விவசாயத்தில் இறங்கிய, பிரகாஷ்ராஜ்!
தென்னிந்திய படங்களில், வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும், பிரகாஷ்ராஜ், விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பு இல்லை என்றால், தன் தோட்டத்திற்கு சென்று, விவசாயம் செய்கிறார். அதோடு, இளைஞர்களையும் விவசாயம் செய்ய துாண்டுகோலாக இருக்கிறார்.
'விவசாயம் செய்வது, மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நாம் விளைவித்து கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு ஏராளமானோர் பசியாறுவார்களே என நினைக்கும்போது, ஒரு இனம்புரியாத ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சினிமாவில் எத்தனை கோடி சம்பாதித்தாலும், விவசாயத்தில் கிடைக்கும் குறைவான தொகையே மிகப்பெரிய மன நிறைவை கொடுக்கிறது...' என்கிறார், பிரகாஷ்ராஜ்.
— சினிமா பொன்னையா
'மெகா ஹீரோ'களை அலற விடும், நயன்தாரா!
திருமணத்திற்கு பின், ஷாருக்கானுடன், ஜவான், ஜெயம் ரவியுடன், இறைவன் போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாராவை, சில, 'மெகா ஹீரோ'களின் படங்களில், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க, சில இயக்குனர்கள் அணுகினர்.
ஆனால், 'இப்போது வரை, என் மார்க்கெட் உச்சத்தில் தான் இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக, என்னை கேரக்டர் நடிகையாக்க, யாரும் முயற்சிக்க வேண்டாம்...' என்று சொல்லி, அந்த இயக்குனர்களை திருப்பி அனுப்பி விட்டார், நயன்தாரா.
மேலும், மீண்டும் கதையின் நாயகியாக நடித்து, 'ஹிட்' கொடுத்து, தன் மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற அடுத்தகட்ட முயற்சியிலும் இறங்கியுள்ளார், நயன்தாரா.
எலீசா
த்ரிஷாவின் பெரிய ஆசை!
கடந்த, 20 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும், த்ரிஷாவின் மார்க்கெட், சில ஆண்டுகளாக பின்தங்கி இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர், சீனுக்கு வந்திருக்கிறார்.
அதோடு, விஜய், அஜித்துடன் மீண்டும் ஜோடி சேரும், த்ரிஷா, 'அடுத்தபடியாக, ரஜினியுடனும், 'டூயட்' பாட வேண்டும் என்று ஆசை. ஏற்கனவே, ரஜினியுடன், பேட்ட படத்தில் நடித்த போதும், அது ஒரு கவுரவ வேடம் என்பதால், அதில், எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. அதனால், ரஜினியுடன் படம் முழுக்க வரும், 'ஹீரோயின்' ஆக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மேலோங்கி இருக்கிறது...' என்கிறார்.
— எலீசா
மீண்டும் காமெடியனாகும், சந்தானம்!
சந்தானம், 'ஹீரோ'வாக நடிக்கும் படங்கள், அடுத்தடுத்து, 'பிளாப்' ஆகி வருவதால், விஜய், அஜித் போன்ற, 'மெகா ஹீரோ'களின் படங்கள் மூலம், மீண்டும் காமெடியனாக, 'ரீ - என்ட்ரி' கொடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், அஜித் நடிக்கும் 62வது படத்தில் காமெடியனாக ஒப்பந்தமாகி விட்டார். மேலும், 'ஹீரோ அந்தஸ்தை நான் எட்டிப் பிடித்து விட்டதால், காமெடியனாக நடிப்பதற்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறேன்...' என்கிறார், சந்தானம்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
பிரபல, மூன்றெழுத்து பூ நடிகை, அரசியலில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் சினிமா பட வாய்ப்புக்காக முண்டி அடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான, தளபதி நடிகரின் படத்தில், ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார், அம்மணி. ஆனால், படம் திரைக்கு வந்தபோது பார்த்தால், அவர் நடித்த ஒரு காட்சி கூட, படத்தில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து, அப்பட இயக்குனரிடம் கேட்க, 'படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகளை கத்தரித்து விட்டோம்...' என, கூறியிருக்கிறார். இதைக் கேட்டு, 'ஒரு காலத்தில் ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்டவள், அப்படிப்பட்ட எனக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?' என்று, தன் அதிர்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார், பூ நடிகை.
சினி துளிகள்!
* சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுக்க, சரியான படங்கள் கிடைக்காததால், தற்போது, 'வெப் சீரியல்' பக்கம் திரும்பி இருக்கிறார், நடிகை குஷ்பு.
* 'எத்தனை கஷ்டங்கள், போராட்டங்கள் வந்தாலும், சினிமா என்னை நேசிக்கிறது. அதனால், நானும் சினிமாவை நேசிக்கிறேன். வாழ்நாள் முழுக்க நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...' என்கிறார், சமந்தா.
* கிக் படத்தில், சந்தானத்துக்கு ஜோடியாக, தன்யா ஹோப், ராகினி திரிபாதி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
அவ்ளோதான்!