ஜன., 23 - சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்
குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' நுாலிலிருந்து:
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈ.எஸ்.மாண்டேகு என்ற அமைச்சரின் அலுவலகத்துக்கு சென்றார், சுபாஷ் சந்திரபோஸ். உரிய அனுமதி பெற்று, அமைச்சரை சந்தித்தார்.
'என் பெயர் சுபாஷ் சந்திரபோஸ். நான், ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்றவன்...' என்றார்.
'நல்லது, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்றார், மாண்டேகு.
'உதவி வேண்டாம். என் விண்ணப்பத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால் போதும்...' என்றார், போஸ்.
'என்ன விண்ணப்பம்?'
'என் ராஜினாமா விண்ணப்பக் கடிதம்...' என்றார், போஸ்.
கடந்த, 1920ல், தேர்ச்சி பெற்ற பட்டியலில் இருந்து, தன் பெயரை நீக்கிவிடும்படி விண்ணப்பத்தில் எழுதியிருந்தார், போஸ்.
போசை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை, மாண்டேவுக்கு.
'இளம் வயதில் பெரிய பதவி கிடைத்திருக்கிறது. அதை அனுபவிக்கத் தெரியாமல், ராஜினாமா கடிதம் கொண்டு வந்திருக்கிறாரே...' என்று, நினைத்தார்.
'எதற்காக இந்த முடிவு. யாராவது உங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனரா?' என்றார், மாண்டேகு.
'இது, என் தனிப்பட்ட முடிவு. வேறெந்த காரணமும் இல்லை...' என்றார், போஸ்.
'உங்களைப் பார்த்தால் மிகவும் இளைஞராக இருக்கிறீர்கள். இவ்வளவு சிறு வயதில், யாருக்கும் இந்த பதவி கிடைக்காது. கிடைத்த பதவியை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்...' என்றார், மாண்டேகு.
'அதைப் பற்றி எனக்கு தெரியாது. நான் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன்...' என்ற போசின் குரலில் உறுதி இருந்தது.
எவ்வளவு பேசினாலும், முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை கூடுதலாக தெரிந்தது.
'இந்த வேலையை விட்ட பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றார், மாண்டேகு.
'இந்தியாவுக்கு சென்று, என் தாய்நாட்டு சுதந்திரத்திற்காக போராட வேண்டும்...' என்றார், போஸ்.
'அங்கே, ஏற்கனவே, பல இந்தியர்கள், அரசை எதிர்த்து போராடிக் கொண்டு தானே இருக்கின்றனர்?'
'இன்னும் வலுவான போராட்டம் தேவை...' என்றார், போஸ்.
இனி, இந்த இளைஞனிடம் பேசி, எதையும் புரிய வைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த, மாண்டேகு, போசின் ராஜினாமா விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்.
***
க.பன்னீர்செல்வம் எழுதிய, 'இந்திய தேசிய சின்னங்கள்' நுாலிலிருந்து:
இந்திய அரசியலமைப்புக் குழு, ஜனவரி 24, 1950ல், 'ஜன கண மன' பாடலை, நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. டிசம்பர் 27, 1911ல், கோல்கட்டாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், முதன் முதலாகப் பாடப்பட்டது.
குடியரசு தலைவரின் குடியரசு தின உரை, சுதந்திர தின உரை, வானொலி, 'டிவி'களில் ஒலிபரப்பும்போதும் தேசிய கீதம் ஒலிக்க செய்யப்படும்.
தேசிய கீதத்தை பாடுவதற்கு நேரக்கட்டுப்பாடு வரையறை செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை, 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும். சுருக்கமாக முதலும், இறுதி பகுதிகளையும், 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
இந்திய தேசிய ராணுவத்தில், தேசிய கீதம் இசைப்பதற்கான இசைக்குழு இருக்கிறது. சீருடைப் பணியாளர் அமைப்புகளில், தேசிய கீதம் இசைப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நடுத்தெரு நாராயணன்