திருப்தி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திருப்தி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஜன
2023
08:00

லிபர்ட்டி தியேட்டர் வாசலில், குணாவைப் பார்த்த போது, லாவகமாய் அரிந்த வெள்ளரிப் பிஞ்சின் மீது, சாரலாய் துாவி இருந்த மிளகாய், உப்புத் துாள்களோடு, பேப்பரில் பொதித்து நாசூக்காய் தின்று கொண்டிருந்தான்.

கையசைத்தபடி பக்கத்தில் போய் நிற்க, அவன் முகத்தில் அப்படியொரு பீதி. கைகளை துடைத்துக் கொண்டு நீட்டினான்.

''சொல்லு பாஸ், என்ன ஆளையே காணோம். 'வாட்ஸ் ஆப் குரூப்'ல மட்டும், 'சைலன்ட் மோடில்' இருக்கீங்க. அது சரி, என்னைப் பார்த்ததும் எதுக்கு மிரண்டே?''

''மாசக் கடைசி, நீ, எதுவும் கைமாத்து கேட்டிடக் கூடாதுன்னு தான். பார்த்தேல்ல, அஞ்சு ரூபா வெள்ளரியைத் தின்னு, வெயிலுக்கு சவால் விட்டுட்டு இருக்கேன்.''

''உன்கிட்ட கைமாத்து கேட்கிறதுக்கு, நாலு கழுதையை கட்டி பாடம் எடுத்துட்டு போயிடுவேன்.''

நண்பர்களைச் சந்திப்பது, வெயிலுக்கு வெட்டிவேர் விசிறி போல. அத்தனை கெடுதிகளும், சடுதியில் கையசைத்து, விலகி நிற்கும்.

லிபர்டி தியேட்டரில் ஏதோ தெலுங்கு, 'டப்பிங்' படம் ஓடிக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிதலான புன்னகையோடு பார்த்துக் கொண்டோம்.

''இங்கே தானே நாகர்ஜுனா படம் பார்த்தது. அப்படியே இருக்குடா அத்தனை ஞாபகமும். இங்க வச்சுத்தான், ஷில்பாகிட்ட, 'லவ்'வைச் சொன்னேன்,'' என்று முடித்தபோது, அவன் நாசியில் இருந்து ஒரு ஏக்கப் பெருமூச்சு நழுவ, குறும்பாய் பார்த்தேன்.

''எதுக்கு இத்தனை ஆதங்கப்படறே, குணா. உன் பொண்ணுக்கு, 'டென்த் டியூஷன் மேத்ஸ் மாஸ்டர்' வேணும்ன்னு குரூப்ல போட்டுருந்தியே, கிடைச்சுதா?'' எனக் கேட்டேன்.

நிமிர்ந்து பார்த்து, என்னை முறைத்தான்.

''ரொம்ப முக்கியம், கொஞ்சநேரம் நான் இளமையா சிந்திச்சிற கூடாதே. எங்கிருந்துடா வர்றீங்க நீங்க எல்லாம்...'' என்றவன், பைக்கின் முன்பக்கம் இருந்த பையை திறந்து, ஒரு இன்விடேஷனை எடுத்து, நீட்டினான்.

முகப்பில் மஞ்சள் வைத்திருந்தது.

''சாரிடா மச்சி. இப்படி வழியில பார்த்து இன்விடேஷன் தர்றேன்னு நினைச்சுக்காதே. தேடித் தேடி போய் அழைக்க, சூழ்நிலை இல்லைடா. ஆபிஸ்லயும், 'லீவ்' எடுக்க முடியல. எல்லா வேலைகளையும் நான் தான் பார்க்க வேண்டியிருக்கு. இப்பத்தான், 'ஒர்க் ப்ரம் ஹோம்' முடிஞ்சு, ரெகுலர் ஆகி இருக்கு.''

சிகப்பு அலங்கார கயிற்றில் முடியிட்டு இருந்ததை அவிழ்த்து, கார்டை எடுத்துப் பார்த்தேன்.

'புதுமனை புகுவிழா' வியப்பாய் இருந்தது.

''என்ன மச்சி, சொல்லவே இல்லை.''

''சொல்லக் கூடாதுங்கிறதெல்லாம் இல்லடா. ஓடுற ஓட்டத்துல எதுவும் நினைவில்லை. விட்டுப் போச்சு, பிகு பண்ணாத, குடும்பத்தோட வந்துடு. சிஸ்டர்கிட்ட போன் பண்ணி பேசறேன். 'நேர்ல வரல, முதல் மரியாதை தரல, பரிவட்டம் கட்டலை'ன்னு, சும்மா ஹைதர் காலத்து குற்றப் பத்திரிகை எல்லாம் வாசிக்காதடா. உனக்கு, என் சூழ்நிலை புரியும்.''

அவன் சொன்னதும், ஆத்மார்த்தமாக தலையாட்டினேன்.

புதுமனை புகுவிழா, ஞாயிற்று கிழமை என்பதால், பெரிதாய் சிந்திக்க எதுவுமில்லை. ஒரு நெடும் பயணம். புறநகரில் இருந்தது அவன் கட்டியிருந்த வீடு. இத்தனை தொலைவு என்று தெரிந்திருந்தால், வண்டி, 'புக்' செய்து வந்திருக்கலாம்.

சுமதியும், ஸ்வேதாவும் முணுமுணுத்துக் கொண்டே, பயணத்தை இன்னும் சலிப்பாக்கி வைத்தனர்.

''இவ்வளவு தள்ளியா வந்து வீடு வாங்குவாங்க... பறந்து அடிச்சு வாங்காம, கூடக் கொஞ்சம் சேர்த்து, 'சிட்டி'க்குள்ளேயே பொறுமையா வாங்கியிருக்கலாம்.''

அடுத்தவர் ஆக்கிய சோத்துக்கு வக்கணை சொல்லிக் கொண்டிருந்த சுமதியை, அதிகபட்சமாக என்னால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

அழகான வீடு. தன் அத்தனை யோசனைகளையும் முடிந்தளவு பிட்டு பிட்டு செதுக்கி இருந்தான், குணா. நட்பை நிலைநாட்ட, நண்பர்கள் அத்தனை பேரும் வந்திருந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர், தனியாகவே வந்திருப்பதைப் பார்த்ததும் தான், சும்மா கிடைத்த சுதந்திரத்தை சுமதியின் தலையில் கட்டி, 35 கி.மீ., வண்டியில் இழுத்து வந்திருக்க வேண்டாம் என்று எனக்கும் தோன்றியது.

'ரொம்ப துாரமா இருக்கேடா. தினமும் எப்படி, 'சிட்டி'க்குள்ளே வந்து போவே?' என்றனர், நண்பர்கள்.

''அதுக்கென்ன பார்த்துக்கலாம். இப்பத்தான் மெட்ரோ இருக்கே.''

''ஸ்டேஷனுக்கே ரொம்ப துாரம் இருக்கும் போல இருக்கே.''

''வண்டியில போய், 'பார்க்' பண்ணிட்டு, டிரெயின்ல போக வேண்டியது தான். சரி, எல்லாரும் சாப்பிட வாங்க. சாரங்கபாணி கேட்டரிங், மெனு எல்லாம் பிரமாதம்,'' உற்சாகத்துடன் அழைத்து நகர்ந்தான், குணா.

''வீடு, வெளிச்சமா இருக்கு. அக்கம் பக்கமெல்லாம் வீடு இல்லேல்ல. தனியா இருக்க, நிஜமாவே பயமா இருக்கும்.

''குன்றத்துார் தாண்டி எங்க சித்தப்பா வீடு வாங்கி இருக்கார். ஒருநாள் கூட, வீட்டை பூட்டிட்டு, 'சிட்டி'க்கு வர முடியல. திருட்டு பயம் அதிகம்,'' கணேசன் மனைவி சொல்ல, குணாவின் மனைவிக்கு முகம் லேசாய் கறுத்துப் போனது.

''இப்பல்லாம் தெரியாது. மழை வரட்டும், பத்து நாளைக்கு இடுப்புக்கு மேலே தண்ணி ஓடும். இதெல்லாம், ஏரிகள் இருந்த பகுதியாம். அதனால தான் தண்ணி தேங்குதாம்,'' என, தன் பங்குக்கு ஒரு மணிநேரத்தில் பொது அறிவியல், பூகோளம் படித்து, எதிரில் இருந்தவர்களுக்கு, பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருந்தாள், சுமதி.

குணாவின் மனைவி, இனிப்பை கசப்பாய் மென்று கொண்டிருக்க, எனக்கோ பரிதாபமாக இருந்தது.

வந்திருந்த அத்தனை பேரும் முடிந்தளவு அடுத்தவர் சந்தோஷத்தில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தனர்.

எந்தக் கவலையும் இல்லாமல் பளீரென்று அலைந்து திரிந்து கொண்டிருந்தான், குணா.

சாப்பிட்டு முடித்தவர்களுக்கு தேங்காய் பை தந்து, இன்முகமாய் பேசியதை பார்க்க, மனசிற்கு இதமாகத்தான் இருந்தது.

''என்னடா தம் அடிக்கலாம்னா ஒரு கடை கூட இல்லை,'' என்றான், கணேசன்.

''மெயின் ரோடுக்கு போடா, நிறைய கடை இருக்கு. அப்படியே காலார நடந்த மாதிரியும் இருக்கும். கிராமத்துல, எங்க அய்யா சாப்பிட்டதும், காலார நடந்து போய் வாழைப்பழம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள சாப்பிட்டது, செரிமானம் ஆயிடும்,'' என கூறி, அனுப்பி வைத்தான்.

மழை பார்க்காத புதுத் தரை செக்கச் செவேலென்று சிரித்துக் கொண்டிருந்தது, மொட்டை மாடி.

துாரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கட்டடங்கள் முளைத்துக் கொண்டிருந்தன. சாமியானா கட்டிய மாடி, 'குளுகுளு'வென இருந்தது.

''நீ முன்னமே சொல்லி இருந்தா, தண்டையார்பேட்டை பக்கத்துல, என் சகலை, 'லே - அவுட்' போட்டுருந்தான். அதையே வாங்கித் தந்து இருப்பேன். எல்லாமே கூப்பிடு துாரத்துல இருக்கு,'' திரவமாகி இருந்த ஐஸ்க்ரீமை சொட்டு கூட மிச்சம் வைக்காதபடி தின்று தீர்த்துக் கொண்டிருந்த ராகவன் சொல்ல, குணாவின் கவனம் அங்கேயே திரும்பவில்லை.

''இங்கே இருந்து மூணாவது அவென்யூல இருக்கு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். பெருமாள் எங்க குலதெய்வம். பழனியில இருந்த வரைக்கும், புரட்டாசி வந்துட்டா, கண்ணடி பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, வரும்போது மழையோட தான் வருவோம்.

''சென்னை வந்த பிறகு எல்லாம் மாறிப் போச்சு. இனி, பக்கத்துலயே வந்துட்டோம். தினம் ரெண்டு முறை அவரைப் பார்த்துட்டு வரலாம். மனசுக்கு நிறைவா இருக்கு.'' என்றான், வீசிய காற்றுக்கு கண்களை குறுக்கி.

''பக்கத்துல இறைச்சி மார்க்கெட் கூட இல்ல. மெயின் ரோட்டுக்கு வந்து அங்கிருந்து கொஞ்ச துாரம் நடக்கணும் போல இருக்கு,'' செல்வம் தன் பங்குக்கு சொல்ல, அத்தனை கண்களும், குணாவையே மொய்த்து மீண்டது.

அவன் கன்ன கதுப்பிலேயோ, புருவச் சுளிப்பிலேயோ, நெற்றி நீவுதலிலேயோ, ஒரு பெருமூச்சிலேயோ ஒரு அதிருப்தியை நுகர்ந்து விடும் பெரும் ஆவல் அத்தனை கண்களிலும். தங்களின் அசைவுக்கு கடல் குலுங்க வேண்டும் என்று காத்திருக்கும் படகுகள் போல, காத்திருந்தனர்.

''நடை துாரம் தான் செல்வம். இருந்த இடத்துல இருந்து எல்லாம் நடக்காதுல்ல. இப்பெல்லாம் அவ்வளவு மெனக்கெடவும் தேவையில்லை. அதான், 'ஆன்லைன்' ஆர்டர் இருக்கே பார்த்துக்கலாம். அத்தனையும் ஒரே அழைப்புல வீட்டுக்கு வந்துடுது.

''இன்னும் காம்பவுண்ட் சுவருக்கு பெயின்ட் பண்ணல. சொல்லுங்கடா, என்ன கலர் அடிக்கலாம்?''அவனின் அந்த பேச்சில் நிற்க விரும்பாமல், கடந்து நடந்து கொண்டிருக்க, சப்பென்றானது அவர்களுக்கு. ஓரிரு வார்த்தைகளோடு கீழே இறங்கினர், நண்பர்கள்.

நானும், குணாவும் மட்டும் நின்றிருந்தோம். எனக்கு குணாவைத் தெரியும். இயல்பான மனிதன் தான். இன்றைய இந்த முகம் கொஞ்சம் வேறு விதமாக இருந்தது.

என் பார்வை ஊசி குத்தி, திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.

''என்னடா... என்னைப் போய் இப்படி சைட் அடிக்கறே?''

''தேவைதான்டா எனக்கு. ரொம்ப மாறிட்டேடா,'' என்றேன். அவனின் கோணம் புரிபடாவிட்டாலும், பிடித்திருந்தது.

''பெரிய பின்னணில பிறந்து வளர்ந்தவன் இல்லடா, நான். ஆரம்ப காலம் முழுக்க கூட்டு குடும்பம், திண்ணையில தான் துாக்கம். பிறகு, சென்னை வந்த பிறகு ஒண்டிக் குடித்தனம். படிப்படியா வாழ்க்கை நகர்ந்தாலும், நேத்து வரைக்கும் வாடகை வீடு தான்.

''முதல் முறையா சொந்தமா வீடு வாங்கி இருக்கேன். 40 லட்சம்கிறது, நம் மாதிரியான, 'மிடில் கிளாஸ்'க்கு ரொம்ப பெரிய விஷயம் தான். ஆனால், அதைவிட பெரிய விஷயம் ஒண்ணு இருக்கு, அது என்ன தெரியுமா... நிறைவு!

''அடுத்தவங்க வார்த்தையிலோ, கருத்திலோ அதை நாம அடையவே முடியாதுடா. நாம உணரணும். இத்தனை உழைச்சு அடைஞ்ச நிறைவை, இன்னொருத்தர் வார்த்தைக்காக தொலைச்சா, கடைசி வரைக்கும் நான் அதை தேடிட்டே தான் இருக்கணுமே தவிர, உணர முடியாது,'' என்றவனை வியப்புடன் பார்த்தேன்.

''நாம் சந்தோஷமா இருக்கிறதை நாமதான்டா உணரணும். அடுத்தவங்க கையில அதைக் கொடுத்தால், கடைசி வரைக்கும் நம்மை, அதை உணர விடவே மாட்டாங்க. என் உணர்வுகளைப் பத்தி என்னை விட, வேறு யாருக்கு அக்கறை இருக்கப் போகுது?

''அடுத்தவங்க கருத்தில் எனக்கு மரியாதை இருக்கு. ஆனால், அக்கறை இல்லை. திருமணத்துக்கு போயிட்டு விருந்தையும், மணமக்களையும் விமர்சனம் பண்ணிட்டு வர்றது, என்னை பொறுத்தவரை, ஒரு குரூர செயல்.

''நம் ரசனைக்கு இல்லை, மத்தவங்க வாழ்க்கை. அது அவரவர் சூழ்நிலை, வசதியை பொறுத்தது. எல்லாத்தையும் விட, மற்றவங்க வெற்றிக்குள்ள தோல்விக்கு காத்திருக்கிறதும், மற்றவங்க சந்தோஷத்துக்குள்ளே அதிருப்தியின் அடையாளம் தேடுறதும், இப்போ எல்லாருக்குள்ளயும் மேய்ஞ்சுகிட்டு இருக்கிற கருப்பு ஆடு.

''இத்தனை அதிருப்திக்கும் நடுவே, நம்மை திருப்தியா வச்சுக்க, நம்மை விட்டா, யார் இருக்கா சொல்லு... இந்த வாழ்க்கை, மனைவி, குடும்பம், இப்போ இந்த வீடு எல்லாத்துலயும் சிறு சிறு சஞ்சலங்கள் இருந்தாலும், நான் ரொம்பவே திருப்தியா இருக்கேன்,'' என்று சொல்லி சிரித்தான், குணா.

நான் அவனை இறுக தழுவினேன். குணா, மாறி இருப்பதை உணர்ந்தேன். படிக்காமலே முதன்முறையாக ஒரு வாழ்க்கை பாடம் கற்று, திரும்பினேன்.
எஸ். பர்வின் பானு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X