பா - கே
ஆங்கில பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி அலுவலகத்தினுள் நுழைந்தார், லென்ஸ் மாமா.
'என்ன மாமா... ரொம்ப குஷியா இருக்கீங்க போல... பாட்டெல்லாம் பிரமாதபடுது...' என்றார், உதவி ஆசிரியை ஒருவர்.
'ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காதுன்னு சொல்வாங்களே... கேள்விப்பட்டதில்லையா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஆடினாலும் ஆடுவேன். எதுக்கும் தயாரா இருந்துக்கங்க...' என்று மாமா கூறியதும், 'எப்பவும் ஏடாகூடமாத்தான் பதில் சொல்வீரா...' என்று அலுத்துக் கொண்டார், உ.ஆ.,
'உள்ளதை சொன்னா, உனக்கு ஏன் கோபம் வருது...' என்றவர், என் பக்கம் திரும்பி, 'மணி... இப்ப, டாக்டர் ஒருவர் வருவார். ஆசிரியருக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். முக்கிய விஷயமா ஆசிரியரை சந்திக்கணும்ன்னு கேட்டார். அவர் வந்தால், ஆசிரியரிடம் அழைத்துச் செல். நான் அவசரமா வெளியே போகணும்...' என்று கூறி, சென்றார்.
அடுத்த பத்தாவது நிமிடம், மாமா சொல்லிய டாக்டர், உள்ளே வந்தார்.
ஆசிரியர் இன்னும் வராததால், என் கேபினுள் அமர வைத்தேன்.
என்னைப் பற்றி விசாரித்து அறிந்தவர், உன் படைப்புகளை நிறைய படித்துள்ளேன். நான் எழுதிய கட்டுரை பற்றி சொல்கிறேன். வாசகர்களுக்கு பயன்படும் என்று, கூற ஆரம்பித்தார்.
அது:
மனசு சரியில்லைன்னா, இனிமையான பாடல்களை கேட்பது நம்மில் பலரது பழக்கமாக உள்ளது. மனசை சரி பண்றதுக்கு இசை, ஒரு நல்ல சிகிச்சை என்று, நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
இன்று, இசையை, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று, பல நாட்டினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். குறிப்பா, மன நோய்க்கு, இசை ஒரு சிறந்த மருந்தாக அமையும் என்பது, அவர்களது வாதம்.
ஏற்கனவே, 'சைக்கோ தெரபி'ன்னு மனோதத்துவ சிகிச்சை, 'ஹைபோ தெரபி'ன்னு மனோவசிய சிகிச்சை மற்றும் 'ரெக்ரியேஷன் தெரபி'ன்ற மன மகிழ்ச்சி சிகிச்சைன்னு, மன நோயாளிகளிடம் செயல்படுத்தி குணமாக்க முயற்சித்து வருகின்றனர்.
இதையெல்லாம் விட சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது, 'மியூசிக் தெரபி'ன்ற இசை சிகிச்சை என்று சொல்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். அது சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை தயார் செய்துள்ளேன். பிரிட்டன் தலைநகர், லண்டனில் நடைபெற இருக்கும் கான்பிரன்சில், அதைப் பற்றி பேச போகிறேன். அதற்காக தான் ஆசிரியரை சந்திக்க வந்துள்ளேன்.
அதாவது, இசையால நோய்கள் குணமாகும்ங்கிறது பழங்காலத்துலருந்தே இருந்துகிட்டு வர்ற ஒரு நம்பிக்கை. அதுமட்டுமல்ல, இன்னன்ன ராகம் இன்னன்ன நோயைக் குணப்படுத்தும்ன்னு சொல்றாங்க.
இதுக்கெல்லாம் தெளிவான விஞ்ஞான நிரூபணம் இல்லேன்னாலும், இப்பவும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்களாக தான் உள்ளன.
இந்தோளம்ங்கிற ராகம், வாத நோய்க்கு நல்லதாம். சாரங்கா ராகம், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்லதாம். அசாவேரி ராகம், தலைவலியைக் குணப்படுத்துமாம்.
நீலாம்பரி ராகம், உடல் இறுக்கத்தையும், மன இறுக்கத்தையும் போக்கி, நம்மளை துாக்கத்துல ஆழ்த்தக் கூடியதாம்.
பிலகரி, பூபாளம், நாட்டை இதெல்லாம் நம் துாக்கத்தை கலைச்சு, கண் விழிக்கச் செய்யக் கூடிய ராகங்கள்.
கவலை, பசி இது ரெண்டையும் மறக்கணுமா, அதுக்கு, கரகரப்பிரியா ராகம். சோக உணர்வைத் தரக்கூடிய ராகங்கள்: முகாரி, சிவரஞ்சனி, ரேவதி.
அதிர்ச்சி, பாதிப்பு, பரபரப்பு இதையெல்லாம் போக்கி, மன அமைதியைத் தரக்கூடிய ராகங்கள், மத்யமாவதி மற்றும் சகானா.
இசை இருக்கே, இது கேட்கறவங்களுக்கு மட்டும் நல்லது செய்யவில்லை; அதைப் பாடறவங்களுக்கும், பயிற்சி பண்றவங்களுக்கும் கூட நல்லது செய்கிறது.
பாடுகிறவர்களுக்கெல்லாம், ரத்த ஓட்டம் சீரடையும். முகத்துல புதுக்களை உண்டாகும். தோலின் சுருக்கங்கள் நீங்கும். இளமையான தோற்றப் பொலிவு உண்டாகும்.
அதனால தான் சங்கீத வித்வான்கள் பலரை பாருங்க, முகத்தில் ஒரு தேஜஸ் தெரியும்.
இசையை, 'சங்கீத யோகம்'ன்னு சொல்வாங்க. ஏன்னா, யோகப் பயிற்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டு.
ராக ஆலாபனை பண்றப்போ, உள்ளே இழுக்கிற மூச்சு அங்கேயே கொஞ்ச நேரம் இருக்கும்; அப்புறம் தான் வெளியில வரும். அது, பிராணாயாமம் மாதிரி.
ஆரோகணம், அவரோகணம் பாடறப் போவெல்லாம் மூச்சை இழுத்து படிப்படியா வெளியே விட வேண்டியிருக்கும்... அதெல்லாம் யோகப் பயிற்சி மாதிரி தான்.
இதைத் தவிர, இசைக் கருவிகள் இருக்கு பாருங்க, அதன் பலனும் அலாதி. வீணையின் நாதம், ரத்தக் கொதிப்புக்கு நல்லது. அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் குறைத்து, மனசுக்கு அமைதியைக் கொடுக்குமாம்.
புல்லாங்குழல், நாதஸ்வரம் இதெல்லாம் கவலையால ஏற்படற நோய்களைக் குணப்படுத்தி, மனசுல மகிழ்ச்சியைப் பெருக்குமாம்.
மிருதங்கம் மாதிரியான தாள வாத்தியங்களெல்லாம் மனத் தளர்ச்சி, மனச்சிதைவு இதையெல்லாம் குணப்படுத்துமாம். மறதியை போக்குமாம், ஞாபக சக்தியை பெருக்குமாம்.
டாக்டர் கூறுவதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் உள்ளே வந்தார். டாக்டரை, ஆசிரியரின் அறைக்குள் அனுப்பி விட்டு, இசையின் சக்தியை அசை போட்டபடி, வேலையை தொடர்ந்தேன்.
ப
திருவிளையாடல் படத்தில், புலவர் தருமி வேடத்தில் நடித்த நாகேஷ், தருமி கேரக்டருக்கு முன் மாதிரியாக அமைந்த சம்பவம் பற்றி கூறுகிறார்:
சென்னை, மயிலாப்பூர் குளத்தில், கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் வற்றி இருக்கும்போது, புல் தரையாக இருக்கும். அதில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். அப்போது, நானும் அங்கு சென்று அமர்வேன். அங்கு ஒரு பக்தரும் அடிக்கடி வந்து, தனியாக அமர்ந்து, ஏதாவது புலம்பிக் கொண்டிருப்பார்...
'கபாலீஸ்வரா... பார்த்தியாடா, உன் குளத்தில், பசங்க கிரிக்கெட் விளையாடற அளவுக்கு ஆகிப்போச்சு. இதையெல்லாம் யாராவது கேட்கறாளா... சரி, மனுஷா தான் கேட்கல, நீயாவது கேட்கப் படாதா.
'சரி, நீதான் கேட்கல, உன் சார்பா,நான் கேட்கலாம்ன்னு நெனச்சு கேட்டேன்னு வச்சுக்கோ, அந்த பசங்க கிரிக்கெட் மட்டையால் என் முட்டிய பேத்துருவானுங்க. அதனால தான், தானா புலம்பிண்டிருக்கேன்.
'கத்தி கத்தி என் குரலும் போகப் போறது; ஒருநாள், என் பிராணனும் போயிடும். போகட்டுமே... இருந்து இப்ப என்னத்த சாதிச்சு கிழிச்சுட்டேன்...'
இப்படி தினமும், ஏதாவது ஒரு விஷயத்துக்காக புலம்புவார். அவரை மனசுல வச்சுகிட்டுதான் நான், தருமி வேடத்தில் புலம்பினேன். அது, ரசிகர்களிடையே எனக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது என்றார், நாகேஷ்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.