கடந்த, 1994ல், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்திலிருந்து வெளிவரும், 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழ், அவருக்கு, 'வாழ்நாள் சாதனையாளர்' என்ற விருதை வழங்கி, கவுரவித்தது.
விருது வழங்கியபோது, கமல்ஹாசன், ரஜினி இருவரும் எழுந்து நின்று, கை தட்டி, மரியாதை செய்தது, குறிப்பிடத்தக்கது.
தன் இறுதி காலத்தில் நடித்த சில திரைப்படங்கள், அவரது தகுதிக்கு குறைவானவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அது பணம், புகழுக்காக அவர் விரும்பிப் பெற்ற வாய்ப்புகள் அல்ல; அவர் மதிப்பறிந்து தேடி வந்தவை.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் ஒருமுறை, 'முரட்டுக்காளை வரைக்கும் நான் சம்பாதித்தது தான் சம்பாத்தியம். அதன் பிறகு என் சம்பாத்தியம், ஏவி.எம்., எனக்கு கொடுத்த போனஸ்...' என்றார், ஜெய்சங்கர்.
ஒரு காலத்தில், மூன்று ஷெட்யூல்களில் ஸ்டுடியோக்களை வலம் வந்தவரால், வீட்டின் மாடியறையில் அடைந்து கிடக்க முடியவில்லை. ஜெய்யின் உணர்வுகளை நன்கு அறிந்த, ரஜினி - கமல், தங்கள் படங்களில், அவருக்கு பொருத்தமான பாத்திரங்கள் அமைந்தால், அழைத்து கொடுத்தனர்.
வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வருவதற்காகவே, ரஜினி - கமல் படங்களிலும், மற்ற சிலரின் படங்களிலும் தலை காட்டினார், ஜெய்.
தன் அந்திம காலத்திலும், நாடகங்களில் நடிப்பதிலும், ரசிகர்களை சந்திப்பதிலும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார், ஜெய்சங்கர். அந்நாளில் உடல்நலம் சரியில்லாத நிலையிலும், காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் நடத்திய, கிரேசி மோகன் எழுதிய, 'ஹனிமூன் கப்புள்' நாடகத்திற்காக, துபாய் வரை சென்றது, அவரது நடிப்பார்வத்துக்கு சாட்சி.
நாடகத்தில், சூலை ஜெபமணி என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்து, துபாய் வாழ் இந்தியர்களின் கை தட்டலை அள்ளினார், ஜெய்சங்கர்.
வாழ்க்கையின் சுவாரஸ்யம் இதுதான். கலை ஆர்வத்தில் நடிகனாக அரிதாரம் பூசி, அதன் மூலம் சினிமாவை எட்டிப்பிடித்தார். எம்.ஜி.ஆர்., - சிவாஜி என்ற இரு பெரும் கலைஞர்களையும் மீறி, திரையில் ஜொலித்த தன்னம்பிக்கை நிறைந்த ஒரு மனிதன், வாழ்க்கையின் சுழற்சியில் மீண்டும் நாடக வாழ்க்கைக்கு திரும்பினார்.
தன்னெழுச்சி காரணமாக அதே கைதட்டல் ஓசையை, தன் அந்திம காலத்திலும் கேட்டு, ஒரு குழந்தையாய் குதுாகலித்து, நிஜமான கலைஞனின் உள்ளத்தை வெளிப்படுத்தினார்.
'குப்பத்து சாஸ்திரிகள்' என்ற, 'டிவி' தொடரில் கிட்டத்தட்ட, 200 எபிசோடுகள், காத்தாடி ராமமூர்த்தியுடன் நடித்தார். முதுமையிலும், நடிப்பின் மீதான காதலில் தோய்ந்து கிடந்தார், ஜெய்சங்கர்.
இதெல்லாம் அவரது கடைசி, 10 ஆண்டு சினிமா பங்களிப்பு. வீட்டில் அடைந்து கிடக்க விரும்பாததால், அவர் ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்புகள். 1995ம் ஆண்டுக்கு பிறகு, நடிப்பதை பெரிதும் குறைத்துக் கொண்டார்.
நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, அரிதாக படங்களில் தலை காட்டினார். ரஜினியுடன் நடித்த, அருணாச்சலம் திரைப்படம் தான், அவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம்.
கடந்த, 2000ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு உடலில் சில கோளாறுகள் தென்பட ஆரம்பித்தன. இதயப் பிரச்னையோடு மஞ்சள் காமாலையின் ஆபத்தான நிலை என சொன்னது, சோதனை முடிவுகள்.
ஒரு வாரம் கடந்த நிலையில், உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. ஆனாலும் சுற்றிலும் மருந்து, மாத்திரைகள், கையில் செருகப்பட்ட, 'ட்ரிப்ஸ் இன்செக் ஷன்' என, 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் இருக்க அவரால் முடியவில்லை.
உணவிலிருந்து, உறவினர்களை சந்திப்பது வரை, மருத்துவர்கள் விதித்த கட்டுப்பாடுகள், அவருக்கு இன்னும் எரிச்சலை கூட்டியது. அவற்றில் ஒன்று, அவருக்கு பிரியமான மகள் சங்கீதா வயிற்றுப் பேத்தியை காண, அனுமதி மறுத்தது.
'வீட்டிலேயே இரண்டு டாக்டருங்க இருக்கும் போது, இங்கு வந்து ஏன் நான் படுத்துக் கிடக்கணும்...' என, ஒரு குழந்தையைப் போல் குடும்பத்தினரிடம் அடம்பிடித்தார்.
தந்தையின் பேச்சை பிள்ளைகளால் தட்ட முடியவில்லை. வேறு வழியின்றி, வீட்டில் இருந்தபடியே சிகிச்சையளிக்கும் முடிவோடு அழைத்து வந்தனர். தந்தைக்காக வீட்டை மினி மருத்துவமனையாகவே மாற்றினர், பிள்ளைகள்.
ஒரு வாரத்திற்கு பிறகு, அவருக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைந்தது. ஜூன் 3, 2000ம் ஆண்டு, சனிக்கிழமை அதிகாலை, மஞ்சள் காமாலையின் தீவிரத்தால், வீட்டிலேயே நினைவு இழந்தார்.
அன்று அவரது மகள் சங்கீதாவின் பிறந்த நாள். மகளுக்கு ஆசி வழங்க வேண்டியவரை மருத்துவமனை கொண்டு செல்லும் துர்பாக்கிய நிலை உருவானது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்த முறை, காலன் தனக்கு கருணை காட்ட மாட்டான் என, அந்தக் கருணையாளனின் மனம் உணர்ந்ததோ என்னவோ... தன் அன்பு மகளின் பிறந்தநாளுக்கு, காலம் முழுமைக்கும் மோசமான ஒரு பரிசைத் தர விரும்பாமல், காலனுடன் தன் இறப்பை ஒருநாள் தள்ளிப்போட கடும் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்.
ஆதரவற்றவர்களுக்கும், அனாதைகளுக்கும் காலம் முழுவதும் துடித்துக் கொண்டிருந்த அவரது இதயம், இரவு, 11:45க்கு நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டது.
மறுநாள் மாலை, 4:30 மணிக்கு, ஜெய்சங்கரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வாழ்நாளெல்லாம் கருணையாளனாய் வாழ்ந்த ஒரு கதாநாயகன், தன் வாழ்வின் இறுதிப் பயணத்தை, பெசன்ட் நகர் இடுகாட்டில் முடித்தார்.
ஒரு மனிதநேயனின் மகத்தான சகாப்தம் முடிவு பெற்றது.
ஜெய்சங்கரின் திரைப்பட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட மனிதநேய சேவையை போற்றும் வகையில், 2010ல் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு, கவுரவப்படுத்தியது, மத்திய அரசு.
ஆனால், அரசின் இந்த கவுரவத்துக்கு முன்பே, அவரால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை பெற்று ஆளான ஆயிரமாயிரம் அனாதை குழந்தைகள், தங்கள் வீடுகளில் அவரது கருப்பு வெள்ளை படத்தை மாட்டி, கவுரவப்படுத்தி விட்டனர்.
மனித நேயத்துடன் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு, அதை விட மகத்தானதொரு அடையாளம் வேறில்லை.
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...'
என, எழுதினார் கவிஞர் வாலி.
அதன்படி மனிதம் என்பதற்கு முழுப் பொருளாய் வாழ்ந்து மறைந்த, ஜெய்சங்கரின் புகழை ஊர் பேசும்; உலகம் போற்றும் என்பதில், ஐயமில்லை!
— முற்றும்இனியன் கிருபாகரன்