உங்களின் உலகம் இது
நீங்கள் எண்ணுகிற
எண்ணத்தின் அடிப்படையிலேயே
அது அமைகிறது!
சுற்றியுள்ள சூழ்நிலைகள்
உங்கள் வாழ்வை நிர்ணயிப்பதில்லை
அவற்றைப் பற்றிய எண்ணங்களே
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன!
விரும்புவதற்கும்
அடைவதற்கும் இடையில்
தற்காலிகத் தடைகள் பல இருக்கும்
அவற்றைப் பற்றிய நோக்கமே
உங்கள் வெற்றி, தோல்வியை
முடிவு செய்யும்!
வெற்றி உங்கள் குறிக்கோள் எனில்
சிக்கல்கள் மீது
கவனம் செலுத்துவதை விட
அவற்றைக் களையும்
தீர்வுகளின் மீது
சிந்தனையை செலுத்த வேண்டும்!
உறுதியான வெற்றி
கிடைத்திட வேண்டுமென்றால்
சந்தர்ப்பங்கள், சவால்களை
அசட்டையாகப் புறந்தள்ளி விடாமல்
அவற்றின் மீது உங்கள்
முழுக் கவனத்தைத் திருப்ப வேண்டும்!
இதுவரை கிடைத்த எல்லாமே
உங்கள் ஆற்றலின் பலனன்று
அவை உங்கள் செயல்பாடுகளின்
உன்னத விளைவு
செயல்பாட்டை மேம்படுத்தினால்
சிறப்பான பலன்கள் நிச்சயம்!
இன்றைக்கு நீங்கள்
தக்க வைத்திருப்பவை எவையென
ஆராய்ச்சி தேவையில்லை
உங்களுக்கு விருப்பமானதை
எதிர்காலத்தில் அடைவதற்கு
என்ன செய்ய வேண்டும் என்ற
ஆலோசனையில் இறங்குங்கள்!
வாழ்க்கையை மாற்றியமைக்க
உங்களின் பழைய
பயனற்ற எண்ணங்களை
அடியோடு அப்புறப்படுத்துங்கள்
புத்தம் புதிய சிந்தனைகளை
மனதினுள் நிரப்புங்கள்!
உங்கள் எண்ணங்களுக்கு
நீங்கள் அதிபதியாகி
அவற்றை ஒழுங்குபடுத்தவும்
அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும்
நீங்கள் திறன் பெற்று விட்டால்
உங்களை வெல்ல
உலகில் ஒருவருமில்லை!
— எஸ்.வி. ராஜசேகரன், மதுரை.