தஞ்சாவூர் மாவட்டம், திருப்புறம்பியம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1973ல் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். கணிதம், ஆங்கில பாடங்கள் நடத்துவேன். கிராமங்களில் இருந்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் வகுப்புக்கு வருவர்.
முடி திருத்தி, அன்றாடம் குளித்து, சுத்தமாக உடை அணிந்து, தன் சுத்தம் பேண வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. இதை வலியுறுத்த அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வேன். குமரி மாவட்ட தமிழ் மொழிநடையில் அறிவுரைப்பேன். அதை விரும்பி கேட்பர்.
தொடர் முயற்சியால் பள்ளிக்கு வரும் சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் மாறினர். நடை, உடை, பாவனை மற்றும் தோரணையே மாறிவிட்டது. தன் சுத்தம் பேணுவதில் ஆர்வம் காட்டினர். கற்கும் திறன் வளர்ந்தது.
பின், கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கு மாற்றலாகி சென்றேன். அங்கு பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 'ஹிப்பி' போல முடியை நீளமாக வளர்த்து இருந்தனர்.
ஒருநாள் காலை இறை வணக்க கூட்டத்தில் அது போன்ற மாணவர்களை தனியாக நிறுத்தி, 'முடியை திருத்தி வர வேண்டும்...' என கண்டிப்புடன் உத்தரவிட்டார் தலைமை ஆசிரியர்.
மறுநாள், மொட்டையடித்து வந்தனர். இது தொடர்பாக பெரும் பிரச்னையும், விவாதமும் ஏற்பட்டது. பெற்றோருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது, என் வயது, 88; அறிவுரை சொல்வதில் உள்ள வரைமுறையை இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த அனுபவங்களை அசை போட்டபடி வாழ்ந்து வருகிறேன்.
- முத்து கிருஷ்ணன், நாகர்கோவில்.தொடர்புக்கு: 94898 19656