பாதுகாவலராக, கதைசொல்லியாக, தோழியாக, ஆசிரியையாக, அம்மா வாக... சென்னை ராமாபுரம், 'லிட்டில் பம்ப்கின்' பள்ளி ஆசிரியை மதியரசி சுரேஷ்; உதிர்க்கும் ஒவ்வொரு வார்த் தையிலும் அவ்வளவு பரவசம்!
அழகுகளின் அறிவு
'கடல் உயிரிகளை வரையுங்க'ன்னு ஒருநாள் சொன்னேன். 'எம்' வடிவம் வர்ற மாதிரி பேப்பர்ல கோடுகள் மட்டும் போட்டுட்டு ஒரு பொண்ணு வந்து நீட்டினா; 'இது சுறாவோட பல்லு; சுறா பெருசா இருக்குறதால பேப்பர்ல வரைய முடியலை மிஸ்'னு கொஞ்சி கொஞ்சி சொல்லிட்டு, என்கிட்டே 'ஸ்டார்' வாங்கிட்டுப் போயிட்டா!
இன்னொரு பொடியன் 'எக்ஸ்' போட்டிருந்தான்; 'இதுவும் சுறாதான் மிஸ்... தண்ணியில தலைகீழா போறதால வால் மட்டும் மேல தெரியுது'ன்னான்; சிரிச்சுக்கிட்டே அவனுக்கும் ஸ்டார் போட்டுட்டேன். குழந்தைகளோட உலகத்தை எப்பவுமே நான் தொந்தரவு பண்றதில்லை!
குழந்தைகளோட உளவியல் என்ன?
'ஸாரி சொல்ல முடியாது'ன்னு பிடிவாதமா இருந்தான் ஒரு குறும்பன்; இரண்டு நாள் முகம் கொடுத்துப் பேசலை. நானா போய் பேசினேன்; உடனே என்னை கட்டிப் பிடிச்சுட்டு, 'நான் ஸாரி சொல்லவா?'ன்னு கேட்டான். 'மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது'ன்னு வீட்டுல யாரோ பேசினதுதான் அவன் பிடிவாதத்துக்கு காரணம்னு புரிஞ்சது. 'ப்ளீஸ், தேங்க்ஸ், ஸாரி... சொல்லத் தயங்கக் கூடாது'ன்னு புரிய வைச்சேன். இப்போ, நிறைய 'தேங்க்ஸ்' சொல்றான்!
அழகழகாய்... ஆனந்தமாய்...
* 'தரையில் பயணிக்கும் வாகனங்கள் எதெல்லாம்'னு கேட்டா, 'விமானம்'னு ஓடுபாதையில நகர்ற விமானத்தை காமிக்கிற மனசு!
* 'விலங்குகளுக்குப் பேசத் தெரியாது'ன்னு சொன்னா, 'அதெல்லாம் தெரியும்; நமக்குத்தான் புரியாது'ன்னு எதிர்க்கிற அறிவுக் குறும்பு!
* 'பேசக்கூடாது'ன்னு உதடு மேல விரல் வைச்சு காட்டுற பெரியவங்க மாதிரியே இன்னொரு குழந்தையை செல்லமா மிரட்டுற நடிப்பு!
* தன்னோட கண்ணீர் அப்போதான் காய்ஞ்சிருந்தாலும் அடுத்த குழந்தையோட அழுகைக்கு ஆறுதல் சொல்ற அழகு...
உண்மையைச் சொல்றேன்... குழந்தைகளோட செலவழிக்கிற நேரம்... வரம்!
இன்றைய குழந்தைகளுக்கான சூழல் எப்படியிருக்கு?
குழந்தைகள் இந்த சமூகத்தை பார்த்துதான் எல்லாத்தையும் கத்துக்கிறாங்க; ஆனா, கத்துக்கொடுக்கிற இடத்துல இருக்குற சமூகம் சீரழிஞ்சு கிடக்கிறதா உணர்றேன்! தன் தவறுகளை சுயமா கண்டுபிடிக்கத் தெரியாத, திருத்திக்க விரும்பாத கூட்டம் இங்கே அதிகமாயிருச்சு; குழந்தைகளோட ஆரோக்கிய வளர்ச்சியை தடுக்குற இந்த சூழல் மாறணும்; அந்த மாற்றம் நம்மகிட்டே இருந்து துவங்கணும்.
பெற்றோருக்கு செல்லமா ஒரு குட்டு!
'அப்பா பிடிக்குமா... அம்மா பிடிக்குமா?' - இந்த கேள்விதான் வெறுப்புக்கான முதல் விதைன்னு உணர்ந்திருக்கீங்களா?