வெள்ளைக்காரன்
சுருட்டுவதையெல்லாம்
சுருட்டி -நம்மை
வெறுங்கையாய்
விட்டு விட்டு போனான்!
திகைத்து நிற்காமல்
பகைத்து நின்றோரையும்
பக்குவமாய் நடத்தினோம்!
பொருளாதாரக் கொள்கைகளை
சீர்படுத்தினோம்
தொழில்துறை வளர்ச்சிக்கு
அடித்தளம் அமைத்தோம்
வேலை வாய்ப்புக்கு
வழிவகுத்தோம்!
ராணுவத்தைபலப்படுத்தினோம்
எதிரி நாடுகளை
எச்சரிக்கும் அளவு வளர்ந்தோம்!
விவசாயத்தை விரிவாக்கினோம்
உணவு உற்பத்தியில்
தன்னிறைவு கண்டோம்
வெண்மைப் புரட்சியில்
வெற்றி பெற்றோம்!
ராக்கெட் ஆராய்ச்சியில்
ராக்கெட் வேகத்தில்
முன்னேறினோம்
விண்வெளி ஆய்வில்
விண்ணைத் தொட்டோம்!
பெண்கள் முன்னேற்றத்துக்கு
முதலிடம் கொடுத்தோம்
அடுப்பூதிய பெண்களை
ஆகாயத்தில் பறக்க வைத்தோம்!
மருத்துவத் துறையில்
மட்டில்லா சாதனைகள் புரிந்தோம்
விளையாட்டுத் துறையில்
பதக்க வேட்டை நிகழ்த்தினோம்!
கல்விக் கொள்கையில்
புரட்சி செய்தோம்
கனவு காணுங்கள் என்று
துாண்டினோம்
வல்லரசாக வேண்டுமென்று
வேண்டினோம்!
மதவாதத்தையும்
தீவிரவாதத்தையும்
இரும்புக்கரம் கொண்டு
ஒடுக்கினோம்!
ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
குறிக்கோள் மாறாமல்
ஓடினோம்!
எழுபத்தி ஐந்து வயதில்
எங்கள் கொடி
உலக அரங்கில்
உயரமாகவே பறக்கிறது!
என்.ஆசைத்தம்பி, ஆவடி, சென்னை.