குரலை உயர்த்தி கடினமாகப் பேசினான், ரவி.
''சரியா காதுல வாங்கிக்குங்க, மிஸ்டர் ரகோத்தமன்... அந்த டெண்டர் பத்தின முழு விபரமும் உடனே எனக்கு, 'மெயில்' பண்ணுங்க... உடனேன்னா இப்பவே, 'ரைட் நவ்' புரியுதா?
''ஒரு செகண்ட் கூட தாமதப்படுத்தக் கூடாது. சரி சரின்னு சொல்லிட்டு மெத்தனமா இருக்கக் கூடாது. இந்த விஷயத்துல நான் கண்டிப்பானவன். என், 'வைஸ் பிரசிடெண்ட்' அதிகாரம் முழுமையையும் பயன்படுத்துவேன், சொல்லிட்டேன்.
''அப்புறம் வேலை போச்சு, சம்பளம் போச்சுன்னு, என் அறை வாசல்ல வந்து, கண்ணைக் கசக்கிட்டு நிக்கக் கூடாது,'' மொபைல்போனை துாக்கி எறியாத குறையாக சோபா மேல் போட்டான்.
காபியை நீட்டிய காயத்ரி, ''ஒன் மினிட்,'' என்றாள்.
''சொல்லு,'' என்றான்.
''வினீஷ், இன்னிக்கு பள்ளிக்கூட இசை நிகழ்ச்சில பாடப் போறான். முதல் மேடை, 'காக்கைச் சிறகினிலே...' பாரதியார் பாட்டு. நாம ரெண்டு பேரும் போனால், குழந்தைக்கு சந்தோஷமாவும், ஊக்கப்படுத்தற மாதிரியும் இருக்கும், ரவி,'' என்றாள்.
''நீ என்ன சொல்றே?'' என்று, காபியை ஒரே மடங்காக உறிஞ்சினான்.
''பாட்டு டீச்சரும் போன் பண்ணி வரச் சொன்னாங்க. குழந்தைக்கு நல்ல குரல். ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான். ப்ளீஸ் ரவி... போகலாமே,'' என்றாள், காயத்ரி.
நிமிர்ந்து, அவளை எரிச்சலுடன் பார்த்தான்.
''விளையாடறியா காயத்ரி... ரெண்டாங் கிளாஸ் குழந்தை. ஏதோ ஆசைக்கு பாடறான். அதுக்காக என் அத்தனை வேலையையும் விட்டுட்டு வர முடியுமா... சரி சொல்லு, என் கம்பெனி, 'டர்ன் ஓவர்' எவ்வளவு?''
''பத்தாயிரம் கோடி... கரெக்ட்?''
''எத்தனை கிளைகள் இருக்கு?''
''எட்டு... இந்தியா முழுசும்.''
''நான் என்னவா இருக்கேன்?''
''தென்னிந்தியா தலைவர்.''
''சரியா சொல்லேன்?''
''சவுத் ஹெட் அண்ட் ஆல்சோ கம்பெனி வைஸ் பிரசிடெண்ட்!''
''எம்.டி.,க்கும், எனக்கும் உறவு எப்படி?''
''ரொம்ப நெருக்கம். உங்களை அந்த படேல் முழுமையாக நம்பறார்.''
''வெரி குட்... அந்த நம்பிக்கையை நான் பாதுகாக்கணும். அதுக்கு முழுமையா என் கடமை, பொறுப்புன்னு எல்லாத்தையும் நிறைவேத்தணும். இந்த இடத்துக்கு அப்படித்தான் வந்திருக்கேன்.
''மாயவரத்து ஏரிக்கரை ஸ்கூல்ல படிச்ச கிராமத்துப் பையன், இப்போ பல படிகள் ஏறி, 'வைஸ் பிரசிடெண்ட்'டா உட்கார்ந்திருக்கான். அவனை மறுபடி கீழே யாரும் இழுக்க வேண்டாம். சரியா... நிகழ்ச்சிக்கு நீ போயிட்டு வா,'' என்றான்.
பெருமூச்சுடன் நகர்ந்தாள்.
மறுபடி மொபைல் போன் அழைத்தது.
''ஹலோ... ரவிதாஸ் ஹியர்!''
''அய்யா... நாங்க வேப்ப மரத்தடி பிள்ளையார் அன்னதானக் குழுலேர்ந்து பேசறோம். 10ம் தேதி, கோவில்ல சின்னதா திருவிழா வெச்சிருக்கோம். அதுக்கு பெரிய அளவுல அன்னதானம் செய்யலாம்ன்னு குழுவுல முடிவு எடுத்திருக்கோம்.
''சார் வீட்டுல எப்பவும் கை நிறைய கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. முதல் நன்கொடை அய்யாகிட்ட வாங்கலாம்ன்னு... வரலாங்களா?'' என்று, ஒரு குரல் பவ்யத்துடன் ஒலித்தது.
''ஹலோ... ஒன் மினிட், பேசிகிட்டே போறீங்களே... என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சுது... எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு. இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அழைக்காதீங்க.''
''சரிங்கய்யா... இப்ப வரலாங்களா?''
''அதான் சொன்னேனே எனக்கு நேரம் இல்ல. நான் பெரிய கம்பெனில, பெரிய வேலையில இருக்கறவன். வீட்டுல வருவாங்க, அவங்ககிட்ட வாங்கிக்குங்க. வைங்க போனை,'' என்று, போனை வீசி எறிந்து, குளியலறைக்குள் நுழைந்தான்.
'சே என்ன உலகம் இது... எல்லாருக்கும் தன் வேலை, தன் விருப்பம் இதெல்லாம்தான் முக்கியம். அடுத்தவன் யார், அவனுக்கு என்ன வேலைகள், அவனால் இதைச் செய்ய முடியுமா என்று அடிப்படை சிந்தனை கூட கிடையாது. தன் காரியமானால் சரி.
'படாதபாடு பட்டு ஒருவன் வெற்றி அடைந்தவுடன், ஈ மொய்க்கிற மாதிரி வந்து விட வேண்டியது. இந்த காயத்ரிக்காவது தெரிய வேண்டாமா... கணவன் என்ன சாதாரண குமாஸ்தாவா, எவ்வளவு பெரிய நிறுவனத்தில் எவ்வளவு பெரிய பதவி வகிப்பவன்... 'பர்மிஷன்' போட்டுட்டு, இரண்டாம் வகுப்பு நிகழ்ச்சிக்கு வா என்கிறாள்...'
கோபத்துடன் வாளியை எட்டி உதைத்தான்.
சீரான வேகத்தில் வண்டியை ஓட்ட நினைத்தாலும், மனதின் சீற்றம் அதிகமாக இருப்பதால் முடியவில்லை. ஆழ்கடல் போல கொந்தளிப்பு. அம்மா வீட்டிற்குப் போய் வண்டியை நிறுத்தினான்.
கீரை வாங்க வாசலுக்கு வந்த அம்மா, அவனைப் பார்த்ததும், முகம் மலர்ந்தாள்.
''அட ரவி... வாடா கண்ணா, வா வா... உன்னை பார்த்து, நாலு நாளாச்சு,'' என சிரித்து, கைபற்றினாள்.
''இப்பதான் ஆபீசுக்கு கிளம்பினார், அப்பா. நேத்திக்கு சாயங்காலம், கீரை வாங்கிட்டு வந்தார். ஒரே முத்தல், கட்டுக்குள்ள எல்லாம் மஞ்சள் இலைகள். அப்பா தலைல சாமர்த்தியமா கட்டியிருக்கா, பவானி. அதான் வேற கீரை புதுசா வாங்கினேன். காபி தரட்டுமாப்பா?'' என்றாள், அம்மா.
''இல்லம்மா, சும்மா வந்தேன்,'' என்றான்.
''ராத்திரி சரியா துாக்கமில்ல. சரி, காபி போட்டு எழுப்பறேன்னு கிச்சனுக்குப் போனார், அப்பா. பால் பொங்கி வழிஞ்சு, டிகாஷன் தண்ணியா இறங்கி, சக்கரையைக் கொட்டி, சூடே இல்லாம ஒரு காபி கொடுத்தார் பாரு... ரெண்டு மடங்கானது தலைவலி. ஒரு வேலை கூட நுட்பமா செய்யத் தெரியாது, அப்பாவுக்கு. ம்ம்... இப்படியே ஓடறது என் காலம்,'' என்றாள், அம்மா.
''அடடா... நான் வேணா உனக்கு சாப்பாடு, 'ஆர்டர்' பண்ணட்டுமாம்மா?''
''இல்லப்பா... என் கையால சிம்பிளா ஒரு மிளகு ரசம் பண்ணிடுவேன். நீ சாப்பிட்டியா?''
''ஆச்சும்மா.''
''பாரேன் இதை...'' என்று, சட்டென நீல நிற கோப்பு ஒன்றைப் பார்த்து, வீறிட்டாள் அம்மா.
''என்னம்மா?''
''ராத்திரி ரொம்ப நேரம் முக்கியமான இந்த பைல் பார்த்துட்டிருந்தார், அப்பா. கிளம்பற அவசரத்துல விட்டுட்டுப் போய்ட்டார். எதையாவது உருப்படியா செய்யத் தெரியுதா... நான் ஒருத்தியே, எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யறதால, வீடு உருப்படுது.''
''டோண்ட் ஒர்ரி... போற வழிதானே அடையார்... அப்பாகிட்ட நான் கொடுக்கறேன். வரேன், நீ ரெஸ்ட் எடும்மா,'' என்றான்.
''சரிடா கண்ணா. காயத்ரி, வினீஷ், நீ மூணு பேரும் சனிக்கிழமை லஞ்சுக்கு வந்துடுங்க.''
''சரிம்மா...'' என, கிளம்பினான்.
அம்மா முகம் பார்த்ததில், மனம் அமைதியானது. வாசலில் இருந்த பவழ மல்லிகை, ஒரு சகோதரி போல இதமாக புன்னகைப்பதைப் போலிருந்தது.
அப்பாவின் அலுவலகம் வந்தது. இரண்டாம் மாடியின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது. ரிசப்ஷன் சோபாவில் அமர்ந்தான். கண்ணாடிகளுக்குப் பின்னால் அலுவலகத்தின் பரபரப்பு தெரிந்தது.
''மே ஐ ஹெல்ப் யூ?'' என்று முறுவலித்தாள், வரவேற்புப் பெண்.
''ராஜப்பா சாரைப் பாக்கணும்.''
''ராஜா சாரா?'' என்றவுடன் பரபரப்பு தொற்றிக் கொள்வதைப் பார்த்தான்.
வெளிப்படையாக அவள் கண்கள் வெளியிட்ட உணர்வு மதிப்பு அல்லது மரியாதை என்று புரிந்தது.
''ஒன் மினிட் ப்ளீஸ் உக்காருங்க. லெமன் ஜூஸ், இல்லேன்னா பூஸ்ட், என்ன சார் தரட்டும்?'' என்றாள்.
''நோ தாங்க்ஸ்!''
பெரிய தொட்டிகளில் ரோஜாக்கள் பூத்து, பால்கனி காற்றை உள்ளிழுத்தன. வட்ட வடிவமான கார்ப்பெட். நடுவில் பெரிய தாம்பாளத்தில் மலர்கள். கண்ணை உறுத்தாத நிறங்களில் நாற்காலிகள்.
''சார், நான் வினோத்... ராஜா சார், பி.ஏ., மீட்டிங்கில் இருக்கார், பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும். என்ன சார் சாப்பிடறீங்க?'' என்று, வந்து நின்றான், இளைஞன் ஒருவன்.
அப்பாவின் பெயரைச் சொல்லும்போது, அவன் குரலும், முகமும் காட்டிய பிரத்யேக மென்மை அவ்வளவு அழகாக இருந்தது.
''பரவால்ல, காத்திருக்கிறேன்.''
''சரி சார்... இதோ வரேன்.''
பழச்சாற்றை நீட்டினாள், வரவேற்பு பெண்.
''ராஜா சார், 'கெஸ்ட்' இல்லையா, ப்ளீஸ் சாப்பிடுங்க சார்... யார் வந்தாலும் முதல்ல சாப்பிடக் கொடுக்கணும்ன்னு, அவர் அன்புக்கட்டளை போட்டிருக்கார்.''
''ஓ.கே.,'' என, வாங்கிக் கொண்டான்.
அடுத்த பத்து நிமிடங்களும், பத்து திகைப்புகளுக்கு மேல் கொடுத்தன. 'ராஜா சார், ராஜா சார்...' என்று, மந்திரம் போல உச்சரித்தனர், ஊழியர்கள்.
'ராஜா சார் இருக்கும்போது, ஏன் கவலைப்படறே... உன் பையனோட, 'ஸ்காலர்ஷிப் அப்ளிகேஷனை' ராஜா சார் ஓ.கே., பண்ணிட்டார் கைலாஷ்... ராதா, இந்த முறை ஜாக்பாட் நமக்கு; உன் பிரசவத்துக்கு எட்டு மாசம் விடுமுறையுடன், முழு சம்பளம். எல்லாம், ராஜா சார் மாத்தி எழுதின விதிமுறைகள்...' என, ஒரு கண்ணாடிக் கதவு தானாகக் காற்றில் திறந்து, பேச்சுகளைக் கொண்டு வந்தன.
அழைப்பு வந்தவுடன், எழுந்து உள்ளே போனான், ரவி.
ராஜப்பா, டி.ஜி.எம்.,
அறைக்கதவின் பலகையைப் பார்த்து அடுத்த திகைப்பு. அப்பா, ஹெச்.ஆர்., தலைமை ஊழியர் தானே, எப்போது டி.ஜி.எம்., ஆனார்?
''சாரி கண்ணா...'' என்று இருக்கையிலிருந்து எழுந்து வந்து, அவனை அணைத்துக் கொண்டார், அப்பா.
''இன்னிக்கு திடீர்ன்னு ஒரு, 'வீடியோ கான்பரன்ஸ்' என்னிக்கும் வராத உன்னை, காக்க வெக்கிற மாதிரி ஆகிவிட்டது.''
''என்னப்பா இது, நீங்க தான் தலைமையா இந்தக் கிளைக்கு... ஆபிஸ் பூரா, ராஜா சார், ராஜா சார்னு தலைல துாக்கி வெச்சு கொண்டாடுது. அது கூட பெரிசில்ல எனக்கு. யூ ஆர் வெரி ஹ்யூமன்!
''ஆனால், வீட்டுல அம்மா, உங்களை சிறுவனைப் போல, 'டிரீட்' பண்றாங்களே. காய் வாங்கத் தெரியாது, காபி போடத் தெரியாது, பைலை மறந்து வெச்சுட்டுப் போறது, அப்படி இப்படின்னு... ஏம்பா?'' நீல நிறக் கோப்பை நீட்டி, கண்கள் அகல அப்பாவையே பார்த்தான்.
அவர் சிரித்தபடியே, ''அதெல்லாம் சின்ன, 'சைக்காலஜி' கண்ணா... அம்மா பாவம், அவள் வீட்டுப் பறவை. வீடு, சமையல், தோட்டம், உறவு இதுதான் அவள் உலகம். அதுலயாவது அவள் ராணியா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.
''நானும் பெரிய ஜி.எம்., மாதிரி வீட்டுலயும் இருந்தால், பாவம், அவள் அடிமை வாழ்வு தான் வாழணும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து என்னை மாற்றிக் கொண்டேன். வீட்டில் சராசரிக்கும் கீழ இருக்கிற கணவன் மாதிரி இருக்க ஆரம்பிச்சேன்.
''சாமர்த்தியசாலி, அவள் செய்தால் தான் எதுவும் சரியாக இருக்கும். வீடே அவள் புத்திசாலித்தனத்தால் தான் நிற்கிறது என்று, அம்மா நம்ப ஆரம்பித்தாள். ஏன், நானும் நம்பறேன் கண்ணா...
''இது ஆபிஸ். நாம சம்பளம் வாங்கி வேலை செய்கிற அதிகாரிகள். ஆனால், வீடு, நமக்கு தாய் மடி. அங்கேதான் நமக்கு பலம், அன்பு மற்றும் நம்பிக்கை கிடைக்கிறது. அதுவும், மனைவியால் கிடைக்கிறது. அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது நம் கடமை, பொறுப்பு, நம் வாழ்வாதாரம். சரியா கண்ணா?''
அப்பா பேச பேச, ரவிக்கும், அகக்கண் மூலம் ஏதோ புதிய பார்வை கிடைத்த மாதிரி இருந்தது.
வி. உஷா