குள்ளநரி மனிதர்களை விலக்கி வையுங்கள்!
மத்திய அரசு பணியில் இருந்த தோழி ஒருவர், உயர் பதவிக்கான தேர்வில் கலந்து கொள்ள போவதாக, உடன் பணிபுரியும் ஆண் நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே, 'அப்படி எந்த தேர்வும் எழுத வேண்டாம். உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு, திருமண வாழ்க்கை சரியாக இருப்பதில்லை; பெரும்பாலும், விவாகரத்து ஆகி விடுகிறது...' என்று, தங்கள் கருத்தை திணித்தனர்.
உயர் பதவியில் இருக்கும், இன்னொரு பெண்மணியை தொடர்பு கொண்டு, ஆலோசனை கேட்டுள்ளார், தோழி. 'இந்த வருமானம் போதுமா, இன்னும் அதிகமாக வேண்டுமா என்று யோசிக்க வேண்டியது, நீங்க தான். உயர் பதவியில் இருக்கும் பெண்களை, சில ஆண்களால் கையாள முடியவில்லை என்பது தான் உண்மை.
'எனவே, இப்படி எதிர்மறையாக எதையாவது பேசி, பெண்களின் உயர்வை முடக்கப் பார்க்கின்றனர். கண்டிப்பாக, பதவி உயர்வுக்கான தேர்வை எழுதும்மா...' என்று அறிவுறுத்தி இருக்கிறார், அப்பெண்.
'இப்போதுள்ள பெண்கள், மிகுந்த திறமைசாலி மற்றும் புத்திசாலிகளாக, தங்கள் குடும்பத்தையும், வேலையையும், 'பேலன்ஸ்' செய்து, மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றனர்.
'பல போராட்டங்களோடு கஷ்டப்பட்டு படித்து, வாழ்க்கையில் உயர எண்ணும்போது, பலவிதமான முட்டுக்கட்டைகளை போடுகின்றனர், ஆண்களில் பலர். அப்படிப்பட்ட குள்ளநரி மனிதர்களை விலக்கி வைத்தால் தான், நமக்கு நலம், பாதுகாப்பானதும் கூட...' என்றேன், நான்.
இப்போது, அந்த தோழி, தேர்வில் வெற்றி பெற்று, பதவி உயர்வும் பெற்று விட்டார். கணவர் மற்றும் குழந்தைகளுடன், மகிழ்ச்சியாகவே இருக்கிறார்!
-வி.நர்மதா, உளுந்தூர்பேட்டை.
ஆன்-லைன் பண பரிவர்த்தனை செய்கிறீர்களா?
சமீபத்தில், என் நண்பரின் கடைக்கு வந்த இருவர், 'ஆன்லைன் - கூகுள் பே' மூலம் அவசரமாக பணம் அனுப்ப வேண்டும். என் போன் சரிவர செயல்படவில்லை...' என, பொய்யான காரணங்களை கூறியுள்ளனர்.
'எவ்வளவு அனுப்ப வேண்டும்...' என்று கேட்டதற்கு, பெரிய தொகையை கூறியுள்ளனர்.
'அவ்வளவு எல்லாம் அனுப்ப முடியாது...' என்று மறுத்து விட்டார், நண்பர்.
'உங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருகிறோம். என் உறவினர், விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் அவசர சிகிச்சைக்கு, பணம் அனுப்ப வேண்டும். கொஞ்சம் உதவுங்கள்...' என்று கூறியுள்ளனர்.
கமிஷன், 10 ஆயிரம் ரூபாய் தருகிறார் என்றால், ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து, 'இங்கு வாய்ப்பு இல்லை...' என்று கூறி அனுப்பி விட்டார், நண்பர்.
அதே ஊரைச் சேர்ந்த ஒருவர், 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, தன் போன் மூலம் பணத்தை அனுப்பினார். சில நாட்களில், அவரிடம், காவல்துறையினர் விசாரிக்க வந்தனர்.
அவர்கள் கஞ்சா வாங்க வந்தவர்கள் என்பதும், கஞ்சா மூட்டை பிடிபட்ட உடன், பணம் அனுப்பியவரை பிடித்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் தெரிந்தது.
குற்றவாளிகள், தாங்கள் தப்பிக்க கிரிமினலாக யோசிக்கையில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்...' என்ற எம்.ஜி.ஆர்., பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
'கஞ்சா சாக்லெட்' உஷார்...
நண்பர் ஒருவர், மேல்நிலைப் பள்ளி ஒன்றில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன தகவல், பேரதிர்ச்சியாக இருந்தது.
நன்றாக இருந்த சில மாணவர்களின் நடத்தையில், சில மாதங்களாக பெருத்த மாற்றமிருப்பதை உணர்ந்து, அவர்களை கண்காணிக்க துவங்கியிருக்கிறார்.
பள்ளியின், முதலிரண்டு பாட வேளைகளில், எப்போதும் போல அமைதியாக இருந்துள்ளனர். 'இன்டர்வெல்' விட்டதும், பள்ளி வாசலில், 'டூ வீலரில்' காத்திருக்கும், வட மாநில நபரிடம், சாக்லெட் வாங்கி சாப்பிட்ட பின், மிக மோசமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வதை கண்டுபிடித்துள்ளார்.
அந்த மாணவர்களிடமிருந்து, சாக்லெட்டை வாங்கிப் பார்த்தவருக்கு, அதிர்ச்சி. நிஜ சாக்லெட் தோற்றத்திலிருந்த அதனுள், 'கஞ்சா' மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
சற்றும் தாமதிக்காமல், இவ்விஷயம் குறித்து, உடனே போலீசில் புகாரளித்தார், நண்பர்.
பள்ளிக்கூட வாசல் அருகிலுள்ள கடைகளை கண்காணித்து, 'கஞ்சா சாக்லெட்'டை விற்பனை செய்து வந்த, வடமாநில நபர்களின், 'நெட் ஒர்க்'கை கண்டுபிடித்து, சுற்றி வளைத்து, கைது செய்தனர், போலீசார்.
பெற்றோரே... உங்கள் பிள்ளைகளுக்கு, 'பாக்கெட் மணி' தருபவர்களா நீங்கள்?
'கஞ்சா சாக்லெட்' ஆபத்து இருப்பதை, உங்கள் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்!
— சி.அருள்மொழி, கோவை