பருத்தி பயிரிட பல பருவம் இருந்தாலும் கோடை இறவையான மாசி, - பங்குனி (பிப்ரவரி-, மார்ச்) சாகுபடிக்கு ஏற்ற பருவமே. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இறவை பயிராக எம்.சி.யு., 5, எஸ்.பி.பி.ஆர்.,2, 4, சுரபி ரகங்களை பயிரிடலாம். பயிரிடும் முன்பாக விதைகளை நேர்த்தி செய்து விதைத்தால் அதிக மகசூல் பெற முடியும்.
அமிலநேர்த்தி செய்யும் முறை
உலோக பாத்திரத்தில் அமிலநேர்த்தி செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பக்கெட்டில் ஒரு கிலோ விதையை இட்டு 70 சதவீத வணிக கந்தக அமிலத்தை 100 மில்லி சேர்க்க வேண்டும். மரக்குச்சியால் 4 நிமிடங்கள் விதையுடன் அமிலம் சேருமாறு கலக்கவேண்டும். இதன் மூலம் மேற்பரப்பில் உள்ள துாசி, பூச்சி, முட்டை, நோய்க்கிருமி அழிக்கப்பட்டு விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. மற்றொரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அமிலநேர்த்தி செய்த விதைகளை சேர்த்து கழுவி நிழலில் உலர்த்தி விதைகளை பாதுகாக்க வேண்டும்.
ஒரு எக்டேர் விதைப்பிற்கு பஞ்சு நீக்கியிருந்தால் 7.5 கிலோவும், பஞ்சு நீக்காமல் இருந்தால் 15 கிலோ விதைகள் தேவைப்படும். உளுந்து, பாசிப்பயறு ஊடுபயிராக பயிரிட எக்டேருக்கு 12.5 கிலோ, தட்டைப்பயறாக இருந்தால் 7.5 கிலோ போதும். சீரான வளர்ச்சியுடைய செடிகளைப் பெற தரமான விதைகளை விதைக்க வேண்டும்.
விதைநேர்த்தி செய்யலாம்
பஞ்சு நீக்கிய பருத்தி விதை ஒரு கிலோவிற்கு 2 கிராம் 'ட்ரைகோடெர்மா விரிடி' கலந்த உடனே விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான பஞ்சு நீக்கிய பருத்திவிதை உடன் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 50 மில்லி, பாஸ்போபாக்டீரியா 50 மில்லி கலந்தோ அல்லது அசோபாஸ் மட்டும் 50 மில்லி உடன் விதைநேர்த்தி செய்தும் விதைக்கலாம். ஒரு சதவீத புங்க இலைச்சாறில் அதே அளவு விதைகளை ஊற வைத்து கடினப்படுத்தியும் விதைக்கலாம்.
இரட்டை வரிசை முறையில் சால்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டு, இரு பக்கங்களிலும் விதைகள் நட்டு, தண்ணீர் கட்டினால் 2 வரிசை செடிகளும் தண்ணீர் பெறும். ஒரு வரிசையில் பருத்தி (90 செ.மீ., இடைவெளி) அடுத்த 3 வரிசைக்கு ஊடுபயிராக பயறுவகைகளை பயிர் செய்யலாம்.
ரக பருத்திக்கு 65 சதவீதம், வீரிய பருத்தியின் முளைப்புத்திறன் 75 சதவீதம், 98 சதவீத சுத்தத் தன்மை, 10 சதவீத ஈரப்பதம் தேவை. விதைப்பதற்கு முன், விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி விதையின் முளைப்புத்திறன், தரத்தை பரிசோதனை செய்வது அவசியம்.
மகாலட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர்
கமலாராணி, ராமலட்சுமி, வேளாண் அலுவலர்கள்
விதைப்பரிசோதனை நிலையம்
நாகமலை புதுக்கோட்டை, மதுரை.
0452 - 245 8773