மு.அப்பாஸ்மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்!' நுாலிலிருந்து:
கடந்த, 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட காந்திஜியும், அவர் மனைவி கஸ்துாரிபாவும், மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர்.
சிறையில், கஸ்துாரிபாவுக்கு, மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கஸ்துாரிபாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு குறிப்பிட்ட மருந்தை, அமெரிக்காவிலிருந்து வரவழைத்துக் கொடுத்தால் குணப்படுத்தலாம் என்றனர்.
ஆங்கில மருந்துகளை விரும்புவதில்லை. இயற்கை வைத்தியம்தான் செய்து கொள்வார், காந்திஜி. ஆனால், கஸ்துாரிபாவுக்கு, ஆங்கில மருந்தைப் பயன்படுத்த அனுமதியளித்தார்.
'என் மனைவியும் ஒரு பெண் தான். அவள் உலக இன்பம் எதையும் இதுநாள் வரை அனுபவித்ததே இல்லை. எனக்காக, வாழ்நாள் முழுவதும் துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே அனுபவித்தவள். அப்படிப்பட்டவள், என் கண் முன்னே அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை...' என்று சொல்லி, கண் கலங்கினார், காந்திஜி.
காந்திஜி, தன் வாழ்நாளில் கண் கலங்கியது அதுவே முதல் முறை.
***
தமிழகத்தில், 1934ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டார், காந்திஜி. திறந்த காரில் நின்றபடியே, திரளான மக்களுக்கு, அவர் தரிசனம் கொடுத்து வந்தார்.
அவருடன் சேர்ந்து பயணம் செய்த, அவினாசிலிங்கம் செட்டியார், காந்திஜியிடம், 'பாபுஜி... மக்கள் உங்கள் பக்கம் இருக்கின்றனர் என்பது உண்மை தான். அதேசமயம், மக்களோடு மக்களாக யாராவது எதிரியும் இருக்கக் கூடும் அல்லவா... உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்...' என்று கவலையோடு கேட்டார்.
'பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவன், உயிரைப் பற்றி கவலைப்படக் கூடாது. அதற்கு பயந்து, எப்போதும் பாதுகாவலோடு செல்பவன், பொது வாழ்க்கையில் ஈடுபடத் தகுதியற்றவன்.
'இந்த திறந்த கார் போல, என் நெஞ்சையும் திறந்தே தான் வைத்திருக்கிறேன். துப்பாக்கியால் சுடுகிறவன் சுடட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை...' என்றார், காந்திஜி.
***
30.1.2023 சு.ஸ்ரீபால் ஐ.பி.எஸ்., எழுதிய, 'சிந்தனைப் பூங்கா' நுாலிலிருந்து:
தன் மனைவி கஸ்துாரிபாய் பற்றி இப்படி எழுதியுள்ளார், காந்திஜி:
மனமொத்த லட்சிய தம்பதியர் என்று யாரும் எங்களை நினைத்து விட வேண்டாம். அவளுக்கென்று லட்சியங்கள் இருந்தனவா என்பது ஐயமே. ஆனால், ஏனைய இந்திய மனைவியரை போல, அவளுக்கு ஒரு சிறந்த பண்பு இருந்தது.
கணவனுடைய லட்சியங்களை, விரும்பியோ, விரும்பாமலோ, சிந்தித்தோ, சிந்திக்காமலோ பின்பற்றுவதைப் பெரும் பேராகக் கருதினாள். அவள் பெற்றோரும், நானும், அவளை படிக்க வைக்க வேண்டிய காலத்தில், படிக்க வைக்கவில்லை.
என்னுடைய லட்சிய வாழ்க்கைக்கு குறுக்கே, அவள் என்றைக்கும் நின்றதில்லை. திருப்திகரமான, முன்னேற்றமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையே எங்கள் வாழ்க்கை என்ற எண்ணம் எப்போதும் என்னுள் மேலோங்கி இருந்தது.
என் வாழ்க்கை போராட்டங்கள் அனைத்திலும், அவள் துணையாக நின்றாள். விசுவாசத்துடனும், தன்னை என்னுடைய வாழ்க்கை மற்றும் லட்சியத்திற்கு அர்ப்பணித்தாள்.
***
- நடுத்தெரு நாராயணன்