து, இந்த நடிகரின் படத்தை எக்காரணம் கொண்டும் வாங்கி இனி வெளியிடக் கூடாது என்று, அவரால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் கூடி, ஒரு முடிவு எடுத்துள்ளனர்.
இந்த தகவல், மெரினா நடிகரின் காதுக்கு வந்ததும், அதிர்ச்சி அடைந்தார். அதனால், தன் படத்தை வாங்கி, பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, நஷ்டஈடாக பல கோடிகளை கொடுத்து, அவர்களை சரிகட்டியுள்ளார், மெரினா நடிகர்.
* திருமணமாகி, ஒரு குழந்தைக்கும் அம்மா ஆகிவிட்ட, அகர்வால் நடிகை, மீண்டும் கோலிவுட்டில் இறங்கி, அதிரடி காட்டி வருகிறார். தற்போது, உலக நடிகருடன் நடித்து வருபவர், சில, 'மாஜி ஹீரோ'களுக்கும், 'ரூட்' போட்டுள்ளார்.
மேலும், இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோகளுடன், தன் அடுத்த ரவுண்டை அமோகமாக துவங்க வேண்டும் என்பதற்காக, சில இளவட்ட நடிகர்கள் நடத்தும் நள்ளிரவு, 'பார்ட்டி'களில் கலந்து கொண்டு, சரக்கு அடித்து, குத்தாட்டம் போடும் அதிரடி, 'ரூட்'டை கையில் எடுத்திருக்கிறார், அகர்வால் நடிகை.
சினி துளிகள்!
* 'நான் நடித்த, பிரின்ஸ் படம் தோல்வி அடைந்து விட்ட நிலையில், அடுத்து நடித்து வரும், மாவீரன் படம், அதை ஈடுகட்டும் அளவுக்கு, 'மெகா ஹிட்' ஆகும்...' என்று, அடித்து சொல்கிறார், சிவகார்த்திகேயன்.
* 'குழந்தை பிறந்த பின், என் உடல் சற்று பெருத்து விட்டதால், தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன்...' என்கிறார், காஜல் அகர்வால்.
அவ்ளோதான்!