துறவி ஒருவர் இருந்தார்.
துறவியின் மகிமையை அறிந்த அந்நாட்டு அரசர், அவரை சந்திக்க சென்றார். தன் அரண்மனைக்கு துறவியை அழைத்து, மரியாதை செலுத்த நினைத்து, அவரிடம் தன் எண்ணத்தை கூறினார், அரசர்.
உடனே சம்மதித்து விட்டார், துறவி.
அவர் மறுத்தாலும், எப்படியாவது அழைத்துச் சென்று விட வேண்டும் என்று நினைத்த அரசருக்கு, துறவி உடனே வருவதாக கூறியதும், ஆச்சரியமானது.
அரசரது ரதத்தில் ஏறி தான் வருவேன் என்றதும், இன்னும் ஆச்சரியம் அடைந்தார்.
இவர், உண்மையில் துறவி தானா என்ற சந்தேகம், அரசருக்கு வந்து விட்டது.
ரதத்தில், அரசருக்கு பக்கத்தில் அமர்ந்து அரண்மனைக்கு சென்றார், துறவி.
அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்ரமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், துறவி. அரண்மனையிலும் அப்படித்தான் இருப்பார் என்று எதிர்பார்த்த அரசருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அரசருக்கு உள்ள அத்தனை வசதிகளும் தனக்கும் வேண்டும். அவர் சாப்பிடுவது போன்ற அறுசுவை உணவும் வேண்டும் என்று கேட்டு, சாப்பிட்டார். சகல வசதிகளுடன் இருந்த படுக்கையறையில் படுத்து, நிம்மதியாக துாங்கினார், துறவி.
ஆனால், அரசருக்கு தான் துாக்கம் வரவில்லை. அரசாங்க கவலைகள் ஒருபுறம், துறவியின் செயலும், அவரை அலைக்கழித்தது.
ஒருநாள், துறவியை சந்தித்து, 'நாம இருவரும் அரண்மனையில் தான் இருக்கிறோம். நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்க. தினமும் வெளியே போக, தங்க ரதம் கேட்கறீங்க. உயர்தரமான ஆடை அணியறீங்க. வேளா வேளைக்கு அறுசுவை உணவு. உங்களுக்கும், எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லையே...' என்றார், அரசர்.
பதில் சொல்லாமல், அரசரை அழைத்து, ஊர் எல்லைக்கு வந்து சேர்ந்தார், துறவி.
'இனி, நான் இங்கு தான் தங்கப் போகிறேன். அரண்மனைக்கு திரும்பி வரப்போவதில்லை. நீ என்னுடன் தங்குகிறாயா?' என்று கேட்டார், துறவி.
'அது எப்படி உங்களுடன் இருக்க முடியும். என் நாடு, மனைவி, மக்களை விட்டு விட்டு வர முடியாதே...' என்றார், அரசர்.
'உனக்கும், எனக்குமான வித்தியாசம் இப்போது தெரிகிறதா... நான் கொஞ்ச நாள் அரண்மனையில் தங்கினேன். அரண்மனையில், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அத்தனையையும் அனுபவித்தேன்.
'ஆனால், எதற்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால், நீயோ, என் அரண்மனை, என் நாடு, என் மனைவி, மக்கள் என்று எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுகிறாய். இதுதான் நமக்குள் இருக்கும் வித்தியாசம்...' என்று கூறி, ஆடம்பர ஆடை, அணிகலன்களை களைந்து, பழைய துறவி கோலம் பூண்டார்.
அப்போது தான் அரசனுக்கு, தன் அறியாமை புரிந்தது.
இதிலிருந்து என்ன புரிகிறது. இந்த உலகத்துல எத்தனையோ பொருட்கள் உள்ளன. அதையெல்லாம் பயன்படுத்தலாம். ஆனால், அதுக்காக சொந்தம் கொண்டாட ஆரம்பித்தால், கவலை தான் மிஞ்சும்.
பி. என். பி.,