மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, தோல்வியைத் தழுவியவற்றின் பட்டியலில், 'கூகுள் கிளவுடு கேமிங் ஸ்ட்ரீமிங்' சேவையான 'ஸ்டேடியா'வும் ஒன்று.
விளையாட்டு ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, மிகுந்த ஏமாற்றத்தை தந்த சேவை இது.
'பிளே ஸ்டேஷன்' போன்றவற்றை வாங்காமல், இணைய கிளவுடு வாயிலாக விளையாடலாம் என்றும்; 'கன்ட்ரோலர்' சாதனம் மட்டுமே போதுமானது என்பதாலும், ஸ்டேடியாவுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால், பயனர்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவத்தை இதனால் வழங்க முடியாமல் போனதால், தோல்வியைத் தழுவியது.
ஒரு கட்டத்தில் இந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துவிட்டது, கூகுள் நிறுவனம். இந்நிலையில், பயனர்களிடம் இதற்காக வாங்கிய 'ஒயர்லெஸ் ஸ்டேடியா கன்ட்ரோலர்' சாதனங்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.
தற்போது அதற்கு விடை தந்துள்ளது கூகுள் நிறுவனம். இதை புளூடூத் கன்ட்ரோலராக மாற்றி, பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு முறை இதை புளூடூத் கன் ட்ரோலராக மாற்றிவிட்டால், அதன் பிறகு பழைய நிலைக்கு திரும்ப இயலாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், புளூடூத் கன்ட்ரோலராக மாற்ற, இறுதி தேதி நடப்பாண்டு டிசம்பர் 31ம் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்டேடியா கன்ட்ரோலரை, புளூடூத் கன்ட்ரோலராக மாற்றுவது மிக எளிதானது என்றும்; இருந்த இடத்திலிருந்தே சில நிமிடங்களில் மாற்றி விட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.