போலியோவை போன்று, தட்டம்மையையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, 'மீசில்ஸ், ரூபெல்லா' என்ற, எம்.ஆர்., தடுப்பு மருந்தை, 2017 முதல் அரசு இலவசமாக கொடுத்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், தட்டம்மையை முழுதுமாக ஒழித்து விடலாம் என்று திட்டமிட்ட சமயத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டதால், முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
முழு வீச்சில் தடுப்பூசி போடத் துவங்கியதும், தட்டம்மை பாதிப்பு வெகுவாக குறைந்தது.
கொரோனா பரவலால் கடந்த மூன்று ஆண்டுகளில், தடுப்பூசி போடுவது வெகுவாக குறைந்து விட்டது. தட்டம்மை தடுப்பூசியை, 95 சதவீதம் பேருக்கு போட்டால் தான், தொற்று பரவுவது கட்டுப்படும்.
'புளூ, கொரோனா' தொற்றுக்கு 60 - 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டாலே, பரவல் கட்டுக்குள் வந்து விடும்.
தட்டம்மை, சின்னம்மை போன்றவை காற்றில் பரவும் தொற்று நோய்.
ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவரிடம் இருந்து 10 -15 பேருக்கு பரவும்; ப்ளூ, மூன்று - நான்கு பேருக்கு மட்டுமே பரவும்.
குழந்தை பிறந்த ஒன்பது மாதத்தில் ஒன்றும், 15 - 18 மாதங்களில் இரண்டாவது, 'டோஸ்' தடுப்பூசியும் போட வேண்டும்.
கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, ஒரு டோஸ் கூட போடாமல், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், 90 சதவீதமாக இருந்த பாதுகாப்பு, 45 சதவீதமாக குறைந்து விட்டது.
போட வேண்டிய நேரத்தில் போடாமல் தாமதம் ஆகிவிட்டது என்பதால், உடனடியாக தடுப்பூசி போடுவது நல்லது. 15 வயதிற்குள் எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்; எப்போது போட்டாலும், முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும், ஒன்பது மாதங்கள் இடைவெளி வேண்டும்.
கொரோனா காலத்தில் போட முடியாமல் போனவர்களுக்காக, 'இந்தர தனுஷ்' என்ற திட்டத்தை அரசு அதன்பின் செயல்படுத்தியது; இதிலும் முழுமையாக இலக்கை எட்ட முடியவில்லை. இதே நிலை தான், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் இருந்தது.
தட்டம்மை பாதிப்புகள் மும்பையில் தற்போது அதிகம் இருப்பதால், தடுப்பூசி போட ஆரம்பித்து உள்ளனர். கூடவே, காய்ச்சல், தோலில் சிவந்த தடிப்புகள், அம்மை அறிகுறிகள் இருந்தால், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை தந்து, தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
தட்டம்மை மட்டுமல்ல... 'டிப்தீரியா, நிமோனியா' என்று, பல தொற்று நோய்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இதே நிலை தான் உள்ளது.
தடுப்பு மருந்துகளுக்கு, தமிழகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை; ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருந்துகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக போட்டு விடுவதே பாதுகாப்பானது.
தட்டம்மை தொற்று வந்தால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப் போக்கு, பார்வை பாதிப்பு, சிவந்த திட்டுக்கள் தோன்றி, சுவாசப் பாதை, செரிமான மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்து விடும்; எனவே, பல தொற்று கிருமிகளும் எளிதாக தொற்றி, உயிருக்கு ஆபத்தாக முடியும். இரண்டு, மூன்று தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போடலாம்.
டாக்டர் ஜெ.ராஜ்குமார்,
குழந்தைகள் நல தொற்று நோய் மருத்துவர்,
குளோபல் ஹெல்த் சிட்டி,
சென்னை.
044 - 44777000