ராஜா ஒருவருக்கு, மூன்று பிள்ளைகள் இருந்தனர். தனக்கு பின், நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது; யாருக்கு பட்டம் சூட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
மூவருமே குதிரை ஏற்றம், வில் வித்தை போன்றவற்றில் சிறந்து விளங்கினர். காட்டில் தவம் செய்து கொண்டிருந்த, தன் ஆஸ்தான குருவை சந்தித்து, யோசனை கேட்டார், ராஜா.
'மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு தேர்வு வைப்போம். அதில் யார் ஜெயிக்கிறாரோ, அவருக்கு பட்டம் சூட்டலாம்...' என்றவர், என்ன தேர்வு வைக்கலாம் என்பதையும் சொல்லி அனுப்பினார், துறவி.
அரண்மனைக்கு திரும்பிய ராஜா, தனித்தனி மாளிகையில் வசித்து வந்த, தன் மூன்று மகன்களையும் அழைத்து, மூன்று பேருக்கும் சம அளவு பணத்தைக் கொடுத்தார்.
'உங்க மூவருக்கும் சம அளவு பணத்தைக் கொடுத்துள்ளேன். ஏழு நாட்களுக்குள், உங்க மாளிகைகளை என்ன பொருள் வாங்கி நிரப்புவீர்களோ தெரியாது. மாளிகை முழுதும் நிரம்பியிருக்கணும்.
'ஏழு நாட்களுக்கு பின் வந்து பார்ப்பேன். யாருடைய மாளிகை நிரம்பி இருக்கிறதோ, அவனே, எனக்கு பின் நாட்டை அரசாள தகுதியுடையவன்...' என்று அறிவித்தார்.
'கொடுத்திருக்கிற பணமோ ரொம்ப குறைச்சல்; மாளிகையோ ரொம்ப பெரிசு. எதை வாங்கி நிரப்புவது?' என, மூவரும் யோசனை செய்தனர்.
ஊரில் உள்ள குப்பைகளை எல்லாம் அள்ளி வந்து மாளிகைக்குள் குவித்தான், முதலாமவன். அதுபோக, ராஜா கொடுத்த பணத்தை கொண்டு, அண்டை நாட்டிலிருந்து குப்பைகளை வாங்கி நிரப்பினான்.
இரண்டாவது இளவரசனோ, புல் மற்றும் வைக்கோலால் மாளிகையை நிரப்ப பார்த்தான்; பாதி கூட நிரம்பவில்லை.
அதற்குள் ஏழு நாட்கள் முடிந்து விட, ராஜாவும், குருவும் ஒவ்வொரு மாளிகையாக பார்த்தபடி வந்தனர்.
முதல் மாளிகையை நெருங்குவதற்கு முன், துர்நாற்றம். மூக்கை பிடித்தபடி வேகமாக கடந்து சென்று விட்டனர்.
இரண்டாவது மாளிகையில், பாதி அளவுக்கு தான் வைக்கோல் அடைக்கப் பட்டிருப்பதைப் பார்த்தனர்.
மூன்றாவது மாளிகையினுள் சென்றனர். மாளிகையினுள் எந்த பொருளும் இல்லை. ஏற்கனவே இருந்த பொருட்களும் அகற்றப்பட்டு இருந்தன.
'என்ன, இங்கு ஒன்றுமே இல்லை...' என்றார், ராஜா.
குருவுக்கு புரிந்து விட்டது.
ராஜாவிடம், அங்கு எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளை காட்டி, 'மாளிகை முழுதும் தீப ஒளியால் நிரம்பி இருக்கு...' என்று விளக்கினார், குரு.
மாளிகையை ஒளியால் நிரப்பிய மகனே, நாட்டையும் ஆள தகுதியுடையவன் என, அவனையே, தனக்கு பின் ராஜாவாக அறிவித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?தன்னையும், மற்றவர்களையும் வாழ வைக்க அறிவே சிறந்த செல்வம் என்று புரிந்திருக்குமே!
பி. என். பி.,