மதுரை மாவட்டம், சோழவந்தான், ராணி மங்கம்மாள் நடுநிலைப் பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
வகுப்பில் ஆர்.கிருஷ்ண மூர்த்தியும், எஸ்.கண்ணனும் நன்றாக படிப்பவர்கள். பாடங்களில் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பர்.
முழு ஆண்டு தேர்வுக்கு, சில நாட்களே இருந்த போது நோட்டு புத்தகத்தில், 'ஆர்.கே.கே.,' என்றும், 'எஸ்.கே.எஸ்.,' என இருவரும் எழுதியிருந்தனர். அது, அந்த மாணவர்கள் பெயரின் முதல் எழுத்துக்களுடன், இரண்டு மாணவியர் பெயரின் முதல் எழுத்துக்களும் அடங்கியுள்ளதாக பரவியது.
இந்த தகவல் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன் கவனத்துக்கு சென்றது. என்னை அழைத்து, 'என்ன எழுதினாங்கன்னு நடந்ததை சரியா சொல்லணும்...' என அதட்டி விசாரித்தார்.
சற்றும் யோசிக்காமல், 'ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயருடன் உள்ள, 'கே' என்ற எழுத்து, கிருஷ்ண பக்தன் என்பதன் சுருக்கமாம். அது போல், கே.கண்ணன் பெயருடன் எழுதியுள்ள, 'எஸ்' என்ற எழுத்து, சிவபக்தன் என்பதன் சுருக்கமாம் ஐயா...' என்றேன்.
விசாரணையை முடித்து, 'சரி... பாடத்தில் மட்டும் தான், கவனம் செலுத்தணும். இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது...' என அறிவுரைத்து அனுப்பினார்.
தற்போது, என் வயது 70; அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அன்று தலைமை ஆசிரியரிடம் சமயோசிதமாக விளக்கியதால், சக மாணவர்கள் காப்பாற்றப்பட்டது மன கண்ணில் நிற்கிறது.
- கு.கணேசன், மதுரை.