வேலை எதுவாக இருந்தாலும், முழுமையாக செய்து முடிக்க மாட்டாள், வெண்ணிலா.
'எத்தனை முறை சொல்றது, சற்று காது கொடுத்து கேட்குறியா நீ; எப்போதான் திருத்திக்க போறீயோ; ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா...' என்றாள் அம்மா.
கொஞ்சமும் காது கொடுக்காமல், 'அம்மா, எப்போதும் போல் எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க' என்று நினைத்தாள் வெண்ணிலா.
பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றது. அந்த ஓட்டுனர் இரண்டாவது முறை அழைத்த பின் நோட்டில் கிறுக்கியபடி, 'கடைசி கணக்கு, நேத்து செய்ய முடியல...' என சிரிப்பாள்.
மதிய உணவு கொடுத்து அனுப்பினால் சாப்பிடாமல் திருப்பி எடுத்து வருவாள்.
'ஏன்டி... முழுசா சாப்பிடாமா, எப்போ பார்த்தாலும் பாதியை எடுத்துட்டு வர...'
வருத்தம் பொங்க கேட்டாள் அம்மா.
'கொஞ்சம் தானம்மா...'
கொஞ்சினாள் வெண்ணிலா.
ஒரு நாள் -
வெண்ணிலாவுக்கு, கடுமையான காய்ச்சல். மருத்துவரிடம் அழைத்து சென்றாள் அம்மா. பரிசோதித்து, ஊசி போட்டார்; மருந்து தந்தார்.
'எழுதி தர்ர மருந்தை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடணும்; பாதியில் நிறுத்திடாதீங்க...' என அறிவுரைத்து அனுப்பினார் மருத்துவர்.
அன்று ஓய்வு எடுத்தாள்.
மருத்துவர் தந்த மாத்திரையை இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டதும், 'எனக்கு, முக்கால்வாசி சரியாயிடுச்சு...' என்று குதித்தாள்.
மறுநாள் -
ஒரு வேளை மட்டும் மாத்திரை சாப்பிட்டாள்.
நான்காம் நாள் இரவு, மீண்டும் காய்ச்சல் ஆரம்பித்தது.
மருத்துவரிடம் ஓடினாள் அம்மா.
மருத்துவர், 'எந்த வியாதி வந்தாலும், முழுதும் தீரும் வரை மருந்தை முழுமையா பயன்படுத்தணும். இடையில் நிறுத்தினா, திரும்ப வரக்கூடிய வாய்ப்பிருக்கு; அதனால், பரிந்துரைக்கிறபடி, தொடர்ந்து மருந்து சாப்பிடணும்...' என்றார்.
'என்ன வெண்ணிலா புரிஞ்சுதா...'
அர்த்தத்துடன் கேட்டாள் அம்மா.
ஒப்புக் கொள்வதாக தலையாட்டினாள்.
குழந்தைகளே... எந்த செயலையும், ஆர்வத்துடன் முழுமையாக செய்து முடிக்க வேண்டும்; பின்னர் செய்யலாம் என்று தள்ளிப் போடுவதை கைவிடுங்கள்!
- சகா