எண்ணெய் வித்து பயிர்களில் முக்கியமானது ஆமணக்கு. இந்தியாவில் 11.48 லட்சம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலும் ஊடுபயிராகவும் வரப்பு பயிராகவும் பயிரிடப்படுகிறது. தற்போது பயிரிடப்படும் ரகங்கள் நீண்ட கால வயது உடையவை. எனவே முறையான களை மேலாண்மை, ஊட்டச்சத்து, பூச்சி, நோய் தாக்குதல் மேலாண்மை செய்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.
மண் பரிசோதனை அடிப்படையில் ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரம் இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால் மானாவாரி ரகங்களுக்கு ஒரு எக்டேருக்கு 45 கிலோ தழை, தலா 15 கிலோ மணி, சாம்பல் சத்து இடவேண்டும். கலப்பினம் மற்றும் இறவை ரகங்களுக்கு 60 கிலோ தழை, தலா 30 கிலோ மணி, சாம்பல் சத்தும் இடவேண்டும்.
500 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் 'ப்ளுக்ளோரலின்' கலந்து ஒரு எக்டேர் பரப்பு செடியில், களைகள் முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைநட்ட 20வது, 40வது நாட்களில் கையால் களை எடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் மேலாண்மையை முறையாக கையாண்டால் மகசூல் பாதிக்காது. ஆமணக்கு சுருள் பூச்சியின் புழு சிறியதாக ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த புழு இலையை உண்பதால் இலைகள் காய்ந்து கீழே விழுந்து விடும். வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி 'ட்ரைக்கோபோஸ்' மருந்தை கலந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
ஆமணக்கு காவடி புழுவின் தலை கருமையாக இருக்கும். இலையை உண்ணும். 5 சதவீத வேப்பங்கொட்டைச்சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 0.4 கிராம் பைரோனில் கலந்து தெளிக்க வேண்டும்.
வாடல்நோய் தாக்கியிருந்தால் இலைகள் மடங்கியும் தொங்கியும் நுனியில் மட்டும் இலை இருக்கும். செடிகள் வாடியும், தண்டு பகுதியை பிடித்து பார்த்தால் பழுப்பு நிறத்திலும் வெண்மையான பூஞ்சாண வளர்ச்சியும் காணப்படும். 2.5 கிலோ 'டிரைக்கோடெர்மா விரிடி' மருந்தை தொழுஉரத்துடன் கலந்து 15 நாட்கள் மூடிவைத்தால் நுண்ணுயிரிகள் பெருகிவிடும். இதை இரண்டு பாத்திக்கு நடுவில் துாவினால் நோய் பாதிப்பை குறைக்கலாம்.
நாற்று கருகல் நோயால் தாக்கப்பட்ட நாற்றுகள் இறந்துவிடும். இலையின் இரண்டு பக்கத்திலும் வெளிர்பச்சை நிறத்தில் திட்டு திட்டாக பரவி இலையின் காம்பு வரை நீண்டு காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். ஈரப்பதமான நிலையில் வெள்ளைநிற பூஞ்சாணம் இலையின் அடிப்புறத்தில் காணப்படும். இந்த நோயை கட்டுப்படுத்த நீர்தேங்கும் பகுதிகளில் சிறப்பான வடிகால் வசதி செய்ய வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
- மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு), அருண்ராஜ், சபரிநாதன், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர், வேளாண் அறிவியல் மையம், தேனி. 96776 61410