ஆர்.ஜெயலட்சுமி, நெல்லை: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் தரப்போவதாக, பிரியங்கா கூறுகிறாரே... முடியுமா?
அவர்கள் ஆளும் மாநிலங்களில் இதை முதலில் அமல்படுத்தினால் தானே, கர்நாடக மக்கள் நம்பி, ஓட்டளிப்பர். செய்வாரா பிரியங்கா...
எல். சுரேஷ், சென்னை: அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என எண்ணத் தோன்றுகிறதே...
அது உங்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே தோன்ற வேண்டாம். அடுத்து, நாம் செய்ய வேண்டியது என்ன என்ற எண்ணம் தான் வரவேண்டும்... அதுவே, முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
* எஸ். மோகன், சென்னை: எனக்கு துன்பம் வந்து கொண்டே இருக்கிறதே...
துன்பத்தை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்... துன்பம் பொறுமையைத் தரும். பொறுமை அனுபவத்தைத் தரும். எனவே, பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்!
ப. விவேக், நெல்லை: சிறப்போடு இருக்க என்ன செய்ய வேண்டும்?
சிந்தித்து பேசினால், சிறப்போடு இருக்க முடியும்!
வி. குமார், திருச்சி: வாழ்க்கையில் அவசியமானது எது?
தன்னம்பிக்கை வேண்டும், ஜெயிக்கும் வரையில்... ஜெயித்த பின் தன்னடக்கம் அவசியம். தன்னம்பிக்கை இழந்தால், வெல்வது கடினம். தன்னம்பிக்கை உள்ளோர் வீழ மாட்டார்!
* எம். காளிதாஸ், மதுரை: என்னை உயர்த்த நினைத்துக் கொள்கிறேன். என்ன செய்வது?
உங்கள் பணியிலும் பணிவாக இருப்பது. செல்வத்திலும் எளிமை. தோல்வியிலும் விடாமுயற்சி இருந்தால், நீங்கள் நினைப்பது நடக்கும்!
க. வானதி, துாத்துக்குடி: வெற்றி என்பது என்ன?
வெற்றி என்பது நாம் பெற்று கொள்வது. தோல்வி என்றால் என்ன தெரியுமா... அது நாம் கற்றுக்கொள்வது!