அந்த அறுவை சிகிச்சை கூடத்திற்கு வெளியே ஒரே பரபரப்பு... காரணம், உள்ளே ஒரு ஏழை மாணவனுக்கு, இதய நோய் அறுவை சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது.
நன்றாக படிக்கக் கூடிய ஏழை மாணவன் அவன்; அவனது வளர்ச்சியில் தான், அந்த குடும்பத்தின் எதிர்காலமே அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மாணவனுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது.
சோதனைக்கு பின், அறுவை சிகிச்சை தான் தீர்வு என முடிவானது. அரசின் நிதியுதவியையும் தாண்டி, சிகிச்சைக்கு செலவு செய்ய வேண்டியிருந்தது.
'அதனால் என்ன, நாங்கள் இருக்கிறோம். மாணவர் உயிர் தான் முக்கியம்...' என, செலவை ஏற்றதுடன், தரமான சிகிச்சையையும் வழங்கிய அமைப்பு தான், 'ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ்!'
'அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இனி, அவன் நார்மலான வாழ்க்கையை தொடரலாம். தன் தாய், தந்தையின் கனவுகளை நிறைவேற்றலாம்...' என, கூறினர் டாக்டர்கள்.
அப்போது, பெற்றோரை விட அதிகம் சந்தோஷப்பட்டவர்கள், 'ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ்' அமைப்பினர் தான். காரணம், இந்த அமைப்பினருக்கு இவன், 400வது பிள்ளை.
'ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ்' தமிழில் சொல்வதானால், இதயங்களுக்காக இயங்கும் இதயங்கள். இந்த அமைப்பினரின் முழு நேர சேவையே, சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் ஏழை, எளிய குடும்பத்து குழந்தைகளின் இதய நோய் தீர்ப்பது தான்.
இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ஸ்ரீமதிக்கு, 78 வயதாகிறது. அரசு மருத்துவராக இருந்த போது, 6,000திற்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகளை செய்தவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக, இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். பணி ஓய்வுக்கு பிறகும், வீட்டில் ஓய்ந்து இருக்காமல், தன் அனுபவம் மற்றும் ஆற்றலை தொடர்ந்து ஏழைக் குழந்தைகளுக்கு சேவையாக வழங்க முடிவு செய்தார். இப்போது இதய நோய் ஆலோசகராக உள்ளார்.
இவரது நல்ல உள்ளத்திற்கு வலு சேர்க்கும் வகையில், முத்துக்குமரன், டாக்டர்கள் விஜயசங்கர், ரம்யா காஷ்யப், ஜெயக்கரன், ரிச்சி, ரம்யா முத்துக்குமார், வரதராஜன், விஸ்வநாதன், சீனிவாசன், நாராயணன் உள்ளிட்ட, 30 பேர், கரம் கோர்த்தனர். அப்படி உருவானது தான், 'ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ்' அமைப்பு.
பணப் பற்றாக்குறை காரணமாக, இதய நோய் சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தருவதுடன், தொடர்ந்து கண்காணிப்பையும் வழங்குவது தான், இந்த அமைப்பின் சிறப்பு.
அமைப்பினரின் மருத்துவ சேவையை அறிந்து, இதுபோன்ற குழந்தைகளுக்கான கூடுதல் செலவை, நன்கொடையாளர்கள் வழங்கி வருகின்றனர்.
இதய நோய் குறித்து சமூகத்தில், விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நல்ல உள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் நிறைய பேர் முன்வந்தால், இன்னும் நிறைய குழந்தைகள் பலன் பெறுவர்.
சென்னை, மேற்கு மாம்பலம், பப்ளிக் ஹெல்த் சென்டர் வளாகத்தில் இயங்கி வரும், 'ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ்' அமைப்பினரை தொடர்பு கொள்வதற்கான மொபைல் எண்கள் : 73388 61284, 95660 48593.
எல். எம். ராஜ்